Saturday, February 22, 2014

வாய்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

வாய்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

அந்த முதியவர் வந்து உட்கார்ந்து தனது நோயைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
நான் எனது சுழலும் கதிரையைச் சற்றுப் பின் நகர்த்திக் கொண்டேன்.
இப்பொழுது என்னால் சலனமின்றி அவர் சொல்வதைக் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
வாய்நாற்றம் என்பது பொதுவாக அப்பிரச்சனை உள்ளவரை விட அவரோடு தொடர்பாடல் செய்ய வேண்டியவர்களையே முதலில் உணரச் செய்கிறது.
அவரைச் சுற்றியுள்ளவர்கள் இவரது வாய்நாற்றத்தை உணர்ந்தும் நாகரீகம் கருதி நேரடியாகச் சொல்வதைத் தவிர்ப்பர்.
அந்த மணம் இவருக்கு பழக்கப்பட்டுப் போவதால் இவரது நாசி அதை உணர்ந்து அச் செய்தியை மூளைக்கக் கடத்தத் தவறிவிடுவதால் இவ்வாறு நேர்கிறது.
அதே நேரம் வாய்நாற்றம் உள்ளவர்களையே அதிக பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்பதும் உண்மையே.
மற்றவர்கள் இவரோடு உரையாடுவதை விரைவில் வெட்டிவிடவே முயல்வர். இதனால் தொழில் ரீதியாகவும்,
நட்பு உறவு ரீதிகளாகவும் பாதிப்புகள் ஏற்படுவதுடன்,
தாழ்வு மனப்பான்மைக்கும் இட்டுச் செல்லும்.
பொதுவாக எவருக்குமே காலையில் நித்திரைவிட்டு எழும்போது வாய் நாற்றம் சற்று இருக்கவே செய்யும். இது இயற்கையானது. தூக்கத்தின்போது உமிழ் நீர் சுரப்பது குறைவாக இருப்பதால் வாய் வரண்டு கிருமிகள் அதிகரிப்பதால் இது நேர்கிறது.
நாம் பல்விளக்கி, வாய் கொப்பளிக்க அது நீங்கும். அத்தகைய உதயகால வாய்நாற்றமானது வாயைத் திறந்து கொண்டு தூங்குபவர்களில் அதிகமாகும்.
பல்லுகள் மிதப்பாக இருப்பவர்கள், மூக்கடைப்பு உள்ளவர்கள் குறட்டை விடுபவர்களில் அதிகம் இருக்கக் கூடும்.
இதைத் தவிர காய்ச்சல், வயிற்றோட்டம், டொன்சிலைடிஸ், போன்ற பல்வேறு நோய்களின் போதும் ஏற்படலாம். ஆயினும் நோய் குணமாக இவை மாறிவிடும்.
உள்ளி, வெங்காயம், சீஸ் போன்ற உணவுச் சுவையூட்டிகளும், மது, புகைத்தல் போன்ற பழக்கங்களும் காரணமாகின்றன.
இவற்றிற்கு மணத்தைக் கொடுக்கும் இராசாயனப் பதார்த்தங்கள் உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு குருதிச் சுற்றோட்டத்தில் கலந்து மீண்டும் சுவாசக் காற்றில் வெளிப்படுவதாலேயே வாய் மணம் ஏற்படுகின்றது.
ஆயினும் நாட்பட்ட அல்லது நீண்ட காலம் தொடரும் வாய்நாற்றம் மிகவும் பிரச்சனைக்கு உரியது.
வாயை ஒழுங்காகச் சுத்தம் செய்யாததால் பற்களுக்கிடையே உணவுத் துகள்கள் தங்கி நிற்கும்போது அதில் பக்டீரியா தொற்று ஏற்படுவதாலேயே இது நேர்கிறது. பக்றீரியா தொற்றுள்ள சீழ் நாறுவதை ஒத்தது இது.
பற்களிடையே இடைவெளி இருப்பவர்களும், ஒழுங்கான அமைப்பின்றி பல்வரிசை தாறுமாறக இருப்பவர்களும் கூடிய அவதானம் எடுப்பது அவசியம்.
ஏனெனில் அத்தகையவர்கள் அதிக அக்கறையோடு சுத்தம் செய்தால் மாத்திரமே பற்களுக்கு இடையே சிக்கியுள்ள உணவுத் துகள்களை முற்றாக அகற்ற முடியும்.
பற்சொத்தை உள்ளவர்கள் முரசு கரைதல் போன்ற முரசு நோயுள்ளவர்களிலும் வாய்நாற்றம் அதிகம் ஏற்படுகிறது.
நீரிழிவு கட்டுப்பாடில் இல்லாதவர்களில் முரசு நோய்கள் அதிகம். அதனால் வாய்நாற்றமும் அதிகம்.
மூக்கில் உள்ளபிரச்சனைகளும் வாய் நாற்றத்திற்குக் காரணமாகலாம்.
மூக்கடைப்பு உள்ளவர்கள், மூக்கில் நீர்க்கட்டி (Nasal Polyp) உள்ளவர்களிலும் ஏற்படுகிறது.
சிறு பிள்ளைகளில் இவ்வாறான மணம் இருந்தால் அது ஏதாவது மூக்கினுள் வைக்கப்பட்ட அந்நியப் பொருள் காரணமாகலாம்.
மூக்கினுள் குண்டுமணி, ரப்பர் துண்டுகள், அழிரப்பர் போன்ற பல பொருட்களை பிள்ளைகளின் மூக்கினுள் இருந்து அகற்றி துர்நாற்றத்தை ஒழித்த அனுபவம் எனக்கு நிறையவே உண்டு.
உணவுகளால் வாய் நாற்றம் ஏற்படுவது போலவே உணவு உண்ணமால் பட்டினி கிடப்பதும், விரதம் அனுஷ்டிப்பதும் கூட வாய் நாற்றத்தை ஏற்படுத்தலாம்.
அதற்குக் காரணம் பட்டினியிருக்கும் நேரங்களில் எமது உடலின் சக்தித் தேவைகளுக்காக கொழுப்பு கரைக்கப்படுகிறது. இதன்போது 'கீட்டோன்' என்ற இரசாயனப் பொருள் உற்பத்தியாகிறது. இது சுவாசத்தோடு வெளிவரும்போது வாய்நாற்றமாகத் தோன்றும்.
இவ்வாறு பல காரணங்களைச் சொன்னாலும் பெரும்பாலும் வாயிலிருந்தே இது ஏற்படுகிறது.
  • ஏற்கனவே குறிப்பிட்டது போல சரியாகச் சுத்தம் செய்யாததால் பல் இடுக்குகளுக்குள்ளும், முரசுகளிலும ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுத்துகள் முக்கிய காரணமாகும்.
  • ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களில் பக்டிரீயா கிருமிகள் சேர்ந்து அழுகிச் சேதமடையும். அதன்போது வெளியேறும் வாயுக்கள்தான் துர்நாற்றத்திற்குக் காரணமாகும்.
  • பற்களின் மேல் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களில் உமிழ் நீரும், பக்டீரியா கிருமிகளும் சேரும்போது பிளாக் (Dental Plaque) எனப்படும் மென் படலமாகப் படியும். இதில் கல்சியமும் சேர்ந்து இறுகிக் காரையாகப் (Tartar)படியும்.
  • அத்தகைய காரையை அகற்றாவிட்டால் பற்கள் ஆட்டம் கண்டு விரைவில் விழுந்துவிடும். ஆதலால் பல்மருத்துவரிடம் காட்டி அவற்றைச் சுத்தம் செய்வது அவசியம். காரை இறுக்கமாக பற்களின் மேல் ஒட்டிக்கொள்ளும். பற்களுக்கும் முரசுக்கும் இடையேயும் பரவி முரசு நோய்களுக்கும் இட்டுச் செல்லும். இதனால் முரசுகள் அழற்சியடைந்து வீங்கும். பற்களை துலக்கும் போது இரத்;தம் வடிவதற்குக் காரணம் இத்தகைய (Gingivitis) முரசு நோய்தான். இவை யாவுமே வாய் நாற்றத்தைக் கொண்டுவரும்.
  • சிலருக்கு நாக்கின் பிற்பகுதியில் வெள்ளையாக அழுக்குப் படர்வதுண்டு. இது பொதுவாக மூக்கின் மேற்பாகத்திலிருந்து சளி உட்புறமாகக் கசிவதால் (Post Nasal Drip) ஏற்படலாம். இதுவும் வாய்நாற்றத்திற்குக் காரணமாகலாம்.
இவ்வாறு வாய்நாற்றத்திற்குக் காரணங்கள் பல. அடிப்படைக் காரணத்தைக் கண்டு பிடித்து அதை நிவரத்தி செய்ய வாய்நாற்றம் முற்றாக நீங்கும்.
வாய்நாற்றத்தை நீக்க நீங்கள் அவதானிக்க வேண்டிய விடயங்களை மற்றொரு கட்டுரையில் பார்க்கலாம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
நன்றி :- தினக்குரல்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: