போலிப்பத்திரம்!
ஊருக்கு அவுட்டரில் தான் வாங்கிய மனையைப் பார்க்க வந்த பாலமுருகனுக்கு பயங்கர அதிர்ச்சி! அங்கே யாரோ மளமளவென வீடுகட்டிக்கொண்டிருந்தால் அதிர்ச்சியாக இருக்காதா என்ன! பதறியடித்து யார் கட்டுவது என்று விசாரித்து அந்த நபரைப் போய்ப் பார்த்தார். அவரோ பதினெட்டு வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் லே-அவுட் போட்டபோதே நிலத்தை வாங்கிவிட்டதாகச் சொல்லி அடுத்த கிலியைக் கிளப்பினார். பாலமுருகனிடம் இடத்தை விற்றவர் பெயரும் லஷ்மணன்தான். தற்போது வீட்டைக் கட்டிக்கொண்டிருப்பவர் பெயரும் அதுவேதான். மண்டைக்குள் அலாரம் அடிக்க, அங்கிருந்து விழுந்தடித்து வீட்டுக்கு ஓடினார். தன்னிடமிருந்த பத்திரங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு வீடு கட்டிக்கொண்டிருந்தவரைப் போய் மீண்டும் பார்த்தார். பத்திரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தலைசுற்றியது.
பாலமுருகனின் தாய்ப் பத்திரமும், வீடுகட்டிக்கொண்டிருந்த லஷ்மணனின் கிரயப் பத்திரமும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அச்சு அசலாக அப்படியே இருந்தது. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்தபோதுதான் லஷ்மணனின் கையெழுத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. அடுத்ததாக முத்திரைதாளிலுள்ள எண் வேறு வேறாக இருந்தது. அடுத்த கட்டமாக வக்கீலிடம் போய் இரண்டு பத்திரங்களையும் காட்டியபோதுதான் தெரியவந்தது பாலமுருகனிடம் இருந்தது போலிப் பத்திரம் என்பது!
நடந்தது என்னவென்றால் போலிப் பத்திரம் மூலம் புரோக்கர்கள் மனையை பாலமுருகனுக்கு விற்றிருக்கிறார்கள். பாவம்!
ஏமாறாமல் இருப்பது எப்படி?
மனை அல்லது சொத்தை வாங்கும்போது அதற்குரிய பத்திரம் உண்மையானதுதானா என்பதை அறிந்துகொள்ள, சார் பதிவாளர் அலுவலத்தில் 'சான்று அளிக்கப்பட்ட பிரதி'யை (Certified Copy) விண்ணப்பித்து வாங்கி ஒப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டும். இதற்கான செலவு 200 ரூபாய்தான்.
ஒத்தியில் ஓராயிரம் பிரச்னை!
பாலமுருகன் தான் வாங்கிய மனையில் வேறொருத்தர் வீடு கட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியானார் என்றால், தங்கராஜ் அதிர்ந்து போனது ஒரு நோட்டீஸைப் பார்த்து!
மாதாமாதம் வாடகை கொடுத்து இருப்பதைவிட ஒத்திக்கு வீடு கிடைத்தால் நன்றாக இருக்குமே; வாடகைப் பணமாவது மிச்சமாகுமே என்று அலைந்து திரிந்து ஒரு வீட்டைப் பிடித்தார் தங்கராஜ். மூன்று லட்ச ரூபாய்; மூன்று ஆண்டு ஒத்தி என அக்ரிமென்ட் போட்டு புதிய வீட்டில் குடியேறினார்.
குடியேறி ஐந்தாறு மாதங்கள்தான் ஆகியிருக்கும்... திடுதிப்பென வந்த சிலர், 'தாங்கள் வங்கியிலிருந்து வந்திருப்பதாகவும் வீட்டின் ஓனர் வீட்டு மதிப்பை அதிகமாகக் காட்டி கடன் வாங்கிவிட்டு கம்பி நீட்டிவிட்டதாகவும், உடனே வீட்டைக் காலி செய்யவேண்டும்' என்றும் இனிமா கொடுத்தனர்!
தடுமாறிப்போன தங்கராஜ், 'தான் ஒத்திப் பணம் கொடுத்திருப்பதால் அந்த மூன்று லட்சத்தைக் கொடுத்தால்தான் வீட்டைக் காலி செய்யமுடியும்!' என்று எவ்வளவோ வாதாடிப்பார்த்தார். 'வீடு அடமானத்தில் இருக்கும்போது ஒத்தி செல்லாது!' என்று ஒரே போடாகப் போட்டுவிட்டது வங்கி!
ஏமாறாமல் இருப்பது எப்படி?
ஒத்திக்கான அக்ரிமென்ட் எழுதும் முன்பு ஒரிஜினல் வீட்டுப் பத்திரத்தை காட்டச் சொல்லவேண்டும். அப்போது வீட்டு உரிமையாளர் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறாரா இல்லையா என்பது தெரிந்துவிடும். ஒத்திக்குப் பின் வீட்டை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்தால் ஒத்திக்குப் பணம் கொடுத்தவர் அந்த ஒத்திக்கான அக்ரிமென்ட்டை பதிவு செய்திருக்கும்பட்சத்தில் வங்கி வீட்டை எடுத்துக்கொண்டால் ஒத்தி பணத்தை வங்கி கொடுக்க முன்வரும். அக்ரிமென்டை பதிவு செய்யவில்லை என்றால் பணம் கிடைக்காது.
பழி வாங்கிய பங்கு!
கண்ணப்பனுக்கு எப்படியாவது ஒரு வீட்டை வாங்கிவிடவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. அதற்கேற்றார்போல ஒரு வீடு விலைக்கு வரவும், அதை வாங்க முடிவு செய்தார். வீட்டின் உரிமையாளர் இறந்துபோய்விட்டதால் அவருடைய மனைவி மற்றும் மூன்று மகன்கள் கையெழுத்துப் போட... சொத்தைப் பதிவுசெய்து வாங்கிவிட்டார். வாங்கிய கையோடு கொஞ்சம் செலவு செய்து வீட்டை சரிபண்ணி, குடிபுகுந்துவிட்டார்.
ஆனால், ஒன்றரை ஆண்டுகள் கழித்து ஒரு பெண் மூலம் அவருக்கு சிக்கல் வந்தது. அந்தப் பெண், 'கண்ணப்பன் வாங்கிய வீட்டின் உரிமையாளருடைய மூத்த மகள் என்றும், தனக்குத் தெரியாமல் மற்றவர்கள் ஒன்றுசேர்ந்து வீட்டை விற்றுவிட்டார்கள் என்றும், தன் பங்காக 5 லட்ச ரூபாய் தரவேண்டும்' என்றும் குண்டைத் தூக்கிப் போட்டார். 'வீட்டுக்கான சரியான விலை என்னவோ அதைக் கொடுத்துவிட்டேன், உங்களுக்கு வேண்டுமென்றால் விற்றவர்களிடம் போய் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த வீட்டுக்கு இதற்கு மேல் ஒரு நயாபைசா கூடத் தரமுடியாது!' என்று கண்ணப்பன் சொல்லிவிட்டார். ஆனால், அந்தப் பெண் இதற்கெல்லாம் அசருவதாக இல்லை! கோர்ட்டில் சந்தித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
பயந்துபோன கண்ணப்பன் தெரிந்த வக்கீலைப் போய்ப் பார்க்க, அவரோ, 'அந்தப் பெண் கேட்பதைக் கொடுப்பதைத் தவிர வேறுவழியில்லை. அப்பெண்ணிடம் பேரம் பேசி தொகையை வேண்டுமானால் குறைக்கப் பாருங்கள்!' என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் கையில் காலில் விழுந்து மூன்று லட்ச ரூபாய்க்குச் சம்மதிக்க வைத்து சிக்கலிலிருந்து வெளியே வந்தார் இப்போதெல்லாம் அவரைத் தேடி யாராவது ஒரு பெண் வருகிறார் என்றால் அவ்வளவுதான், அலறிப் புடைத்து ஓட்டமெடுத்துவிடுகிறார்!
ஏமாறாமல் இருப்பது எப்படி?
ஒரு சொத்தை வாங்குவது என்று முடிவு எடுத்துவிட்டால் அக்கம்பக்கத்தில் அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர் என்று விசாரிப்பது அவசியம். அதுவும் சொத்து யார் பெயரில் இருக்கிறதோ அவர் இறந்துவிட்டால், வாரிசுகள் விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம்மூரில் பொதுவாக சொத்தின் வாரிசுகளாக மகன்களை மட்டும்தான் காட்டுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் சட்டப்படி சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை இருக்கிறது. பெண்கள், பத்திரப் பதிவு முடிந்தபிறகு 12 ஆண்டுகளுக்குள் எப்போது உரிமை கோரினாலும் அவர்களுக்குப் பங்கு கொடுத்தே ஆகவேண்டும்.
ஒரு பூட்டு இரண்டு வீடு!
கன்னியப்பன் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை இப்படி மெயினான இடத்தில் தனக்கு வீடு கிடைக்கும் என்று. பத்து சென்ட் இடம்... அந்த இடத்தில் அதன் உரிமையாளர் ஓர் ஒதுக்குப்புறமாக 700 ச.அடியில் வீடு கட்டியிருந்தார். மொத்த இடத்தை இரண்டாகப் பிரித்து விற்க சம்மதித்தார். விலையும் நியாயமாக இருக்கவே, கன்னியப்பன் மனையை வாங்கி கைக்காசைப்போட்டு வீடு கட்டினார். இதற்கிடையில் இடத்தின் உரிமையாளர் அந்த 700 ச.அடி வீட்டையும் மீதமிருந்த இடத்தையும் இன்னொருத்தருக்கு விற்று விட்டு வேறு ஊருக்குப் போய்விட்டார்.
ஆறு மாதம் போயிருக்கும்... ஒருநாள் தனியார் வங்கியைச் சேர்ந்த சில அதிகாரிகள் கையில் பூட்டோடு வந்து நின்றார்கள். பூட்டு கன்னியப்பன் வீட்டுக்கு மட்டுமல்ல, பக்கத்திலிருந்த 700 ச.அடி வீட்டுக்கும் சேர்த்துத்தான்! பதறிப்போய் விசாரித்தபோது இடத்தின் உரிமையாளர் நான்கு வருடத்துக்கு முன்பு வீடு மற்றும் இடத்தைக் காட்டி 20 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்திருக்கிறார். வியாபாரத்தில் நொடித்துப் போகவும் வங்கிக்குத் தெரியாமல் இடத்தை விற்றுவிட்டு கம்பி நீட்டிவிட்டார்!
வீடு விற்றவர் இதுவரை கட்டிய தொகை போக மீதம் உள்ள தொகையை இருவரும் கொடுத்தால் வீட்டை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள் வங்கி அதிகாரிகள். வேறு வழியில்லாமல் இருவரும் அதே வங்கியில் கடன் வாங்கி, இப்போது சொந்த வீட்டுக்கு மாதத் தவணை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
ஏமாறாமல் இருப்பது எப்படி?
ஒரே இடத்தை இரண்டாக அல்லது அதற்கு மேல் பிரித்து விற்கும்போது தாய் பத்திரத்தின் ஒரிஜினலை உரிமையாளர் தன்வசம் வைத்துக்கொண்டு, அதன் நகலைத்தான் வாங்குபவர்களுக்குக் கொடுப்பார். அதுபோன்ற நேரங்களில் வாங்குபவர்கள், தாய் பத்திரத்தின் அசலைக் கேட்டுவாங்கி பார்க்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால், வீட்டுக் கடன் வாங்கி இருக்கும் விஷயம் தெரியவந்திருக்கும்.
பவர்ஃபுல் கையெழுத்து!
வித்யாதரன் ஏமாந்த கதை கொஞ்சம் வித்தியாசமானது. அவர் பார்த்த வீடு மிகவும் பிடித்துப் போய்விட்டது. வீடு புரோக்கர் ஒருவரின் பேரில் இருந்தது. புரோக்கருக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும், முழுப் பணத்தை கொடுத்தால் உடனே பவர் பத்திரம் எழுதிக் கொடுப்பதாகவும் சொன்னார்கள். இதையடுத்து புரோக்கர் அலுவலகத்தில் வைத்து பவர் பத்திரம் எழுதப்பட்டது. வித்யாதரன் நல்லநாள் பார்த்து பத்திரத்தைப் பதிவதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்றார். அங்கே, 'பவர் கொடுத்தவரை அழைத்து வாருங்கள்' என்றார்கள். தனக்கு வீட்டை விற்ற புரோக்கரைப் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு வரவழைத்தபோது அந்த புரோக்கர், 'நான் யாருக்கும் பவர் கொடுக்கவில்லை. இது என் கையெழுத்தும் இல்லை!' என்று அடித்துச் சொல்லிவிட்டார்!
புரோக்கருடன் இருந்த இரண்டு பேர்கள் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருந்தார்கள். அவர்கள் கொடுத்திருந்த முகவரிக்குத் தேடிப் போனால், அங்கு அப்படி ஒரு தெருவே இல்லை! புரோக்கர் மற்றும் அவரின் கூட்டாளிகள் சேர்ந்து திட்டமிட்டு வித்யாதரனை வகையாக ஏமாற்றி இருக்கிறார்கள். 15 லட்ச ரூபாய் இழந்த நிலையில், சொந்த வீடு ஆசையை மறந்தே விட்டார் வித்யாதரன்!
என்ன செய்திருந்தால் ஏமாறாமல் இருந்திருக்க முடியும்?
பவர் ஆஃப் அட்டர்னியை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாதது, வித்யாதரனின் தவறு. பவரை பதிவு செய்யும்போது, அதில் பவர் கொடுப்பவர் மற்றும் சாட்சிகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அவர்களின் கையெழுத்து மற்றும் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. இதனால், புரோக்கர் மற்றும் சாட்சிகள் பல்டி அடிக்க வாய்ப்பு இல்லை. பவரை பதிவு செய்ய அதிகபட்சம் சில நூறு ரூபாய்கள்தான் செலவாகும்.
தொலைந்த' சொத்து
30 லட்ச ரூபாய்க்குப் போகும் வீடு,20 லட்ச ரூபாய்க்குக் கிடைக்கிறது என்றவுடன் ஆசை கிடந்து அடித்தது வீரப்பனுக்கு. வீட்டின் உரிமையாளர் பார்க்க பக்கா டீசென்டாக இருந்தார். சமீபத்தில் ஜெராக்ஸ் எடுக்கப் போனபோது ஒரிஜினல் பத்திரம் தொலைந்து விட்டதாகச் சொன்ன உரிமையாளர்,'அது தொடர்பாக பத்திரிகையில் (அதிகம்தெரியாத ஒரு நாளிதழ்) வெளியிட்ட விளம்பரம், போலீஸில் கொடுத்த புகார், அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை!' என்று கொடுத்த அறிக்கை என எல்லாவற்றையும் காட்டினார்.
'ஒரிஜினல் பத்திரம் இருந்திருந்தால் கூடுதலாக எட்டு லட்சமோ, பத்து லட்சமோ கிடைத்திருக்கும். என் கெட்ட நேரம். அது தொலைந்து போனதால் இப்படி மலிவாக விற்க வேண்டியிருக்கிறது' என்று கண்ணை வேறு கசக்கினார் அவர்.
ஆஹா..! இப்படி ஒரு சந்தர்ப்பம் எப்போது கிடைக்கப்போகிறது என்று பரவசமாகிப் போன வீரப்பன், தனது சேமிப்பு எல்லாவற்றையும் வழித்துக் கொடுத்து பத்திரம் முடித்தார். ஆனால், சில மாதங்களிலே ஏன் அவ்வளவு மலிவாக அந்த வீடு கிடைத்தது என்பதற்கான உண்மையான காரணம் தெரியவந்தது! வீட்டை விற்றவர் வீட்டுப் பத்திரத்தை நிதி நிறுவனம் ஒன்றில் அடமானம் வைத்து, 25 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்திருக்கிறார்! இப்போது நிதி நிறுவனத்துக்கும் வீரப்பனுக்கும் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
என்ன செய்திருந்தால் ஏமாறாமல் இருந்திருக்க முடியும்?
கிரயப் பத்திரம் தொலைந்துவிட்டது அல்லது இல்லை என்று சொன்னாலே உஷாராகி விடவேண்டும். வீட்டுப் பத்திரம் 10, 15 வருஷத்துக்கு முன்னால் தொலைந்துவிட்டது என்று சொன்னால், அதுகுறித்து எப்போது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். சமீபத்தில்தான் தொலைந்தது என்றால், அந்தச் சொத்தை வாங்காமல் தவிர்த்துவிடுவதுதான் நல்லது.
No comments:
Post a Comment