Sunday, July 13, 2014

இஃதிகாஃப்

இஃதிகாஃப்

2025.இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!"
Volume :2 Book :33

2026.ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!"
Volume :2 Book :33

2027.அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!' எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன.
Volume :2 Book :33

2028.ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது தம் தலையை (வீட்டிலிருக்கும்) என் பக்கம் நீட்டுவார்கள்; மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை நான் வாருவேன்.
Volume :2 Book :33

2029.ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; நான் அதை வாருவேன், இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள்.
Volume :2 Book :33

2030. & 2031.ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னை அணைப்பார்கள். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்.
Volume :2 Book :33

2032.இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
'மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்' என்று உமர்(ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்" என்றார்கள்.
Volume :2 Book :33

2033.ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா(ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) பார்த்தபோது அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலையில் எழுந்தபோது பள்ளியினுள் பல கூடாரங்களைக் கண்டு, 'இவை என்ன?' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?' என்று கேட்டுவிட்டு, அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதைவிட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
Volume :2 Book :33

2034.ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா(ரலி)வின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், னஸனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?' என்று கேட்டுவிட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பிவிட்டாக்hள். ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
Volume :2 Book :33

2035.ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். உம்மு ஸலமா(ரலி)வின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளைச் சார்ந்த இருவர் நடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்" எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) 'ஸுப்ஹானல்லாஹ்' என்றனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டு விடுவான் என நான் அஞ்சுகிறேன்" எனக் கூறினார்கள்.
Volume :2 Book :33

2036.அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் கூறினார்:
நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? என்று அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், 'ஆம்' நாங்கள் ரமலானின் நடுப்பத்து நாள்களில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் நாள் காலையில் வெளியேறினோம். இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், 'எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது. அதை நான் மறந்து விட்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள். அன்று ஈரமான களிமண்ணில் நான் ஸஜ்தாச் செய்வது போல் கனவு கண்டேன். யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் பள்ளிக்குத் திரும்பட்டும்' எனக் கூறினார்கள். மக்கள் பள்ளிக்குத் திரும்பினார்கள். அப்போது வானத்தில் சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்க இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களின் நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணை கண்டேன்' என்று விடையளித்தார்.
Volume :2 Book :33

2037.ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுடன் தொடர் உதிரப் போக்குடைய அவர்களின் மனைவியர்களில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அவர் காண்பார். சிலவேளை அவருக்கு அடியில் நாங்கள் ஒரு தட்டை வைப்போம். அவர் தொழுவார்.
Volume :2 Book :33

2044.அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் பத்து நாட்களே இஃதிகாஃப இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
Volume :2 Book :33

Engr.Sulthan



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: