Thursday, January 16, 2014

கடமையன குளிப்பு என்றால் என்ன?

கடமையன குளிப்பு என்றால் என்ன?

தொழுகைக்கு உளூ எந்த அளவிற்கு அவசியமோ அந்த அளவிற்கு குளிப்பு கடமையானவர் குளிப்பது அவசியம். உடலுறவின் மூலமோ அல்லது உறக்கத்திலோ அல்லது விழிப்பிலோ ஆணுக்கோ பெண்ணுக்கோ விந்து வெளிப்பட்டால் குளித்தேயாக வேண்டும். குளிக்காமல் தொழக்கூடாது. இதுவே கடமையன குளிப்பாகும்.
ஸ்கலிதம் ஏற்பட்டால்
"இச்சை நீர் வெளிப்பட்டால் உளூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்க்ள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், தாரமீ
"ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?" என்று உம்மு கலைம் (ரலி), நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது "ஆம்" என்று பதிலளித்தார்கள்" அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
மாதவிடாய் ஏற்படுதல்
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்கள் தொழவோ, நோன்பு நோற்கவோ, உடலுறவு கொள்ளவோ கூடாது. மாதவிடாய் நின்ற பிறகு குளித்து தூய்மையானதும் தொழலாம் நோன்பு நோற்கலாம்.
"மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுதுகொள்!" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளைத் திருப்பித் தொழ வேண்டியதில்லை
"எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது தொழுகை, நோன்பு ஆகியவைகளை விட்டு விடுமாறும், மாதவிடாய் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்குமாறும் விடுபட்ட தொழுகைகளைத் தொழ வேண்டியதில்லை என்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
பிரசவ இரத்தம் வெளிப்படுதல்
பிரசவ இரத்தப் போக்கு சம்பந்தமாக நேரடியாக ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கூட மாதவிடாய் இரத்தப் போக்குக்கு என்ன சட்டமோ அதே சட்டம் தான் இதற்கும் பொருந்தும்.
தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்டால்
பெண்களில் சிலர் மாதவிடாயின் போது மட்டுமின்றி எப்போதும் இரத்தப் போக்கு உள்ளவர்களாக இருப்பர். இது ஒரு வகை நோய். இதன் காரணமாக தொழுகையையும் இதர வணக்கங்களையும் விட்டுவிடக் கூடாது!. அவர்களின் வழமையான மாதவிடாய் நாட்கள் முடிந்து குளித்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியால் கட்டிக்கொண்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச்செய்து தொழ வேண்டும்.
ஃபாத்திமா பிந்த் அபீஹுபைஷ் (ரலி) என்ற பெண்மனி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து "நான் இரத்தப் போக்குடையவளாக இருக்கிறேன், தூய்மையாவதே இல்லை. எனவே தொழுகையை நான் விட்டு விடலாமா?" எனக் கேட்டார். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் "உனது மாதவிடாய் நாட்களில் மட்டும் தொழுகையை விட்டுவிட்டு, குளித்து தொழுவாயாக! இரத்தம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை!" என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் ஒரு பெண் இரத்தப் போக்கு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அவர்களுக்காக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் நான் சட்ட விளக்கம் கேட்டபோது, இந்த நோய் வருவதற்கு முன் அந்த பெண்ணுக்கு வழக்கமாக மாதவிடாய் வந்து கொண்டிருந்த நாட்களைக் கழித்து அந்த நாட்கள் முடிந்ததும் குளித்துவிட்டுத் துணியால் இறுகக் கட்டிக்கொண்டு அவள் தொழவேண்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல் நஸயீ
அபூதாவூதின் அறிவிப்பில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்துகொள்! என்று காணப்படுகின்றது.
 குளிக்கும் முறை
  • கடமையான குளிப்பை நிறைவேற்று முன் மர்மஸ்தானத்தைக் கழுவி உளூச் செய்து கொள்ள வேண்டும்.
  • உடல் முழுவதும் தண்ணீர் பட்டு நனையுமாறு குளிக்க வேண்டும்.
  • குளித்தபின் தொழ வேண்டியிருந்தால் மறுபடியும் உளூச் செய்ய வேண்டியதில்லை.
  • குளிக்கும் போது செய்த உளூவே போதுமானது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தம் இரு கைகளையும் கழுவிவிட்டு தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது கைகளின் மீது (சிறிதளவு தண்ணீர்) ஊற்றி இரண்டு, மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தில் ஊற்றி மர்ம ஸ்தானத்தைக் கழுவினார்கள். பின் தம் கைகளைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து, மூக்கையும் சுத்தம் செய்து முகத்தைக் கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தமது மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள். அறிவிப்பவர்: மைமூனா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: