Saturday, September 22, 2012

அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல்...




அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் - கட்டுமீறிய மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடு 

நன்றி: கீற்று.

அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு, நல்லிணக்கம் இவையெல்லாம் இஸ்லாம் போதிக்கும் நற்குணங்கள். அதேநேரம் உரிமை மீட்பு, சமூக நீதி, சமூக பாதுகாப்பு ஆகியவற்றுக்காக போராடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. அநீதிகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக சக்திகேற்ப எதிர்ப்பது முஸ்லிம்களின் கடமையாகும் என கூறப்படுகிறது.

யுத்தம் என்பது பல வகைப்படும். அது தமிழில் வன்முறை, கலகம், தாக்குதல், புரட்சி என பல உள் அர்த்தங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுமக்களை துன்புறுத்தாமல் நடைபெறும் எந்த வகை தாக்குதல்களும் அநீதிக்கு எதிரான யுத்தங்களின் ஒரு பகுதி என்பதை அறிவுடையோர் ஏற்றுக்கொள்வார்கள்.

tmmk_american_embassy_640

கடந்த 14.09.2012 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்ட சம்பவங்களை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்கள் அனைவரும், குறிப்பாக முஸ்லிம்கள், ஏகாதிபத்தியம் மற்றும் ஆக்ரமிப்புகளின் எதிர்ப்பாளர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் அளவே இல்லை.

இதை, இதைத்தான் எதிர்பார்த்தோம் என குடும்பத்தோடும், நண்பர்களோடும் திரும்ப, திரும்ப அந்த சம்பவங்களை தொலைக்காட்சிகளில் பார்த்தப்படியே இருந்தனர்.

நிதானமாக பேசக்கூடியவர்கள் கூட, நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் திரைப்படத்தை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஆதரிக்கும் அமெரிக்க அரசின் திமிர்த்தனத்திற்கு எதிராக இது போன்ற எச்சரிக்கை தாக்குதல்கள் அவசியம்தான் என்றனர்.

முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அல்லது சரிபாதியாக வாழும் நாடுகளிலும் அமெரிக்க தூதரகங்கள் எச்சரிக்கப்படுவது / தாக்கப்படுவது ஆச்சரியமல்ல.

ஆனால், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் ஒரு நாட்டில் அதுவும் அமெரிக்காவின் மிக நெருங்கிய நடுவண் அரசு ஆட்சி செய்யும்போது தடைகளையும், தடுப்புகளையும் மீறி அமெரிக்கத் தூதரகம் சென்னையில் தாக்கப்பட்டது அமெரிக்காவின் ஆணவத்தின் மீது விழுந்த அடியாகும்.

அதுவும் உ.பி, பீஹார், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களைவிட முஸ்லிம்கள் சதவீத அடிப்படையில் குறைந்து வாழும் தமிழகத்தில் முஸ்லிம்கள் தங்கள் தன்மான உணர்வை வரம்புக்குட்பட்ட அளவில் வெளிப்படுத்தியிருப்பது தமிழக‌ முஸ்லிம்களை உலக அளவில் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது.

இயந்திரத் துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் என எதைப் பற்றியும் கவலைப்படாது, காவல் அரண்களை உடைத்து முன்னேறி அமெரிக்கத் தூதரகத்தை சேதப்படுத்தியதும், சுவர் ஏறி குதிக்க முயன்றதும் சாதாரண வீரமல்ல. தியாக உணர்வும், உயிரைப் பற்றிக் கவலைப்படாத அர்ப்பணிப்பும் கொண்டவர்களால் மட்டுமே இத்தகைய வீரதீரங்களை நிகழ்ந்த முடியும்.

அதுவும் ஒரே நேரத்தில், அண்ணாசாலையில் ஒரு புறம் மறியல், ஆயிரம் விளக்கு மசூதி அருகே அறவழி ஆர்ப்பாட்டம், மறுபுறம் காவல் அரண்களை உடைத்து முற்றுகை என பலமுனைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஏழாயிரம் முதல் பத்தாயிரம் பேர் வரை மக்கள் கூடியிருந்தும், எல்லோரும் அமைதியாக கலைந்தது அதை விட முக்கியமானதாகும்.

அண்ணா சாலையில் தூதரதம் தாக்கப்படும்போது, ஆங்காங்கே அமெரிக்கக் கொடிகள் தீவைத்து எரிக்கப்பட்டன‌. இந்நிகழ்வுகளை சாலைகளில், பேருந்துகளில், வாகனங்களில் அமர்ந்தபடியே பொதுமக்கள் ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். போராட்டக்காரர்கள் வாகனங்களையோ, பொதுமக்களையோ தாக்கவில்லை. தமுமுக தொண்டரணியினர் ஒருபுறம் போக்குவரத்தை சீர்செய்து, வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் பாதுகாப்போடு அனுப்பி வைத்தனர். இதை மோட்டார் சைக்கிளில் பயணித்த பலரும் பார்த்துவிட்டு, தொண்டரணியினருக்கு நன்றி தெரிவித்ததைப் பார்க்க முடிந்தது. மறுபுறம் தமுமுக தலைவர்கள் மக்களை சமாதானப்படுத்தியதையும், தொண்டர்களை கட்டுப்படுத்தியதையும் பார்க்க முடிந்தது.

இலங்கையில் முன்பு கொழும்புவில் கட்டுநாயகா விமானத் தளத்தை அதிரடியாய்ப் புகுந்து விடுதலைப் புலிகள் தாக்கினார்கள். பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அதுபோன்ற ஒரு தாக்குதலாகவே இச்சம்பவத்தை ஒப்பிட வேண்டியுள்ளது.

அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்களின் ஆவேசத்தில் உண்மை, உணர்வு, சத்தியம் கலந்திருந்தது. அவர்களின் முகத்தில் அதைப் பார்க்க முடிந்தது. அவர்கள் செய்திகளில் இடம்பெற வேண்டும் என்பதற்காக எதையும் செய்யவில்லை என்பதை அறிய முடிந்தது. மாறாக, எங்கள் நபிகளை இழிவு செய்தால் எதையும் செய்வோம் என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே அவர்களது நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழ் உணர்வாளர்களால், இலங்கைத் தூதரகத்தின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளது. அதே சமயம் உலகின் பலஹீனமான ஒரே வல்லரசு என்றும், சர்வதேச போலீஸ்காரன் என்றும் மார்தட்டும் அமெரிக்காவின் சென்னை தூதரகத்தை தாக்கியதன் மூலம் தமுமுகவினர் உலக கவனத்தை பெற்றிருக்கிறார்கள். இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது.

tmmk_american_embassy_641

தி ஹிந்து, இந்தியன்  எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெக்கான் கிரோனிக்கல் உள்ளிட்ட ஆங்கில ஏடுகள் அகில இந்திய செய்தியாக முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன. இந்தியாவில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்படுவது இதுதான் முதல்முறை என தினகரன் வியந்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களும் தமுமுகவை சுற்றிதான் ஊடகங்கள் ஓடின! அதே சமயம் தமுமுக தலைமை இதை எப்படிப் பார்க்கிறது என்று தெரியவில்லை. நமது போராட்டங்களில் இது தேவையா? 18 ஆண்டுகாலம் ஒரு கட்டுக்குள் நடைபெற்று வந்த நமது பயணத்தில் இது ஒரு நெருடலா? அறிவுஜீவிகளும், ஊடகங்களும் இதை எப்படி பார்ப்பார்கள்? என குழம்பலாம்! பல கோடி செலவிட்டாலும் கிடைக்காத முகவரியும், நற்சான்றிதழும் தமுமுகவினருக்குக் கிடைத்திருப்பதை மறந்துவிடக் கூடாது.

காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகளும், அலட்சியமுமே தாக்குதலுக்கு வழி ஏற்படுத்தியிருக்கிறது. தமுமுக தலைவர்கள் உயிரைப் பணயம் வைத்து தொண்டர்களையும், மக்களையும் கட்டுப்படுத்துவதை ஊடக‌ங்களே பாராட்டுகின்றன.

காரணம், இப்போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தமுமுகவுக்கு ஒரு காலத்திலும் உதவிக்கு வரப்போவதில்லை. துக்ளக் 'சோ', குருமூர்த்தி போன்றவர்களும், வியர்வை சிந்தாத ஆற்காடு நவாப் போன்றவர்களும் தமுமுகவிற்குத் தேவையில்லை. மக்களும், அவர்களின் உணர்வுகளுமே இயக்கங்களுக்கு பலம் சேர்க்கும்.

சென்னை அமெரிக்க தூதரகத்தின் மீதான தாக்குதல் ஒரு நீண்ட நாளைய எதிர்பார்ப்பாகும். நசுக்கப்படும் ஒரு சர்வதேச சமூகத்தின் கோப அலைகள் கரையைக் கடந்துள்ளன. ஆக்ரமிப்பு எண்ணம், ஃபாஸிஸம், மதவெறி, முதலாளித்துவத் திமிர், ராணுவ தலைக்கன‌ம் கொண்ட ஒரு வன்முறை தேசத்திற்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச மிரட்டல் தான் இது.

ஈராக்கில் 6 லட்சம் மக்களையும், ஆப்கானிஸ்தானில் 2 லட்சம் மக்களையும், ஜப்பானில் அணுகுண்டு வீசி பல லட்சம் மக்களையும் கொன்று, இன்றளவும் உலகை அச்சுறுத்தும் அமெரிக்காவை பணியவைக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

இது மக்களே முன்நின்று நடத்திய ஒரு தாக்குதல். அங்கு அரிவாள், ஆயுதங்கள், குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை. கற்களும், கைகளில் கிடைத்த கம்புகளும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது திட்டமிட்ட தாக்குதலும் அல்ல; கட்டுமீறிய மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடு.

அடக்கப்படுவதாக, ஒடுக்கப்படுவதாக, நசுக்கப்படுவதாக கருதும் ஒரு சமூகம் ஜனநாயக வரம்புக்குட்பட்டு நிகழ்த்திய குறைந்தபட்ச யுத்தம்!

ஆங்கிலேயர்களை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய அஹிம்சைப் போராட்டங்களின் போது 'சௌரி - சவுரா' தாக்குதல் சம்பவங்கள் எப்படி எதிர்பாராமல் நடந்ததோ அது போலத்தான் இதுவும். அதனால், காந்தியடிகளின் மொத்த போராட்டங்களையும் வரலாறு விமர்சித்துவிட்டதா என்ன?

தமுமுக தோழர்களே... உங்களுக்கு எங்களின் புரட்சிகர வாழ்த்துகள்...! உங்களின் வீரதீர நிகழ்வுகளை வரலாறு அங்கீகரிக்கும்! சமகால மக்கள் பாராட்டுகிறார்கள்!

தோழமையுடன்...

இரா.இளஞ்செழியன், ஷி.ராஜா, கி.இஸ்மாயில், ஷி.அஸாருதீன்.


--
------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது,
தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم
 
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்'
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது." group.
To post to this group, send email to tmmk@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmmk+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmmk?hl=ta.



--
*more articles click*
www.sahabudeen.com



No comments: