Wednesday, September 5, 2012

FaceBook பயன்படுத்துவோர்களுக்கு சில பாதுகாப்பு வழிமுறைகள்


சில வருடங்களுக்கு முன்பு வரை நம் நண்பர்கள், உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரில் சந்திக்கும் பொழுதோ, எப்பொழுதாவது தொலைபேசியில் பேசினாலோ மட்டும் தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று, நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை தினமொரு முறை, பலர் மணிக்கொரு முறை பகிர்ந்துகொண்டிருக்கிறோம். உபயம் சமூக வலையமைப்புத்தளங்கள்!!
அதில் ஃபேஸ்புக்கின் பங்கு மிகவும் அதிகம்.காலையில் பார்த்த விசயங்கள், மனதில் உதித்த விசயங்கள், விரும்பிய புகைப்படங்கள், வடித்த கவிதைகள், பார்த்த காணொளிகள், வாசித்த கட்டுரைகள் என்று பகிரப்படும் விசயங்களுக்கு அளவே கிடையாது. 

நாங்கள் எடுத்த புகைப்படம்...
எங்கள் குடும்ப நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்..
நானும் இந்த பிரபலமும் சந்தித்த பொழுது எடுத்த புகைப்படம்..
என் அலைபேசி எண்ணை மாற்றியுள்ளேன். இதோ.. இது தான் என் எண்..
என்று தன்னைப் பற்றியும் தங்களது எண்ணங்களையும் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துகொண்டேயிருக்கிறோம்.
 
சில சமயங்களில் மெங்களுர் விமான விபத்து போன்ற சம்பவங்களையும், அஞ்சலிகளையும் பகிர்ந்தாலும், நம் எண்ணங்களே பிரதானமாக இடம் பிடிக்கின்றன பகிர்தலில். சில கேள்விகள் எழுகின்றன. நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா? நாம் பகிரும் புகைப்படங்கள் யார் யாருக்கெல்லாம் அனுப்பப்படுகின்றதென தெரியுமா?

"என் புகைப்படங்களை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்? நான் என்ன பெரிய பிரபலமா?" என்ற எண்ணம் நமக்குள் எழத்தான் செய்யும். ஆனால், நாம் பகிரும் விசயங்களால் நமக்கு எந்த திசையில் இருந்தும் சங்கடங்கள் நேரலாம். நம் பகிர்தலை யார் யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை தேர்வு செய்யும் வரை!!

என் தோழி ஒருவர் தான் ஒரு பிரபலத்துடன் சில புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அந்த பிரபலமும் அவரது புகைப்படத்தொகுப்பில் அந்தப் படங்களைச் சேர்த்துள்ளார். தோழி அந்தத் தொகுப்பை தன் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்தார். நமக்குத் தான் பிரபலங்களின் படங்களைப் பார்ப்பதில் ஆர்வமாச்சே. அந்தத் தொகுப்பைப் பார்த்தால் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களெல்லாம் உள்ளன. அதில் பல இதுவரை ஊடகத்தில் வெளியாகாத படங்கள்!!

அந்தப் பிரபலம் இதை எதிர்பார்த்திருப்பாரா?
அவர் செய்யாததென்ன?
தன் பகிர்தலை யார் யார் பார்க்க முடியும்? யார் யார் பிறரிடம் பகிரமுடியும் என்ற Settingsஐச் சரியாகத் தேர்ந்தெடுக்காதது தான்.
ஃபேஸ்புக் நிறுவனத்தினர், தளத்தின் பயணர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துவருகிறது. ஃபேஸ்புக் தளத்தினர் இந்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புக் கட்டுப்பாடை (Privacy Settings) மேலும் பலப்படுத்தியுள்ளனர். இனி நம் பாதுகாப்பிற்கு நாமே முழுப்பொறுப்பு.

சரி.. ஃபேஸ்புக்கின் தளத்தில் கவனிக்கப்படவேண்டியவை எவை?

பகிர்தல்:
நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கலாம்? அனைவரும் பார்க்கலாம், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்கள் என்று நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். அனைவரும் என்று தேர்ந்தெடுக்கும் பொழுது இணையத்தில் உள்ள அனைவரும் நம் பகிர்தலைப் பார்க்க முடியும். இதைத் தேர்ந்தெடுக்கும் முன்பு கொஞ்சம் யோசிக்கவும். சில சமயங்களில் சிலர் மட்டுமே பார்க்கும் படியான தகவல்களையோ, கருத்துகளையோ பகிர்கிறோம் என்றால், யார் யார் பார்க்கவேண்டும் என்பதையும் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கலாம்.

அடிப்படைத் தகவல்கள்:
நம்மைப் பற்றிய அடிப்படைத் தகவல்களான பெயர், பால், ஃபேஸ்புக் பிரதான புகைப்படம் முதலியவை அனைவருக்கும் தெரியும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும். நம் நண்பர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள இது வசதியாக இருக்கும் என்பதால்..

சேவைகள், இணையதளங்கள்:
திடீரென்று நம் நண்பர்களிடம் இருந்து "எனது பக்கத்து பூமி காலியாக இருக்கிறது. வந்து விவசாயம் செய்யவும் என்று ஒரு அழைப்பு வரும். என்ன வென்று பார்த்தால் Farmville, Fishville என்று ஒரு விளையாட்டுச் சேவைகளாக இருக்கும். சிலவமயம் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தால் நான் ஆடு வளத்தேன், பன்னிக்குட்டியைப் பார்த்தேன் என்று எங்கும் அவர்கள் இணையத்தில் விவசாயம் செய்வதாக இருக்கும்." இது போன்ற அழைப்புகள், பகிர்தல்களால் கடுப்பாகிறவராக நீங்கள் இருந்தால்.. இது போன்ற சேவைகளையே துண்டிக்கலாம் (Block).

அதற்கான வசதியையும் ஃபேஸ்புக் தளத்தினர் கொடுத்திருக்கிறார்கள்.
முக்கியமாக செய்யவேண்டிய விசயம்.. எந்த ஒரு அழைப்போ, கேள்வியோ வரும் பொழுது நன்றாகப் படித்துப்பார்த்து ஆம் இல்லை என்று தேர்வு செய்யவும். பல தளங்கள், சேவைகள் நாம் அச்சேவையைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் பொழுதே "உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுத்துக்கொள்ளவா?" என்று கேட்கின்றன. சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து "Most Sexiest Video Ever" என்று ஒரு பகிர்தல் நண்பர்களிடம் இருந்து வந்தது. அதைப் பார்க்கச் சென்றால் (சஞ்சலம் யார விட்டது?) உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுக்கவா? என்றது. ஆம் சொன்னால் தான் அந்தக் காணொளியைப் பார்க்க முடியும். நான் இல்லை என்று (ஏமாற்றத்துடன்) கூறிவிட்டேன். ஆனால், எனக்குத் தொடர்ச்சியாக இந்தச் சுட்டி வந்துகொண்டேயிருந்தது.
இங்கே நான் கூறியுள்ளவை யாவும் ஃபேஸ்புக் தளத்தில் கொடுக்கப்பட்டவையே. ஒரு பத்து நிமிடத்தை உங்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்குவது சரிதானே?

www.sahabudeen.com

No comments: