Tuesday, May 3, 2016

நன்மைகளை அழிக்கும் நெருப்பு!

பொறாமை' மனிதனை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு கொடிய மன வியாதியாகும். இது நிம்மதியைக் கெடுத்துவிடும். அமைதியைக் குலைத்துவிடும். பொறாமையினால் சமூகம் பல அவலங்களை அனுபவித்து வருகிறது. எனவேதான் இஸ்லாம் பொறாமை குணத்தை வன்மையாகக் கண்டிக்கின்றது.

பொறாமைக்காரன் பிறரது இன்பத்தைக் கண்டு மனம் புழுங்குவான். பிறர் துன்பப்படும்போது இவன் இன்பமடைவான்.

""உங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு துன்பத்தை உண்டாக்குகிறது. உங்களுக்கு தீமை ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்" (அல்குர்ஆன் 3:119-120) என இறைமறை பொறாமைக்காரர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது.

இவ்வுலகில் இறைவன் ஒரு சிலருக்கு வழங்கியுள்ள செல்வம், கல்வி, அழகு, ஆற்றல் போன்றவற்றை தான் பெறவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையினாலும், ஆற்றாமை உணர்வினாலும் உண்டாவதுதான் பொறாமை உணர்வாகும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளைப் பார்த்து அது அவனிடம் இல்லாமல் போக வேண்டும் என்று நினைப்பதே பொறாமையாகும். இன்னும் பொறாமைக்காரன் தனக்குக் கிடைக்காதது வேறு எவருக்கும் கிடைக்கக்கூடாது எனும் கீழ்த்தரமான உணர்வுடன் செயல்படுவான்.

""கோபமும், பொறாமையும் மார்க்கத்தைப் பாழ்படுத்தும் நாசினிகள்" என்றனர் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள்.

பொறாமையும், ஈமான் என்ற இறை நம்பிக்கையும் முற்றிலும் மாறுபட்ட இரு அம்சங்களாகும். பொறாமை, உள்ளத்தை ஆக்ரமிக்க ஆக்ரமிக்க ஈமான் என்ற இறை நம்பிக்கை அவன் உள்ளத்தை விட்டு விலகிக் கொண்டே இருக்கும். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள், ""ஒரு அடியானின் உள்ளத்தில் பொறாமையும், ஈமானும் ஒன்று சேராது" என்று குறிப்பிட்டார்கள்.
பொறாமைக்காரன் எப்போதும் எரிச்சலுடன் காணப்படுவான். அவன் உள்ளத்தில் இரக்க குணம் குறையும், பாசம் நீங்கும். எவர் எதைப் பேசினாலும் எரிந்து விழுவான். கோபத்தையும் மனக்கொதிப்பையும் அடக்க முடியாமல் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் கூட கடுமையாக நடந்து கொள்வான்.

இதனால் தான் பொறாமைக்காரர்களைப் பார்த்து "" உங்கள் கோபத்தாலேயே நீங்கள் நாசமாகுங்கள்" என்று கூறுமாறு அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.
பிறர் மீது நாம் கொள்கின்ற பகைமையுணர்வு, கோபம், கர்வம், தலைக்கனம், போட்டி மனப்பான்மை மற்றும் மிதமிஞ்சிய சுயநலன் போன்றவையும், மனிதனின் உள்ளத்தில் பொறாமையைத் தோற்றுவிக்கின்றன. எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ""கோபமும், குரோதமும், பொறாமையும் அழிந்து போகட்டும்" என்றார்.

பொறாமையால் சமூகத்தில் பாவங்கள் பரவுகின்றன. பொறாமைக்காரன் தனது எதிரியைப் பற்றிப் பொய் சொல்வான். அவனைப் பற்றி துருவித் துருவி ஆராய்வான். அவதூறுகளைப் பரப்புவான். புறம் பேசுவான். ஏன்? கொலைகூட செய்ய முயற்சிப்பான். இவ்வாறு பொறாமை ஒரு மனிதனிடம் எண்ணற்ற பாவங்களை உருவாக்குகின்றது. காலப்போக்கில் அவன் மிருகம் போன்றே நடக்க ஆரம்பித்துவிடுவான். எனவேதான் அல்லாஹ் தன் அருள்மறையில் ""பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது ஏற்படும் தீங்கை விட்டும் பாதுகாப்பாயாக" (அல்குர்ஆன்:113:5) என தன்னிடம் பாதுகாவல் தேடுமாறு பணிக்கின்றான்.

மனிதனை பாவங்களின் உறைவிடமாக மிருகமாக மாற்றிவிடும் பொறாமை குணத்தை ஒழித்துவிட வேண்டும். ""பொறாமை குணம் நாம் செய்த நன்மைகளை எல்லாம் அழிக்கும் நெருப்பு போன்றது" என்றனர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். எனவே மனிதனின் அழிவுக்கு காரணமான, நமது நல்லறங்களை எல்லாம் நாசமாக்குகின்ற பொறாமை என்ற தீய குணத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வோமாக! இறைவன் அதற்கு அருள்புரிவானாக!

http://pettagum.blogspot.in/2014/07/blog-post_4034.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: