பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டையும், ரசித்து ரசித்து செய்த உள்அலங்காரங்களையும் பராமரிப்பதில்தான் வீட்டின் அழகே அடங்கியிருக்கிறது. "என் கடன் வீடு கட்டி முடிப்பதே" என்பதுடன் முடங்கிவிட்டால், அழகு ஒளிரும் இல்லத்துக்கு நாம் காரணகர்த்தாவாக இருக்க முடியாது.
காலை முதல் இரவு வரை காத்திருக்கும் வேலைகளுக்கு நடுவே பராமரிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். தினசரி வாழ்வியலோடு பராமரிப்பையும் சேர்த்துவிட்டால் கவலை இல்லை.
வீடு விசாலமாகத் தோற்றமளிக்க வேண்டுமென்றால், வீட்டில் இருக்கும் பொருள்களை நேர்த்தியாக வைக்க வேண்டும். தேவையில்லாத பொருள்களை எக்காரணம் கொண்டும் வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது. பெரியபெரிய பொருள்களைவிட சின்னச்சின்ன கலைப்படைப்புகளே சிறந்தவை. "கலைப்பொருள்களைச் சேகரிக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு வீடு முழுக்க பொம்மைகளாக வாங்கி அடுக்கக்கூடாது. சுவர் முழுக்க படங்களாக நிறைக்காமல் மனதைக் கவரும் ஏதோவொரு ஓவியத்தை மையமாக மாட்டினால் பார்ப்பவர்களை அது கவர்ந்து இழுக்கும்.
எந்தப் பொருளை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேதான் வைக்க வேண்டும். குளிர்சாதனப்பெட்டி மீது சீப்பும், தொலைக்காட்சி மீது செல்போனையும் வைப்பது வீட்டு அலங்கார விதிக்கு எதிரானது. எடுத்த பொருளை அதனதன் இடத்தில் திருப்பி வைத்துவிட்டால் வீட்டை ஒதுங்க வைக்க, ஞாயிற்றுக்கிழமையை தனியாக ஒதுக்க வேண்டியதில்லை.
அட்டவணை போட்டு வேலை செய்தால், வீடு எப்போதுமே பளிச்சென்று இருக்கும். தினசரி வேலைகளைத் தள்ளிப்போடாமல் இருப்பதே பாதி பராமரிப்புக்குச் சமம். தினமும் வீட்டைப் பெருக்கித் துடைக்கும்போதே கையோடு மர அமலாரிகளையும் மெல்லிய துணியால் துடைக்க வேண்டும். சமையலறை சாதனங்களைச் சுத்தப்படுத்துவது, ஒட்டடை அடிப்பது போன்ற வேலைகளை வாரம் ஒருமுறை செய்யலாம். அதிக உடலுழைப்பு தேவைப்படுகிற வேலைகளை, மாதம் ஒருமுறை செய்யலாம். இப்படி தொடர்ந்து செய்வதால், வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது பதறிக்கொண்டு வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்காது.
வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே கைகொடுக்க வேண்டும். செடிகளைப் பராமரிக்கிற வேலையைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மின் சாதனங்களைக் கழட்டி, சுத்தப்படுத்தும் வேலையை ஆண்கள் ஏற்றுக் கொள்ளலாம்.
வீடு பார்வைக்கு சுத்தமாக இருப்பது மட்டுமில்லாமல், உள்அலங்காரமும் அவசியம். சுவர்களின் வண்ணங்களே நம் எண்ணங்களைப் பிரதிபலிக்கும். அதனால் கண்களை உறுத்துகிற அடர் நிறங்களைத் தவிர்த்து, மனதுக்கு இதம் தரும் வெளிர்நிறங்களைப் பூசலாம். சுவர்களின் நிறத்துக்கு ஒத்துப் போகிற நிறங்களில் திரைச்சீலைகள் இருப்பது கூடுதல் அழகு. தரைவிரிப்பும் அந்த நிறங்களுக்கு ஒத்திசைவாக இருந்தால், கச்சிதமாக இருக்கும்.
படுக்கையறைக்கு வெளிர்நீலம் அல்லது இளஞ்சிவப்பு நிறங்களைப் பரிந்துரைக்கலாம். படுக்கை விரிப்புகளும் அதே நிறங்களில் இருப்பது நல்லது.
இப்போது சின்னச்சின்ன தொட்டிகளிலும் அழகழகான பூச்செடிகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வீட்டு வரவேற்பறையிலோ, பால்கனியிலோ வைக்கலாம். அழகுக்கு அழகு, கண்களுக்கும் குளிர்ச்சி.
தி ஹிந்து
http://kulasaisulthan.wordpress.com
--
No comments:
Post a Comment