பணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்!
சமீபத்தில் அரசாங்கத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 25 பைசா நாணயம் உங்களிடம் கிடைத்தால் இனி தூக்கி எறிந்துவிடாதீர்கள். காரணம், அதன் மதிப்பு இன்றைக்கு 30 ரூபாய் என்கிறார்கள். 25 காசுக்கே இவ்வளவு மதிப்பு என்றால், பழங்கால நாணயத்திற்கு இன்னும் எவ்வளவு மதிப்பு இருக்கும்! உங்களிடம் பழங்கால நாணயங்கள் இருந்தால், அதை வைத்தே நீங்கள் பல ஆயிரம் ரூபாயைச் சம்பாதிக்கலாம். எப்படி என மெட்ராஸ் காயின் சொஸைட்டியின் நிறுவனர் டி.ஹெச்.ராவிடம் கேட்டோம்.
நாணயச் சங்கம்!
"மெட்ராஸ் காயின் சொஸைட்டி, நாணயம் சேகரிப்பாளர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவதற்காக 1991 முதலே செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் ஆர்வலர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நாணயம் சேகரிப்பு முறைகள், அதுகுறித்த சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலானவர்கள் நாணயங்களைச் சேகரித்து வருகிறார்கள். ஆனால், எப்படி சேகரிக்க வேண்டும் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியவில்லை. பழங்காலத்து நாணயங்களை சிலர் தகர டப்பாக்களில் போட்டு வைத்து வருகிறார்கள். இதனால் நாணயங்கள் நாளடைவில் துரு பிடித்துவிடும். சேகரிக்கப்படும் நாணயங்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைக்கலாம். அதைவிட கடையில் விற்கப்படும் காயின் ஆல்பங்களை வாங்கி அதில் நாணயங்களைப் போட்டு வைக்கலாம். ஆல்பத்தில் நாணயங்களைப் போடும்முன், வெதுவெதுப்பான நீரில் நாணயங்களைக் கழுவி எடுத்து பருத்தி துணியால் துடைத்து வெயிலில் சிறிது நேரம் காயவைத்து அதன்பிறகே ஆல்பத்தில் போடலாம்.
விற்பனையும், விலை நிர்ணயமும்!
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அஸ்விதா கேலரியில் நாணயம் சேகரிப்பாளர்கள், வியாபாரிகள் கூடுவார்கள். அங்கு அவர்களுக்கு இருக்கும் சந்தேகத்தை மெட்ராஸ் காயின் சொஸைட்டியில் உள்ள மூத்த நாணயம் சேகரிப்பாளர்கள் நிவர்த்தி செய்வார்கள். பின்னர் வியாபாரிகளுக்கும், சேகரிப்பாளர்களுக்கும் இடையில் இருக்கும் நாணயங்கள் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்கள் நடக்கும்.
நாணயம் விற்பவர்கள் நிர்ணயிக்கும் விலையானது வாங்கும் ஆர்வலர்களுக்கு உடன்பாடாக இல்லை என்று அவர்கள் எங்களை நாடினால், அதற்கான விலையை நிர்ணயிக்க நாங்கள் உதவுவோம். 1 அணா, 10 பைசா, 20 பைசா, குறிப்பிட்ட தலைவர்களின் உருவம் பதிக்கப்பட்ட நாணயம் மற்றும் வெளிநாட்டு அரிய நாணயங்கள் போன்றவற்றுக்கு சந்தையில் தனியாக விலை மதிப்பிடப்படுகிறது. இந்த விலை டிமாண்ட் பொறுத்து மாறும். இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள நாணயங்களின் விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் கடைகளில் கிடைக்கும். இந்தப் புத்தகத்தை வாங்கி நாணயம் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வது நல்லது" என்றார் டி.ஹெச்.ராவ்.
போலி நாணயங்கள் உஷார்!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கடை ஒன்றில், 'இங்குப் பழங்கால நாணயங்கள் விலைக்கு வாங்கப்படும்' என்ற அறிவிப்பைப் பார்த்ததும் அதற்குள் நுழைந்து விசாரித்தோம். அந்தக் கடையின் ஊழியர் ஒருவர், "வாடிக்கையாளரிடமிருந்து பழங்கால நாணயங்களைப் பெற்றுக்கொண்டு அந்த நாணயங்களின் தரத்திற்கேற்ப விலை தருகிறோம். இந்த நாணயங்களை நாங்கள் ஒன்று சேர்த்து ஆல்பம் செய்து சந்தையில் விற்றுவிடுவோம். இந்த ஆல்பங்கள் தலைவர்களின் உருவங்கள் மற்றும் பல உருவங்கள் அச்சிடப்பட்ட தொகுப்புகளாகவும், அது தயாரிக்கப்பட்ட காலம் சார்ந்தும் இருக்கும்.
வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் நாணயங்கள் நூறு முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்டவையாக இருந்தால், அவற்றின் நிலைக்கேற்ப 200 ரூபாய் முதல் 1,500 ரூபாய்வரை தருவோம். மன்னர் காலத்து நாணயங்கள், மேலும் சில அரிய வகை நாணயங்கள் லட்சம் ரூபாய் வரை விலை போகக்கூடியவை.
இதைச் சாக்காக வைத்து சிலர் போலியான நாணயங்கள், போலியாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளையும் காட்டி மக்களை ஏமாற்றி சந்தையில் விற்கின்றனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முகம் நேராக இருப்பது போன்ற நாணயம் அரசால் அச்சிடப்படவேயில்லை. ஆனால், அப்படி ஒரு நாணயம் இருப்பதாகவும் அதன் விலை 20,000 ரூபாய் என்றும் சிலர் ஏமாற்றி வருகின்றனர். அதேபோல் பழைய நூறு ரூபாய் நோட்டில், உலக உருண்டையில் பாம்புகள் சுற்றி பின்னிக் கொண்டிருப்பதுபோல போலி நோட்டுகளை அச்சிட்டு லட்சக்கணக்கில் சந்தையில் விற்கின்றனர். மக்கள் இதை நம்பி ஏமாற வேண்டாம். இந்தியன் காயின் சொஸைட்டி என்ற அமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் பழங்காலத்திலிருந்து தற்போதுள்ள நாணயங்கள் வரை இந்தியாவில் கிடைக்கும் அனைத்து நாணயங்களின் எடை, அளவு, நிறம், செய்யப்பட்ட உலோகம், காலம் போன்ற குறிப்புகள் தரப்பட்டிருக்கும். அந்தத் தகவல்களைப் பார்த்து, வாங்கும் நாணயம் உண்மையானதுதானா எனத் தெரிந்துகொள்ளலாம்" என்றார்.
கவனிக்க!
பழங்கால நாணயங்களை வாங்கும்போது பின்வரும் விஷயங்களைக் கவனிப்பது நல்லது.
* போலியான நாணயங்கள் பாலிஷ் செய்யப்பட்டிருக்கும், எடையில் மாறுதல்கள், வடிவம் மற்றும் தர வேறுபாடுகள் இருக்குமானால் அவை போலியானவை.
* எந்தெந்த கடைகள் உண்மையானவை என்று ஆராய்ந்தபின் நாணயங்கள் வாங்க வேண்டும்.
* அரசு அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட நாட்களில் பழங்கால நாணயங்கள் விற்பனைக்கு வைக்கப்படும். அதற்கான அறிவிப்புகள் செய்தித்தாள்களில் வெளியிடப்படும். அங்கு சென்று பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். சிலர் தாங்கள் சேகரித்துவைத்திருக்கும் நாணயங்களை விற்க முன்வருவார்கள். அவர்களிடமும் பெறலாம்.
இது ஓர் அறிவு சேகரிப்பு!
"என் பத்தாவது வயதில் இருந்தே பழைய ஒரு பைசாவை சேகரிக்கத் தொடங்கினேன். இன்னும் நாணயம் சேகரிக்கும் ஆர்வம் எனக்கு குறையவில்லை" என்கிறார் சதீஷ்குமார். சென்னை தாகூர் பொறியியல் கல்லூரியில் மின்சார்பு மற்றும் மின்னணுவியல் துறையில் படித்துவரும் இவர், ராஜராஜசோழன் காலத்திலிருந்த பழங்கால நாணயங்கள் முதல் தற்போதுள்ள பத்து ரூபாய் நாணயம் வரை ஆண்டுகள், அடையாளங்கள், சுதந்திரத்திற்கு முன், பின் என ஏராளமான நாணயங்களை ஆல்பங்களில் சேகரித்து வைத்திருக்கிறார்.
பிளாட்ஃபாரத்தில் பழங்கால நாணயம்!
பழங்காலத்து நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்தில் வெளியிடப் பட்ட ரூபாய் நோட்டுகள் என பல அரிய பொக்கிஷங்களை மதுரை அமெரிக்கன் கல்லூரி எதிரில் முருகன் என்பவர் பிளாட்ஃபார கடையாக வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்தத் தொழில் மூலம் மாதம் சுமார் 10,000 ரூபாய் வரை வருமானம் சம்பாதிக்கிறார்.
"பழசுக்கு மவுசு என்றுமே குறையாது. என் சிறு வயது முதலே சேகரித்த நாணயங்களையும், விலை தந்து வாங்கிய நாணயங்களையும் வைத்து இந்தத் தொழிலை செய்து வருகிறேன். இந்தத் தொழிலுக்கு வந்த ஆரம்பத்தில் மதுரை நாணய சேகரிப்பாளர் சங்கத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். அங்கே என்னைப் போல நாணயங்களைச் சேகரிப்பவர்கள் நண்பர்களானார்கள். அவர்களே என்னை இந்தத் தொழில் தொடங்க ஊக்கமளித்தனர். பின்னர் என்னால் இயன்றவரை இதில் முதலீடு செய்தேன். சிலரிடம் இதுபோல பழைய காலத்து நாணயங்கள் இருக்கும். ஆனால், அதன் மதிப்பு தெரியாது. இதுபோன்றவர்களை தேடிப் பிடித்து அவர்களிடம் உள்ள நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாங்கினேன். அவற்றை வைத்து பிளாட்ஃபார கடையாக வைத்திருக்கிறேன். இந்தத் தொழிலில் நான் செய்திருக்கும் முதலீடு 40,000 ரூபாய்தான். ஆனால், எனக்கு இதிலிருந்து மாதம் சுமார் 10,000 ரூபாய் வருமானம் வருகிறது" என்றார் பெருமையாக.
அறிவுக்கு விருந்தாகவும், நிலையான வருமானத்தையும் தரும் இந்த நாணயம் சேகரிப்பை இனி நீங்கள்கூட செய்யலாமே!
- செ.கார்த்திகேயன்,
http://kulasaisulthan.wordpress.com--
No comments:
Post a Comment