Wednesday, February 5, 2014

பேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழிகள் எவை?

பேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழிகள் எவை?

எவரைப் பார்த்தாலும் தலைக்கு மேல் வேலை என்கிறார்கள். தங்களது சொந்த வேலைகளையும் வேறு யாராவது செய்து கொடுத்தால்தான் அவர்களுக்கு மனதில் திருப்தி. ஆள் இல்லாவிட்டால் எதாவது மெசீன் அல்லது மருந்து தங்களுக்கு கைகொடுக்குமா எனப் பேயாய் அலைகிறார்கள்.
'எடையைக் குறைக்க வேண்டும் என்றால் உணவைக் குறைத்து உடலுக்கான வேலையை அதிகரியுங்கள்' என்று மருத்துவர் சொன்னால் மறு காதுவழி அச்செய்தியை வெளியே போக விட்டுவிடுவார்கள்.

'
எடையைக் குறைக்க என்ன மருந்து இருக்கு' என்ற கேள்விதான் வரும். சுய முயற்சிக்கு மனமும் இல்லை. நேரமும் இல்லை இத்தகையவர்களுக்கு.

அதே போலத்தான் பேன் பிரச்சனையும். 'பேன் பார்க்க நேரமில்லை' என்பார்கள். ஈர் கோலி என்றால் என்னவென்று கேட்கின்ற காலமாகிவிட்டது.
'பேன் மருந்து எத்தனை தடவை இவளுக்கு வைத்துவிட்டேன். காசைக் கொட்டினதுதான் மிச்சம் பேன் தொலையக் காணோம்' என்று சொன்னாள் ஒரு அம்மா. சொல்வது எங்கோ ஒரு அம்மா மாத்திரம் அல்ல. ஒட்டுமொத்தமாக எல்லா அம்மாக்களும்தான் இப்படித்தான் கவலைப்படுகிறார்கள்.

விட்டுத் தொலையாத தொல்லை

மருந்து வைத்தும் இவர்களது பேன் தொல்லை நீங்காததற்குக் காரணம் என்ன?

மீண்டும் மீண்டும் தொற்றுவதுதான்!

எங்கிருந்து தொற்றுகிறது? எவ்வாறு தொற்றுகிறது?

முற்றாக ஒழியாதது ஏன்?

பேன்களுக்குப் பறக்கத் தெரியாது. ஒருவரிலிருந்து மற்றவருக்குப் பாய்ந்து செல்லவும் தெரியாது. ஊர்ந்து செல்லத்தான் முடியும். எனவே பாடசாலையில் ஒரு பிள்ளையிலிருந்து மற்றப் பிள்ளைக்குத் தொற்றுகிறது எனில் அவர்களது தலைகள் ஒன்றுடன் மற்றொன்று நெருக்கி வர வேண்டும்.

அவ்வாறெனில் பாடசாலைகளில் அவர்கள் ஒருவரது தலையுடன் மற்றவர் தலையைத் தேய்க்கிறார்களா, முத்தம் இடுகிறார்களா. தன்தலையைப் பிராண்டியபின் மற்றவர் தலையை கைகளால் தீண்டுவதாலும் தொற்றலாம்.
பாடசாலைகளை விட வீட்டில்தான் மிக நெருங்கிய உறவுகளுக்குச் சாத்தியங்கள் அதிகம். சகோதரங்கள் ஒன்றுடன் ஒன்று கொஞ்சிக் குலவும். ஒரே கட்டிலில் தலைகள் உரசப் படுத்திருக்கக் கூடும். அதன் காரணமாக வீட்டில் ஒருவருக்கு பேன் இருந்தால் மற்றவருக்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவேதான் இடநெருக்கடி உள்ள சூழலில் அவை வேகமாகப் பரவுகின்றன.

ஆனால் பேன்கள் ஒருவரது தலையிலிருந்துதான் மற்றவருக்குத் தொற்ற வேண்டும் என்றில்லை. பேன் உள்ளவரது தலையோடு தொடர்பு பெறும் நபரிலிருந்து மட்டுமின்றி எந்தப் பொருளிலிருந்தும் மற்றொருவருக்குத் தொற்றலாம்.

எனவே பேன் உள்ளவரது தலையுடன் தொடர்புறும் தலையணை, பெற்சீட், டவல், தொப்பி, கொண்டை கிளிப், சீப்பு போன்றவற்றால் மற்றவர்களுக்குத் தொற்றும். அதே போல ஷோபா, மெத்தை, போன்றவற்றாலும் தொற்றலாம்.

அடியோடு அழிக்க

அத்தகைய துணிமணிகளை சுடுநீரில் தோய்ப்பது அவசியம். தளபாடங்கள், மற்றும் தரைவிரிப்புகளை  வக்யூம் கிளினரினால் சுத்தப்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் பொம்மைகளிலும் அவை சில நாட்களுக்கு மறைந்திருக்கலாம். சில பொம்மைகள் சுடுநீரில் கழுவக் கூடியவை. ஆனால் சில கழுவ முடியாதவை. அவற்றை பிளாஸ்டிக் பைகளில் போட்டு வாயை இறுக்கமாக மூடிக் கட்டி சில வாரங்களுக்கு வைத்தால் பேன் ஈர் யாவும் அழிந்து விடும்.

பேன்களைக் கண்டறிய

பேன் புளுத்தால் தலையில் இருப்பதைக் கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. ஆனால் ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பதற்கு சற்றுப் பொறுமை தேவை.

நல்ல வெளிச்சமுள்ள இடத்தில் வைத்து குழந்தையின் தலையைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியாக நிதானமாகத் தேடுங்கள். குடுகுடு வென ஓடும் பேன்களைக் கண்டுபிடிப்பதில் சிரமமில்லை.

ஆனால் பேனின் முட்டைகளான ஈர்களைக் கண்டறிவதில்தான் பிரச்சனை ஏற்படும். அவை ஈரா அல்லது பொடுகுத் துகளா என்ற சந்தேகம் ஏற்படுவது சகசம். பொடுகுத் துகள்கள் போலல்லாது ஈர்கள் தலைமுடியுடன் இறுக்கமாக ஒட்டியிருக்கும். இலகுவில் எடுக்க முடியாது.

உயிருள்ள முட்டைகள் பொதுவாக தலைமுடியின் அடிப்பாகத்தில் காணப்படும். அவை மெல்லிய மஞ்சள் அல்லது பிரவுண் நிறத்தில் இருக்கலாம். பொரித்த முட்டைகள் பொதுவாக தடிப்பமின்றியும் வெண்நிறமாகவும் தோன்றும்.


பொதுவாகப் பேன்களும் முட்டைகளும் காதின் பின்புறமாகவும் பிடரிப் பகுதியிலும் அதிகம் காணப்படும்.

சிகிச்சை

தலையில் பேன் இருப்பதைக் கண்டுபிடித்தால் அதை ஒழிப்பதற்கான விசேட சம்பூக்களை அல்லது லோஷன்களைப் பயன்படுத்தித் தலையைக் கழுவ வேண்டும்.

பொதுவாக அத்தகைய சம்பூக்களை தலையில் தடவி சில நிமிடங்கள் கழித்த பின்னரே தலையை அலசிக் கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால்தான் பேனுடன் ஈரும் மரணிக்கும். ஒவ்வொரு சம்பூவையும் உபயோகிக்கும் முறை பற்றியும் அவற்றுடன் விசேட அறிவுறுத்தல்கள் கொடுத்திருப்பார்கள் அவற்றை கவனமாகப் பின்பற்ற வேண்டும். இலங்கையில் இப்பொழுது 1% permethrin    உள்ள சம்பூக்களே பெருமளவில் உபயோகிக்கப்படுகிறது.
அவ்வாறு கழவியதுடன் வேலை முடிந்தது என ஓய்திருக்க வேண்டாம். தலையைக் கழுவிய பின்னர் பேன்களையும் ஈர்களையும் அகற்றுவதற்கான விசேட சீப்பினால் தலைமுடியைச் சீவி உயிர் பிழைத்திருப்பவற்றை அகற்ற வேண்டும். ஒரிரு வாரகாலத்திற்கு விசேட சீப்புகளால் அவ்வாறு தினமும் தலையைச் சீவினால் மட்டுமே ஈர்களை முற்றாக அகற்ற முடியும்.

ஈர்ச் சீப்புகளால் அல்லது ஈர்கோலிகளால் சீவுவதற்கு முன்னர் தலையில் சற்று எண்ணெய் பூசுவதால் ஈர்கள் இலகுவாகக் கழன்று வரும்.
ஒருமுறை மருந்து அல்லது சம்பூ வைத்து முழுகிய பின்னர் சில நாட்களுக்கு தலையைக் கழுவக் கூடாது. இதன் மூலமாக மருந்தின் பலனைப் பூரணமாகப் பெற முடியும்.

10
நாட்களுக்குப் பின்னர் மீண்டும் மேற் கூறிய செயற்பாட்டை மீண்டும் ஒருமுறை செய்வதன் மூலம் எஞ்சியிருக்கும் ஈர்களையும் பேன்களையும் தொலைக்கலாம். ஏனெனில் பேன்கள் ஒரு மாதகாலம் வரை உயிர் வாழக் கூடியவை. ஆனால் ஈர்கள் 2 வாரங்கள் வரை உயிர் வாழக் கூடியவை என்பதாலேயே மீண்டும் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

வீட்டில் பலருக்குப் பேன் தொல்லை இருந்தால் எல்லோரும் ஒரு நாளில் அவ்வாறு செய்வது அவசியம்.

எவ்வாறெனினும் வீட்டில் உள்ளவர்கள் சீப்பு, தொப்பி, பிரஸ் போன்ற தனித்தனியாக வைத்து உபயோகிக்க வேண்டும். பொதுவாக ஒன்றையே உபயோகிப்பதை அல்லது மாற்றி மாற்றி உபயோகிப்பது கூடாது.

பின் விளைவுகள்

பேன்தொல்லையால் ஏதாவது பின் பிளைவுகள் ஏற்படுமா?

பெதுவாக பேன் உள்ளவர்களுக்கு தலையில் கடுமையான அரிப்பு இருக்கும். தலையைச் சொறிந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் தலையைச் சொறிபவர்களுக்கு எல்லாம் தலையில் பேன்தான் இருக்கிறது என முடிவு கட்டிவிடக் கூடாது.
பொடுகு, தலைச் சருமத்தில் அழற்சி போன்ற நோய்கள் இருந்தாலும் தலை அரிப்பு ஏற்படும். அரிப்பைத் தவிர வேறு ஆபத்தான நோய்களுக்குப் பேன்கள் காரணமாவதில்லை. பேன் மூலம் வேறு நோய்கள் பரவுவதுமில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்


--
*more articles click*
www.sahabudeen.com


No comments: