Monday, November 15, 2010

ஐந்து நிமிடத்தில் முடிந்துவிடும்


என் பேரு ராஜேஸ், நான் ஒரு நிறுவனத்தின் வர்த்தக பிரிவில் மேலாளராக உள்ளேன்.நான் ஏன் இந்த முடிவெடுத்தேன்னு தெரியல, என்னோட கதை இன்னும் ஐந்து நிமிடத்தில் முடிந்துவிடும். அதுக்குள்ள என் கதையை உங்க கிட்ட சொல்லிடுறேன்

நேத்து நல்ல மழை,இன்றும் தான். வழக்கம் போல அலுவலகம் செல்ல என்னுடைய இரு சக்கர வாகனத்தை இயக்கி வெளியே வந்து பார்த்தால் ஒரே சேறும் சகதியுமாக சாலை. வண்டியை கீழிறக்க மனமில்லாததால் அதனுடைய இருப்பிடத்திலே விட்டு விட்டு குடையோடு பேருந்து நிறுத்தம் சென்றேன். என் அலுவலக பேருந்து வரும் வரை காத்திருக்க மனமில்லாமல் ஒரு அரசு பேருந்தில் ஏறினேன். 

அங்கே தான் பார்த்தேன் அந்த தேவதையை, என்ன ஒரு அழகு இன்று பெய்த மழையில் பளிச்சென சிரிக்கும் ரோஜா(சினிமா நடிகை அல்ல)வினைப்போல இருந்தாள். மழைக்கொரு நன்றியை மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். 

முன் பக்கமாக நின்று கொண்டு பின்பக்கமாக நின்ற என்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள், எனக்கே கூச்சமாகிவிட்டது என்றால் பாருங்களேன். சிரிப்பதும் , சைகை காட்டுவதுமாக தொடர்ந்தாள். அருகில் இருக்கும் பாப்பாவின் கண்ணத்தை கிள்ளி முத்தமிட்டுக்கொண்டே என்னைப்பார்த்தாள் பாருங்களேன் அந்த பார்வையிலே நான் அவளின் மேல் காதல் கொண்டேன். 

சிறிது நேரத்திலே என்னை நிறைய முறை உற்றுப்பார்த்துவிட்டாள், அவள் ஏதும் மனநிலை தவறியவளோ என்று பார்த்தால் அப்படி கூட தெரியவில்லை. எனக்கு சைகை காட்ட கொஞ்சம் கூச்சமாக இருந்தது. 

இன்னும் இரண்டு நிறுத்தங்களுக்கு அப்புறம் என் நிறுத்தம் வந்துவிடும் அதற்குள் எப்படியாவது தொடர்புகொள் என்று என் உள் மனது சொல்லியது. ஆனாலும் பாழாய்போன தயக்க குணம் அமைதி அமைதி என்று அடக்கியது.

என் நிறுத்தம் வரவும் நான் இறங்க முயற்சி செய்து அவளை பார்த்துக்கொண்டே இறங்கினேன் என்ன ஒரு அதிர்ஷ்டமான நிகழ்வு அவளும் இறங்கினாள். இறங்க சொல்லி சைகை காட்டிக்கொண்டே. 

எக்ஸ்க்யூஸ்மீ கொஞ்சம் வேகமா இறங்குறீங்களானு ஒருத்தன் என்னை துரிதப்படுத்தி இறங்கினான். கீழே இறங்கியதும் என்னை நோக்கி வந்தவள் நேராஅந்த எக்ஸ்க்யூஸ்மீ ஆளிடம் சென்று கைகோர்த்து சென்றுவிட்டாள். அட மழையும் நின்றுவிட்டது.

இம்புட்டு நேரம் சிரித்தது சைகை செய்தது எல்லாம் எக்ஸ்க்யூஸ்மியை பார்த்தா....புஸ்ஸூனு போச்சுங்க‌

இது தான் என் கதை ஐந்து நிமிசத்தில் வாசித்து முடிச்சாச்சா....? சொன்ன வாக்கை காப்பாத்திட்டேன்ல .


சும்மா முயற்சி செய்தேன் ஆனாலும் நான் எதிர்பார்த்த நடை வரல இன்னும் முயற்சிப்பேன்(யாரோ மௌசை தூக்கி எறிய போறது தெரியுது)

No comments: