Sunday, February 9, 2014

வேலை தேடி வருவோருக்கு…



--
*more articles click*
www.sahabudeen.com


வேலை தேடி வருவோருக்கு

வேலைதேடுவோர்க்கு சில அனுபவ குறிப்புகள் :
கண்களில் கனவுகளோடும், கைகளில் கோப்புகளோடும் கழுத்தில் டைகளோடும்  வேலை தேடி நிறைய பேர் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வருகிறார்கள். வலைதளங்களிலும், செய்தித்தாள்களிலும்  தெரிந்தவர்கள் மூலமாகவும் தான் அறிந்த வேலை முதல் அறியாத வேலைவரை எப்படியாவது ஒரு வேலையில் அமர்ந்துவிடவேண்டுமென்று  முயற்சி செய்கிறார்கள். சிலருக்கு கூடி வருகிறது பலருக்கு கூடுவது இல்லை.
வேலை கிடைக்காதவர்கள், தங்களுக்கு போதுமான தகுதிகள் இருந்தும்  ஏன் அந்த வேலை கிடைக்கவில்லை என்று ஆராய்ந்து பார்ப்பது இல்லை. வேலைக்கு அமர்த்தப்படுவது என்பது இரு முக்கிய காரணிகளின் கலவைகளின் வெற்றியாக  இருக்கும்.
ஒன்று நமது கல்வி தகுதிகள், அனுபவங்கள், எதிர்பார்க்கும் சம்பளம், நமது பின்பலம் ஆகியவைகள்.
அடுத்தது அந்த தகுதிகளை நாம் உண்மையிலேயே பெற்று இருக்கிறோம் என்பதை நம்மை  பேட்டி காண்பவர்  உணருமளவு நம்முடைய நடை, உடை, பாவனைகளால் எப்படி எடுத்துக்காட்டுகிறோம் என்பது. இது மிக, மிக  முக்கியமானது.
பொதுவாக ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்கு ஒரு தனிப்பட்ட ஆள் அவர் பெற்றிருக்கும் தனிப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் மட்டும் எப்படி பொருத்தமானவர் ஆவார் என்பதை அளவிட்டு சொல்ல முடியாது. ஆனால் வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் கல்வி தகுதியுடன் கூடவே ஏன் அதைக்காட்டிலும் வேலை தேடுபவர்களின் மனப்பக்குவத்தையும், நிறுவனத்தில் உள்ள மற்றவர்களுடன் எப்படி ஒத்துப்போய் வேலை செய்வார் என்பதையும், நிறுவனத்தின் இயல்புக்கு எந்த வகையில் ஏற்றவராக இருப்பார் என்பதையும், எவ்வளவு விரைவில் தன்னை முழுதாக ஈடுபடுத்தி காரியங்களை கற்றுக்கொள்வார் என்பதையும் அளவிடுவார்கள்.
நேர்காணலின்போது நீங்கள் உங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் பாங்கும் பக்குவமும் உங்களின் கல்வியின் பின்பலத்தையும், தொழில்நுட்ப அறிவின் பட்டியலிடப்பட்ட்ட அனுபவங்களின் தொகுப்பையும்  விடவும் கை கொடுக்கும். இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
வெற்றிபெற்றவர்களில் ஒருவராக உங்களை ஆக்கக்கூடிய சிலவற்றை குறிப்பாகவும் ஆலோசனையாகவும் அனுபவத்தில் இருந்து தர விரும்புகிறேன்.
1. நீங்கள் நிறுவனத்துக்கு தரும் தொடர்பு முகவரியும், தொலைபேசியும் உடனே தொடர்புகொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும். விசிட் விசாவில் வேலை தேடி வருபவர்கள் யாராவது தெரிந்த மாமா, மச்சான், நண்பர் உடைய தொலைபேசி எண்ணை  தந்து விடுவார்கள். அவர் எங்கேயாவது ஒரு கடையில் சமுசா போடும் வேலை பார்த்துக்கொண்டு இருப்பார் அவர் இடம் பேசி அவர் உங்களுக்கு தகவல் தந்து நீங்கள் நேர்காணலுக்கு போய் சேர்வதற்குள் அந்த தமயந்தியை வேறு எந்த நளனாவது தூக்கிகொண்டு போய் இருப்பான். உங்களை இலகுவாக தொடர்புகொள்ள முடிந்த அல்லது உங்கள் கையில் உள்ள எண்களை குறிப்பிடுங்கள்.  அதுமட்டுமல்லாமல் ஈமெயில் மூலமாக உங்களுக்கும் ஏதாவது விளக்கங்கள் உங்களை நேர்முகத்துக்கு அழைக்கும் முன்பாகவே எழுதி கேட்கப்பட்டால் அவைகளுக்கு கண்ணியத்துடனும்  பொறுப்புடனும், (COURTEOUS AND PROFESSIONAL) பதில் அளியுங்கள். தொலைபேசியில் உங்களுடன் பேசுகிறவர்கள் இயல்பாக பேசினால் நீங்களும் இயல்பாகவே பேசுங்கள். நீங்கள் எந்த ஊர், எவ்வளவு நாளாக வேலை செய்கிறீர்கள். சம்பளம் சரியாக தருமா என்றெல்லாம் அவரிடம் கேள்வி கேட்காதீர்கள். நீங்கள் நேர்முகத்துக்கு அழைக்கப்படும் முன்பே உங்களைப்பற்றிய  ஒரு நல்ல மனப்படத்தை உருவாக்கி வையுங்கள்.(COMMUNICATION).
2. நிறுவனம் அழைக்கும் நேரத்துக்கு சற்று முன்பே சென்று அடைந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். கழிப்பறை   போன்றவற்றிற்கு போக வேண்டிய தேவை இருந்தால் அவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். சிலர் வியர்க்க விறுவிறுக்க ஓடி வருவார்கள். பதட்டமில்லாமல் பக்குவமாக இருக்கிறீர்களா என்பது கவனிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பதறும் காரியம் சிதறும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். (TIME KEEPING).
3. நேர்காணலுக்கு செல்லும்போது நேர்காண்பவர் இடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அனாவசியமாக தெரிந்து கொள்ள கேட்காதீர்கள். அவரிடம் நகைச்சுவை துணுக்குகளை வீசிவிடாதீர்கள்.  (சேடை விடாதீர்கள்.) இப்படித்தான் தாடிவைத்திருந்த நேர்கண்ட ஒருவரைப்பற்றி அவரது தாடி சாம்பலில் விழுந்த இடியப்பம் மாதிரி இருக்கிறது என்று வெளியில் வந்து கமென்ட் அடித்து ஒருவர் ( நம்மாளுதான்) நல்ல வாய்ப்பை இழந்தார். ஒரு சிறிய புன்முறுவல் பூத்த முகம் வெற்றிகளை கொண்டுவந்து சேர்க்கும். உரத்த குரலில் பேசாதீர்கள். அது உங்கள் தன்மையாக இருந்தாலும் மாற்றிகொள்ளுங்கள். மென்மையாக மெல்லிய குரலில் அதே நேரம் தெளிவாக பேசுங்கள். அதற்காக முனுமுனுக்காதீர்கள். கால்களை ஆட்டிக்கொண்டே பேசாதீர்கள். பேசும்போது கைகளில் சொடக்கு விடாதீர்கள். தோள்களை சும்மா சும்மா தூக்கி தூக்கி இறக்காதீர்கள். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் வாய்களை சுத்தமாக கழுவிக்கொள்வதுடன் உங்கள் உடையிலும் அந்த புகை நாற்றம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.சூயிங்க் கம்களை வாயில் போட்டு சொதப்பிக்கொண்டே  பேசாதீர்கள். உங்கள் வாழ்வும் சொதப்பிவிடும். ( POLITENSS ).
4. ஆடை அணிந்து செல்வதில் தனி கவனம் செலுத்துங்கள். சிலர் நேர்முகத்தேர்வுக்கு போகும்போது டை கட்டிப்போகவேண்டும் என்று  ஒரு சடங்காக வைத்து இருப்பார்கள். சில நிறுவன மேலாளர்கள் அதை விரும்பமாட்டார்கள். உஷ்ண பிரதேசத்தில் கொளுத்தும் வெயிலில் நடந்து வருபவன் இப்படி டை கட்டக்கூடாது என்று கூட அறியாமல் இருக்கிறானே என்று கணக்குபோட்டு கழித்து விடுபவர்கள் இருக்கக்கூடும். எதற்கும் டை எடுத்து பேண்ட் பக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால கட்டிக்கொள்ளுங்கள். (நான் அப்படித்தான் மஸ்கட்டில் சுற்றினேன்) . அந்த நிறுவனத்தில் ஏற்கனவே வேலை செய்பவர்கள் அணிந்துள்ள உடை முறைகளை  கவனித்து முடிவு எடுக்கலாம். நிறைய டிசைன் போட்ட சட்டைகளை பொதுவாக அணிய வேண்டாம். ஒரு லைட் கலர் அல்லது லைட் டிசைன் பொதுவாக நல்லது. டி சட்டை போடவேண்டியதாக இருந்தால் அதில் எதுவும் அச்சிடப்பட்ட  கோஷங்கள் இல்லாமலும், இரட்டை அர்த்தம் தொனிக்கும் வாசகங்கள் இல்லாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.  ஒற்றை காதில் கடுக்கன், வளையம், கையில் காப்பு, தலை முடியை கோதிக்கட்டி அதில் ஒரு ரப்பர் பேன்ட்  (ஆண்களுக்கு) இவைகளை அறவே தவிர்த்து விடவும். மிகவும் அதிகமாக வாசனை ஸ்ப்ரேக்களை தெளித்துக்கொண்டு போகாதீர்கள். நேர்காண்பவருக்கு பிடிக்காத வாசனையாக இருந்தால் அது உங்களையும் அவருக்கு பிடிக்காதவராக்கிவிடும்.( AVOID UNUSUAL APPEARANCE).
5 .முக்கியமாக எந்த நிறுவனத்துக்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்களோ அந்த நிறுவனம் பற்றிய தகவல்களை முதல்நாளோ அல்லது முன்கூட்டியோ வெப்சைட்டில் போய் தேடி படித்து வைத்துக்கொள்ளவும். நேர்காணலின்போது அந்த நிறுவனம் ஈடு பட்டுள்ள தொழில் காரியங்கள் பற்றி  (BUSINESS ACTIVITIES ) பேச்சுவாக்கில் வரும் மாதிரியாக  தெரிந்துவைத்து இருப்பதாக குறிப்பிட்டுக்காட்டினால் அந்த தொழிலைபற்றியும் நிறுவனத்தைப்பற்றியும்  ஏற்கனவே நீங்கள் ஆர்வமுடன் அறிந்து இருக்கிறீர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு உங்களுடைய வெற்றிக்கு அது அடிகோலும். அதாவது ஒரு நிறுவனத்துக்கு வேலை தேடி செல்லும் முன்பே அதைப்பற்றி வீட்டுப்பாடம் படியுங்கள். நீங்கள் எந்த வேலைக்கு செல்ல தகுதி படைத்து இருக்கிறீர்களோ அந்த வேலை பற்றிய தன்மைகள், அது பற்றி அந்த நிறுவனம் எந்த மாதியான கேள்விகள் கேட்பார்கள் என்பதை நீங்கள் முன் கூட்டி கணித்துக்கொள்ள இது உதவும் . முடிந்தால் அந்த நிறுவனத்தில் வேலை செய்துவரும் யாரையாவது தொடர்புகொள்ள வாய்ப்பு இருந்தால் தொடர்பு கொண்டு ஒரு முன்னோட்டம் பெற்றுக்கொள்ள முயலலாம். ( HOME WORK ).
6. பேட்டியின்போது நிறுவன மேலாளர் வேலையின் தன்மை பற்றிய சில குறிப்புகளை மேலோட்டமாக தரக்கூடும். அவைகளை நன்கு கவனித்து கேட்கவும் வேண்டும். அப்போதே நீங்கள சில முடிவுகளை குறிப்பட வேண்டியிருக்கும் . அதாவது மேலாளர் அவருடைய எதிர்பார்ப்புகளை குறிப்பிடலாம் நீங்களும் உங்களுடைய எதிர்பார்ப்புகளை எடுத்து சொல்ல வேண்டி இருக்கும். கவனம் சிதறாமல் இருந்தால்தான் இது சாத்தியம். பேட்டியாளர் உங்களிடம் வைக்கும் வேலை பற்றிய குறிப்புகளுக்கோ அல்லது நிறுவனம் உங்களுக்கு தரத்தயாராக இருக்கும் ஈட்டுத்தொகை மற்றும் சலுகைகளுக்கோ ( PACKAGE) நீங்கள் உடனடியாக பதில் தராமல் வானத்தைப்பார்த்துக்கொண்டோ தாவக்கொட்டையை தடவிக்கொண்டோ இருந்தால் அது உங்களுடைய முடிவு எடுக்கும் தன்மை மீது ஒரு கரும்புள்ளி விழ வைக்கும். பேசுகிறபோது இல்லை என்பதற்கோ ஆமாம் என்பதற்கோ தலையை ஆட்டாதீர்கள்.  வாய் திறந்து பேசுங்கள். ( LISTEN & ANSWER).
7. கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களை ஒரு நல்ல சுத்தமான் கோப்பில் ஒவ்வொரு சான்றிதழையும் வெளியில் பளிச்சென்று தெரியும்படியான ட்ரான்ஸ்பரென்ட் சீட்களில் வைத்து கோர்த்து சமர்ப்பியுங்கள். அத்துடன் கலவிச்சான்றிதழ்களை தனியாகவும் அனுபவ சான்றிதழ்களை தனியாகவும் பங்கீடு செய்து பிரித்து கோர்த்து வைப்பது சிறப்புடையதாகும்.சிலர் கல்விச்சான்றிதழ்களுக்கு இடையில் அனுபவ சான்றிதழ்களை வைத்து குழப்பி இருப்பார்கள். அத்துடன் நீங்களே வாங்கி இருந்தாலும் தேவைப்படாத சான்றிதழ்களை வைத்து கோப்பை பருமனாக்கி விடாதீர்கள். உதாரணமாக பள்ளியில் படிக்கும் காலத்தில் திப்பு சுல்தான் நாடகத்தில் நடித்ததற்கு கிடைத்த சான்றிதழ்,, நாட்டு நற்பணியில் போய் சேண்டாக்கோட்டையில் புதர் வெட்டியதற்கான சான்றிதழ் போன்றவற்றை இணைக்காதீர்கள். அவைகளை உங்கள் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். சிலர் சான்றிதழ்களை கைகளில் பேப்பர் தோசையைபோல் சுருட்டிகொண்டு வருவார்கள். வேறு சிலரோ ஒவ்வொரு சான்றிதழகளையும் கேட்க கேட்க எடுத்துக்கொடுப்பர்கள். இவைகள் தவிர்க்கப்பட வேண்டும். (PROFESSIONAL  PRESENTATION)
8. வேலை கிடைத்துவிட்டது . ஆனாலும் இந்த பயணம் முடிவுறாது. பொதுவாக நமக்கு தெரியாமலேயே சில குறிப்பிட்ட காலம்வரை நம்மை கண்காணிக்க சில நிறுவனங்களில் ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆகவே நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைகளில் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் உங்களின் கண்காணிப்பாளர் காணும் வகையில் வெளிப்படுத்துங்கள். அந்த நிறுவனத்துக்கே உரித்தான சில பழக்கவழக்கங்களுக்கு மார்க்கத்துக்கு மாற்றமில்லாதவகையில் மாறிக்கொள்ளுங்கள்.  அப்போதுதான் நீண்ட காலத்துக்கு ஒரு நிறுவனத்தில் தாக்குப்பிடிக்க இயலும். முன்னேற இயலும். (FLEXIBLE TO NEW ENVIRONMENTS) .
ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லாவற்றுக்கும் தலையாயதாக எந்த வேலையையும் தேடி வெளியே கிளம்பும் முன்பு இறைவனை  தொழுதுவிட்டு  செல்லுங்கள். அன்றைய காலை  தொழுகையை கண்டிப்பாக நிறைவேற்றிவிடுங்கள். கிட்ட அரிதானது என்று நினைப்பதும் கிட்டும். தன்னம்பிக்கை உண்டாகும். இறைவன் அருளால் எல்லாம் நல்லபடி நடந்தேறும்.
முடிவாக, படித்துவிட்டு பட்டங்களையும் பட்டயங்களையும் மட்டும் பை நிறைய கொண்டு வந்தால் மட்டும் வேலை கிடைத்துவிடாது. பழக்க வழக்கங்கள், தகவல தொடர்பு, நேரம் காப்பது, தோற்றம், அணிந்திருக்கும் ஆடை, பார்க்கப்போகும் வேலைகளைப்பற்றிய ஒரு அறிமுக முன்னோட்டத்தை அறிந்து வைத்திருப்பது, சூழ்நிலைக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்வது ஆகியவைகளும் ஒன்று கூடினால் வெற்றி உங்களுக்கே !
'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி
Source :http://nijampage.blogspot.in/2013/04/blog-post.html?showComment=1365528037858#c6474462479169040581
http://seasonsnidur.com

No comments: