தீமை தீயினும்தீது.
ஆபூ ஆஷிக்
[கேட்டால்''எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொள்வான்''.அவனுடைய தீனை மட்டும்உங்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறானா?!
நபிமார்களும் இந்தப் பணியைத்தான் செய்தார்கள். நன்மையை மட்டும் ஏவி இருந்தால், தீமையை தடுக்காமல் இருந்திருந்தால் எந்த நபிக்கும் அடி விழுந்திருக்காது. எந்த நபியும் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.
அந்த நபிமார்களுடைய வேலையைச் செய்வதாகச் சொல்லும் நீங்கள் எங்கேயாவது அடி வாங்கி இருக்கிறீர்களா? எப்படி வாங்குவீர்கள். நீங்கள் தான் எந்த தீமையையும் தடுப்பதில்லையே!]
இமாம் தொழுகை முடிந்து துஆ ஓதி முடிந்ததும் நண்பர் எழுந்து சென்றுஒரு புத்தகத்தைவாசிக்க ஆரம்பித்தார்….
பள்ளிக்கு வெளியே வந்ததும் அந்த நண்பரிடம், "பாய் பள்ளியிலும் இந்த கிதாபை படிக்கச் சொல்றீங்க வீட்டிலும் அதையே படிக்கச் சொல்றீங்க. அதைப்படிச்சு அறிவு வளரும்னு சொல்லாம பரக்கத் வரும்னு வேறு சொல்றீங்க!எதுக்காக குர்ஆனை இருட்டடிப்பு செய்யறீங்க?"என்று கேட்டேன்.
"இல்லை பாய்! நீங்க சொலறது தப்பு. குர்ஆனை படிச்சா எல்லாருக்கும் புரியாது.(!) அது ஆலிம்களுக்கும் பெரியார்களுக்கும் மட்டும் தான் புரியும். அதனாலதான் அதனுடைய சாராம்சத்தை எடுத்து கிதாபிலே தந்திருக்காங்க." அவர்.
"அல்லாஹ் – நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டே இந்த வேதத்தை நாம் எளிமையாக்கி இருக்கிறோம். இதன் மூலம் அறிவு பெறுவார் உண்டா?"என்று கேட்கிறான். நீங்க என்னடான்னா குர்ஆன் புரியாதுன்னு சொல்லி புதுசு புதுசா கதை விடுறீங்க.
எம்பெருமானார் முஹம்மதுநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியும் கூட அவற்றைக் கொண்டு அவர்கள் ஒரு போதும் மிகையாகச் சொல்லவில்லை. மதத்தைப் பரப்ப அந்த அற்புதங்களை துணைக்கு அழைக்கவில்லை.
"ஒவ்வொரு நபிமார்களுக்கும் அல்லாஹ் ஒவ்வொரு அற்புதங்களை கொடுத்திருக்கிறான், எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் இந்த குர்ஆன்தான்" என்றார்கள். அத்தகைய அற்புதமாகிய குர்ஆனை விட்டு விட்டு எதற்காக மிகைப்படுத்தப்பட்ட கதைகளை படித்துக் கொண்டிருக்கிறீர்கள்."
"பாய், மொத்தத்திலே இந்த வேலையோட நோக்கம் என்னன்னா மக்களை பள்ளியோட தொடர்புள்ளவங்களா மாத்தனும். எல்லாரும் தொபு ஆரம்பிச்சுட்டாங்கன்னா தீமையே இல்லாம போயிடும். எல்லா முஸ்லிம்களும் சொர்க்கத்துக்கு போகனும். அதுக்காக சில விஷயங்களை கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லி இருப்பாங்க அவ்வளவுதான்" என்றார்.
"சரி எல்லாரும் தொழ ஆரம்பிச்சுட்டாங்கன்னா தீமையே இருக்காதாக்கும்?"
"தொழுகையாளிகளே தப்பு செய்றாங்களே!
தொழுகையாளி சகுணம் பார்க்கிறார். குறி கேட்கிறார், திருஷ்டி கழிக்க வீட்டிலே, கடையிலே சூடம் கொளுத்துகிறார்!
தொழுகையாளி அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்கிறார். தர்காக்களுக்கு சென்று ஆடு அறுக்கிறார். பிள்ளைகளுக்கு மொட்டை போடுகிறார். இந்த வைபவங்களிலெல்லாம் இன்னபிற தொழுகையாளிகளும் கலந்து கொள்கிறார்கள். நபிமார்களுடைய வேலையைச் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் நபர்களும் பங்கெடுக்கிறார்கள்!
தொழுகையாளி புதிதாக வீடுகட்டும் பணி ஆரம்பிக்கும் முன்னர் பூமி பூஜை செய்கிறார்! வாஸ்து பார்த்து வீடு கட்டுகிறார். புது வீட்டில் குடி புகுமுன் வனதேவதைகளை திருப்திபடுத்த "கழிப்பு" கழிக்கிறார்! (புதிதாக கட்டப்படும் பள்ளிவாசல்களிலேயே மேற்பழ சமாச்சாரங்கள் நடப்பதாக கேள்வி)
ஏதாவது பூச்சிக் கடித்துவிட்டால் பூசாரியிடம் போய் ஓதிப்பார்க்கும் தொழுகையாளி இருக்கிறார்!
தொழுகையாளி வதந்தியை பரப்புகிறார். பள்ளிக்குள்ளேயே உட்கார்ந்து யார் யாரோடு ஓடிப்போனார்கள் என்பது போன்ற வீணான பேச்சுகளில் ஈடுபடுகிறார்!
தொழுகையாளி தன்மகன் திருமணத்திற்கு வரதட்சணை வாங்குகிறார். அந்தப் பணத்தை அந்த ஊரிலே உள்ள இமாம் அல்லது முக்கியஸ்தர் பெண்ணின் தந்தையிடம் வாங்கி மாப்பிள்ளையின் தந்தையிடம் ரொம்பவும் பவ்யமாக கொடுப்பார். இந்த கேடுகெட்ட நிகழ்ச்சியிலே தொபுகையாளிகள் கலந்து கொள்கிறார்கள். இந்நிகழ்ச்சி புனிதம் ஏற்ற முடிவிலே இமாம் அவர்களால் துஆவும் ஓதப்படுகிறது!
தொழுகையாளி தன் மகளின் பூப்பனித நீராட்டு விழாவுக்கு கார்டு அடித்து விருந்து கொடுக்கிறார்! இமாம் உட்பட தொழுகையாளிகள் யாவரும் அதில் கலந்து கொள்கிறார்கள்!
தொழுகையாளி வியாபாரத்தில்; பொய் பேசுகிறார். 100 ரூபாய் பொருளை 300 ரூபாய்க்கு விற்கிறார். கேட்டால் இஸ்லாத்தில் லாபம் எவ்வளவு வேண்டுமானாலும் வைத்து விற்கலாம் என்கிறார்! (இமாம்களே! அப்படியா?)
தொழுகையாளி திருட்டு சி.டி. விற்கிறார்! குருவியாகப் பறந்து அண்ணிய செலவாணி மோசடி செய்கிறார். வணிகவரி, சொத்துவரி, வருமானவரி ஏய்ப்பு செய்கிறார். பொய்க்கணக்கு காட்டுகிறார்! (ஜக்தாத் வரியை முறையாக செலுத்தச் சொல்லும் உலமாக்கள் வணிகவரி, வருமானவரி, சொத்துவரிகளை முறையாகக் கட்டச்சொல்லி பயான் செய்வதில்லையே! ஏன்?)
தொழுகையாளி அரசாங்கம் மானிய விலையிலே தரக்கூடிய பொருட்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்கிறார்! (நிறைய பள்ளிவாசல்களிலே அரசாங்கம் மானிய விலைக்கு தரக்கூடிய கஞ்சி அரிசியை வாங்கி வெளியே விற்றுவிடுகிறார்கள் என்ற தகவலும் உண்டு)
தொழுகையாளி போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுகிறார்!
மேற்சொன்ன மோசடிகளிலே மாட்டிக்கொள்ளும் போது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தப்பிக்கப் பார்க்கிறார்! லஞ்சம் கொடுப்பதை குர்ஆன் தடுக்கவில்லையா?
தொழுகையாளி தன் பிள்ளைக்கு பயண டிக்கெட் வாங்க கண்டக்டரிடம் பொய் சொல்கிறார்!
இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்.
"நீங்கள் சொல்வது மாதிரி மேற்சொன்ன தீமைகளை தடுக்கவில்லையே ஏன்? காரணம் நிறையபேருக்கு மேலே சொல்லப்பட்டவை முதலில் தீமைகள் தானா? என்பதே தெரியவில்லை".
இத்தனையும் சொன்ன பிறகும் நண்பர் மீண்டும் ஆரம்பித்தார்.
"பாய் நன்மையை நீங்க ஏவினாலே போதும்; தீமை தன்னால் அழிந்துவிடும். ஓரிடத்திலே இருட்டாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப் போக்க அங்கே ஒரு விளக்கை மட்டும் வைத்தாலே போதும். இருள் போய் விடும் இல்லையா? என்று நண்பர் ஒரு உதாரணத்தையும் சொன்னார். (விளக்கை ஏற்றி வைத்தால் மட்டும் போதாது. சில நேரம் லேசாக காற்று வீசினால் கூட அந்த விளக்கொளியும் அனைந்து விடும்.. அந்த இடர்களை தடுக்கத்தான் தடுப்புச் சுவராக அரிக்கேன் விளக்கில் கண்ணாடி பொருத்தப்படுகிறது. தீமையை தடுக்கும்போதுதான் நன்மையை ஏவியதற்கான முழு ரிசல்ட்டையும் பெறமுடியும். – adm)
"சரி பாய்… ஓரிடத்திலே முட்செடியாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்திலே காய்கறிச் செடி நட வேண்டும்… என்ன செய்யனும்? அந்த முட்புதரை அழித்துவிட்டு காய்கறிச் செடிகளை நட வேண்டுமா? அல்லது அந்த முட்புதருக்கு பக்கத்திலே காய்கறிச் செடியை நட்டால் போதுமா? என்றேன்.
"நிச்சயமாக தொழுகை மானகேடான மற்றும் அருவருக்கத்தக்க செயல்களை விட்டும் தடுக்கிறது" குர்ஆன் (29:45) நிச்சயமாக தொழுகை தவறான செய்கைகளைவிட்டும் மனிதனை தடுக்கும் என்றாலும் நம்முடைய தொழுகையின் லட்சணத்தைப் பொருத்தல்லவா அதனுடைய பலாபலன் இருக்கும். அதனால் தான் வல்லோன் அல்லாஹ் அதே குர்ஆனிலே"நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிலே அவரசியம் இருக்க வேண்டும் அவர்கள் நன்மையை ஏவ வேண்டும். தீமையை தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். எவர்கள் இதைச் செய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.." (குர்ஆன் 3: 104)
நபிமார்களும் இந்தப் பணியைத்தான் செய்தார்கள். நன்மையை மட்டும் ஏவி இருந்தால், தீமையை தடுக்காமல் இருந்திருந்தால் எந்த நபிக்கும் அடி விழுந்திருக்காது. எந்த நபியும் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த நபிமார்களுடைய வேலையைச் செய்வதாகச் சொல்லும் நீங்கள் எங்கேயாவது அடி வாங்கி இருக்கிறீர்களா? எப்படி வாங்குவீர்கள். நீங்கள் தான் எந்த தீமையையும் தடுப்பதில்லையே!
"ஜிஹாதிலே சிறந்த ஜிஹாது அநியாயக்கார ஆட்சியாளனிடம் அவனது அநியாயத்தை எடுத்துரைப்பதுதான்" என்பது நபிமொழி. இந்த நாட்டிலே எத்தனை எத்தனை அநியாயக்கார ஆட்சியாளர்கள் வந்தார்கள், போனார்கள் இருந்து கொண்டும் இருக்கிறார்கள். யாரிடத்திலாவது ஏதாவது சொல்லி இருப்பீர்களா? நீங்கள் நினைத்தால் எந்தவித விளம்பரமும் இல்லாமல் லட்சக்கணக்கானனோரை திரட்டி விட முடிகிறது. அந்த மக்களை மோசமான ஆட்சியாளர்களுக்கு எதிராக நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீதியிலே என்றைக்காவது பயன்படுத்தியிருக்கிறீர்களா? அப்படி பயன்படுத்தலாம் என்ற சிந்தனையாவது உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் ஓட்டே போடுவதில்லையே! அப்புறம் உங்களிடம் ஜனங்களைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் எங்கே கவலை இருக்கப் போகிறது.
கேட்டால்"எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொள்வான்".அவனுடைய தீனை மட்டும்உங்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறானா?
தீமையை செய்யாமல் மட்டும் இருந்தால் போதாது. அதைத் தடுக்காமல் இருந்தாலும் எல்லாருக்கும் தண்டனையுண்டு என்பதே இறைச்செய்தி. இதே கருத்தை எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான உதாரணம் மூலம் சொன்னார்கள்.
"ஒரு கப்பலிலே கீழ்தளத்தில் கொஞ்சம் பேரும் மேல் தளத்திலே கொஞ்சம் பேரும் பயணம் செய்கிறார்கள். கீழ் தளத்திலே உள்ளவர்கள் கப்பலிலே ஓட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டை விழுந்துவிட்டால் கப்பலிலே தண்ணீர் வந்துவிடும். தண்ணீர் வந்தால் நமக்கென்ன? கீழ்த்தளத்தில் உள்ளவர்கள்தானே மூழ்குவார்கள் என்று மேல்தளத்தில் உள்ளவர்கள் எண்ணினால் நிலைமை என்னவாகும். கீழ்தளம் மூழ்கி, மேல்தளமும் மூழ்கி அப்புறம் கப்பலே மூழ்கிவிடாதா? இந்த கதை தான் இன்று நடக்கிறது.
இந்த சமூகத்துக்கு வரும் கேடும் கெடுதியும் தீமையை தடுக்காததன் விளைவே! வருடம் தோறும் லட்சக்கணக்கிலே மக்கள் புனித ஹஜ்ஜிலே கூடுகிறார்கள். அங்கே துஆக்கள் கபுலாகும் இடங்கள் இருக்கத்தானே செய்கின்றன. அங்கெல்லாம் துஆ கேட்பவர்களில் ஒருத்தர் கூடவா இந்த சமுதாயத்துக்கு ஏற்பட்டிருக்கும் அவல நிலையை போக்க துஆ கேட்பதில்லை. யோசிக்க வேண்டும். தீமையை தடுக்க முயற்சி செய்யாதவரை எத்தனைபேர் துஆ கேட்டாலும் சரி எத்தனை "அபூர்வ துஆ" நடத்தி எத்தனை மணிநேரம் துஆ கேட்டாலும் சரிதான் பலன் பூஜ்ஜியமே!
"என்னபாய்! இதெல்லாம் கொலை கொள்ளை அளவுக்கு பெரிய பாரதூரமான விஷயமா? இதைப் போய் பெரிசுப்படுத்தறீங்களே?"
ஹஜ்ஜத்துல் விதாவிலே தனது கடைசிப் பேருரையிலே எம்பெருமானார் சொன்னது என்ன தெரியுமா..! நீங்கள் சாத்தானிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவன் உங்களை அவனை வணங்குமாறு செய்துவிடுவான் என்று நான் அஞ்சவில்லை. ஆனால் சின்ன சின்ன பாவங்களை செய்ய வைத்தே உங்களை வழி கொடுப்பான் என்றே நான் அஞ்சுகிறேன்" என்றார்களே. "இப்போது சொல்லுங்க பாய் சின்ன சின்ன பாவங்களையும் நாம தடுக்கனுமா வேண்டாமா?".
தீமையை தடுப்பதென்றால் ஆளுக்கொரு வாளையும், கட்டையையும் எடுத்துக்கொண்டு செல்லச் சொல்லவில்லை. அதற்கும் சில வரையரைகளை தந்திருக்கிறது மார்க்கம்.
"தீமையை உங்களுக்கு சக்தி இருந்தால் கரத்தால் தடுங்கள். இல்லையென்றால் வாயால் தடுங்கள். அதற்கும் உங்களுக்குச் சக்தியில்லை என்று சொன்னால் அந்த தீமையை மனதால் வெறுத்து அதைவிட்டும் ஒதுங்கி விடுங்கள்;. இதுதான் ஈமானின் கடைசி நிலை என்றார்கள் எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
உங்களிடம் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் தீமையை மனதால் வெறுத்து ஒதுக்கும் கடைசி நிலையையாவது நாம் கை கொள்ள வேண்டும்.
--
No comments:
Post a Comment