Friday, January 17, 2014

கர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா?

கர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா?

இன்று உலகம் சுருங்கிவிட்டது. மக்களின் பயணத் தேவைகளும் அதிகரித்து விட்டன. உள்நாட்டுப் பயணங்கள் மாத்திரமின்றி வெளிநாட்டுப் பயணங்கள் கூட அதிகரித்துவிட்டன. சாதாரண மனிதர்கள் மாத்திரமின்றி கர்ப்பமாயிருக்கும் பெண்கள் கூட அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்களும் தேவைகளும் எழுகின்றன.
"நான் கர்ப்பமுற்றிருக்கிறேன். இந்த நிலையில் நான் வெளிநாடு செல்ல வேண்டியிருக்கிறது. விமானப் பயணம் செய்யலாமா?" என்ற கேள்வியுடன பல பெண்கள் வருகிறார்கள்.
  • விமானப் பயணம் செய்தால் ஏதாவது ஆகுமா?
  • தனது கருவிற்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்துமா?
  • இரத்தப் பெருக்கு ஏற்படுமா?
  • கருச்சிதைவு ஏற்பட்டு விடுமா? 
போன்ற பயங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

உண்மையைச் சொல்லப் போனால் கரு வலுவாக, ஆரோக்கியம் உள்ளதாக இருந்தால், வீதியிலோ, வானத்திலோ எந்த விதமான பயணங்களும் தாய்க்கோ, வயிற்றில் வளரும் கருவிற்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. எந்தப் பிரயாணத்தையும் தாக்குப் பிடிக்கக் கூடிய சக்தி சாதாரண கர்ப்பத்திற்குண்டு.
ஆயினும் சில நோயுள்ளவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதே.  உதாரணமாக
  • கடுமையான இரத்தசோகை உள்ளவர்கள்.  
  • சூல்வித்தகம் ஊடாக கருவிற்கு போஷணைப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதில் பாதிப்பு உள்ளவர்கள் (Placental insuficency)  
  • குருதி உறையக் கூடிய வாய்ப்புள்ளவர்கள் 
  • சிக்கிள் செல் (Sickle cell anaemia) நோயுள்ளவர்கள்
இவர்கள் வைத்திய ஆலோசனையுடனேயே விமானப் பயணம் செய்ய வேண்டும்.

கர்ப்பமாயிருக்கும் முதல் 12 வாரங்களில் பலருக்கு வயிற்றும் புரட்டு, வாந்தி, களைப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் இவற்றிற்காக அவசரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை. மருத்துவரின் ஆலோசனையுடன் வேண்டிய முன்னேற்பாடுகளுடன் பயணிக்கலாம்.

உங்களுக்கு விமானப் பயணம் பற்றிய சில தொழில்நுட்பத் தகவல்கள் தெரிந்திருந்தாலும் உங்களுக்கு விமானப் பயணம் மேலும் பயத்தை ஏற்படுத்தக் கூடும்.
காற்றமுக்கம்

விமானம் பயணம் செய்யும்போது விமானத்திற்குள் இருக்கும் காற்று அழுத்தமானது விமானம் உயர்ந்து செல்வதற்கு ஏற்பக் குறைக்கப்படுகிறது. உண்மையில் அதன் காற்றமுக்கம் வானவெளியில் 5,000 அடிக்கும் 8,000 அடிக்கும் இடைப்பட்ட உயரத்தில் இருக்கும் வானவெளியின் காற்றமுக்க அளவிற்குக் குறைகிறது.

காற்றமுக்கம் குறைவதால் உங்களினதும், உங்கள் குழந்தையினதும் இரத்தத்தில் உள்ள ஒட்சிசனின் அளவும் குறையவே செய்யும். ஆனால் இதையிட்டு நீங்கள் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. பாதிப்பு ஏதும் ஏற்படாது. உங்களதும் கருவினதும் உடல்கள் குறைந்தளவு ஒட்சிசனின் அளவுக்கு ஏற்ப தம்மை இலகுவாக இசைவடையச் செய்துவிடும் ஆற்றல் கொண்டவை.

கதிர் வீச்சு

இன்னுமொரு உங்கள் சந்தேகம் கதிர் வீச்சுகள் பற்றியதாக இருக்காலாம். இவை கருவைப் பல விதத்திலும் பாதிக்கலாம் என்பது உண்மையே. கதிர் வீச்சுகளால் கருச்சிதைவு ஏற்படலாம். அங்கக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கலாம். இதனால்தான் கருவுற்றிருக்கும்போது கர்ப்பிணிகளை எக்ஸ்ரே எடுப்பதைக் கூட இயலுமானவரை தவிர்க்கிறார்கள்.

விமானத்தில் உயரப் பறக்கும் போது சூரியனின் கதிர் வீச்சு கூடியளவில் வரும் என்பதால் குழந்தையைப் பாதிக்குமா என நீங்கள் ஜயுறக் கூடும். உண்மைதான் தரையிலிருப்பதை விட வானத்தில் சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கவே செய்யும். ஆயினும் அது கருச்சிதைவையோ அங்கக் குறைபாட்டையோ ஏற்படுத்தக் கூடியளவு செறிவு கூடியதல்ல. எனவே தயக்கமின்றிப் பயணம் செய்யலாம்;.

மிகவும் பாதுகாப்பான காலம்

சரி கர்ப்பமுற்றிருக்கும் காலத்திலும் பயணம் செய்யலாம் என்பது தெளிவாகிவிட்டது. ஆயினும் கர்ப்பத்தின் எந்தக் காலத்தில் பயணிப்பது மிகவும் பாதுகாப்பானது என்று கேட்டால் கர்ப்பத்தின் நடுப்பகுதி என்று தயக்கமின்றிச் சொல்லாம். அதாவது 18 முதல் 24 வாரம் வரையான காலம் என்று சொல்லலாம். ஏனெனில் பொதுவாகவே இக் காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும்.

ஆனால் இந்தக் காலத்தில் மட்டும்தான் விமானப் பயணம் செய்யுங்கள் என்பது இதன் அர்த்தமல்ல.

அடுத்ததாக மிக ஆபத்தான காலம் என்று எதனைச் சொல்லாம் என்று நீங்கள் கேட்கக் கூடும்..

பயணத்தின்போது திடீர் மகப்பேறு ஏற்படாதிருக்கக் கூடிய காலம்தான். எனவே கர்ப்பத்தின் இறுதியை அண்மிக்கின்ற, அதாவது 36 வாரத்திற்குப் பிந்திய காலத்தில் பயணம் செய்வது அவ்வளவு உசிதமானதல்ல என்றே பெரும்பாலான வைத்தியர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அதிலும் காலத்திற்கு முந்திய பிரசவம் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளவர்கள் முக்கியமாக இக்காலகட்டத்தில் பயணிப்பதைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக இரட்டைக் குழந்தைகள் உள்ளவர்கள் 34 வாரங்களுக்குப் பின்னர் அவதானமாக இருப்பது நல்லது.

தடுப்பு ஊசிகள்

சில நாடுகள் தங்கள் நாட்டிற்குள் நுழைபவர்கள் சில மேலதிக தடுப்பு ஊசிகள் போடவேண்டும் என எதிர் பார்க்கின்றன. பல மேலை நாட்டிலுள்ளவர்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணப்படும்போது மலேரியத் தடுப்பு மாத்திரைகள் உபயோகிக்க வேண்டும் என்கின்றன. இவற்றில் சில பக்க விளைவுகள் உள்ளன. எனவே மருத்துவரிடம் தெளிவான ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
விமானப் பிரயாணத்தின் போது
  • விமானப் பயணத்தின் போது போதியளவு நீராகாரம் அருந்துவது அவசியமாகும். ஏனெனில் விமானத்திற்குள் இருக்கும் வளியின் ஈரலிப்புத்தன்மை குறைவாகும். இதனால் உங்கள் உடலின் நீர்த்தன்மையும் குறைய நேரும். இதனைத் தவிர்ப்பதற்காகவே விமானப் பயணத்தின் போது போதிய நீராகாரம் அருந்துவது முக்கியமானதாகிறது.
  • விமானத்தில் பறக்கும்போது பல சந்தர்ப்பங்களில் இருக்கைப் பட்டி (Seat belt) அணிய நேரிடும். முக்கியமாக விமானம் மேல் எழும்போதும், இறங்கும்போதும் இருக்கைப் பட்டி அணியுங்கள் என விமானப் பணியாளர்கள் எல்லோரையும் வேண்டுவார்கள். நீங்கள் கர்ப்பிணியாக இருந்தால் இருக்கைப் பட்டியை வயிற்றிக்குக் குறுக்காக இறுக்கமாக அணியாதீர்கள். மாறாக அடி வயிற்றுப் பகுதியைச் சுற்றி அதாவது உங்கள் தொடைகளும் வயிறும் இணையும் பகுதியைச் சுற்றியே இருக்கைப் பட்டியை அணியவேண்டும்.
  • விமானப் பயணம் பலமணிநேரம் நீடிக்கலாம்.  நீண்ட நேரம் கால்களுக்கு அதிக வேலை கொடுக்காது உட்கார்ந்திருந்தால் கால்களிலுள்ள நாளங்களில் குருதி உறையக் (Deep vein thrombosis)கூடிய வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக விமானப் பிரயாணத்தின் போது ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை உங்கள் இருக்கையை விட்டு எழுந்து சற்று நடவுங்கள். இடையிடையே பாதங்களை மடக்கி நீட்டிப் பயிற்சி கொடுப்பதும் நாளங்களில் குருதி உறையாமல் தடுக்க உதவும்.
  • விமானப் பயணத்தின் போது உங்களுக்கு ஏற்ற இருக்கையைத் தேர்ந்தெடுப்பதும் நல்லதாகும். அவ்வாறான இருக்கையை ஒதுக்குமாறு கோருங்கள். விமானத்தின் இறைக்கைகளுக்கு அண்மையான இருக்கைகள் அதிக குலுக்கமின்றிப் பயணிக்க உதவும். விமானத்தின் தலைப் பகுதியிலும் பக்கவாட்டிலும் உள்ள இருக்கைகள் பொதுவாக விசாலமானவை. சௌகர்யமான பயணத்திற்கு ஏற்றவை. எனவே விமானப் பணியாளர்களுடன் கலந்தாலோசித்து உங்களுக்கு ஏற்ற இருக்கையைத் தேர்ந்தெடுங்கள்.

இவ்வாறான சாதாரண விடயங்களைக் கவனத்தில் எடுத்தால் உங்கள் விமானப் பயணம் பாதுகாப்பாகவும், பயமின்றியும், சௌகர்யமாகவும் அமையும்.

கவலையை விடுங்கள், மகிழ்வோடு சிறகுகளை விரியுங்கள்.
Dr.M.K.முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்


--
*more articles click*
www.sahabudeen.com


No comments: