Thursday, October 23, 2014

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்! அவேர்னஸ் அம்மாக்களுக்கு அழகான கைடு!

முதல் வரவு... இரண்டாவது வரவு...

இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் தாய்மார்களுக்கு வரும் கவலை, அந்தப் புது ஜீவனின் வரவால் முதல் குழந்தையின் மனம் வாடிவிடக் கூடாது என்பதுதான். குழந்தை மனதின் சற்று சிக்கலான இந்த உளவியலை பக்குவமாகக் கடக்கும் வழிகளைக் கற்றுத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் வெங்கடேஷ் மதன் குமார்.

1. முதன் முறை தாயாகும்போது ஏற்படும் எதிர்பார்ப்பு, சந்தோஷம், அக்கறை, பரவசமெல்லாம் இரண்டாவது பிரசவத்தின் போதும் அதே அளவில் இருப்பதில்லை. உங்களுக்கு தாய்மை புதிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பிறக்கப்போகும் குழந்தைக்கு இந்த உலகம் புதிது, சுவாசம் புதிது, ஸ்பரிசம் புதிது, அம்மா புதிது. எனவே, முதல் குழந்தையை வரவேற்ற அதே உற்சாக மனநிலையுடன் இரண்டாவது குழந்தையையும் வரவேற்கத் தயாராகுங்கள்.

2. இரண்டாவது குழந்தையை கருவில் சுமக்கும் மாதங்களிலேயே அந்த புது உறவை உங்கள் முதல் குழந்தைக்கு பக்குவமாக அறிமுகப்படுத்திவிடுங்கள். 'அம்மா வயித்துல உனக்காக, உன்கூட சேர்ந்து விளையாட ஒரு தம்பி/தங்கச்சி பாப்பா வளருது...' என்று தொடர்ந்து சொல்லி வாருங்கள்.

3. ஒவ்வொரு மாதமும் மருத்துவமனைக்குச் செல்லும்போது முதல் குழந்தையையும் அழைத்துச் செல்லுங்கள். 'நீ வயித்துக்குள்ள இருந்தப்போ அம்மா இந்த பழங்கள், மாத்திரைகள் எல்லாம் சாப்பிட்டதாலதான், நீ அறிவா, ஆரோக்கியமா, அழகா பிறந்தே. அதேமாதிரி குட்டிப் பாப்பாவும் பிறக்க நீதான் அம்மாவுக்கு பழம், மாத்திரை எல்லாம் சாப்பிட்டீங்களானு கேட்டு ஞாபகப்படுத்தணும்...' என்று பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி தொடர்ந்து பேசி, பேறுகாலம் நெருங்க நெருங்க, உங்களுடன் சேர்ந்து அதுவும் தன் குட்டி தம்பி/தங்கையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் மனநிலையை வளருங்கள்.

4.. 'பாப்பா பிறந்ததுக்கு அப்புறம் கொஞ்ச நாளைக்கு அம்மா ரொம்ப டயர்டா இருப்பேன். அப்போ குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்ட, ஸ்கூல்ல விட, ஹோம் வொர்க் செய்ய வைக்க எல்லாம் அப்பா, அம்மாச்சி, தாத்தாதான் உன்னை கவனிச்சுக்குவாங்க...' என்று முன்கூட்டியே முதல் குழந்தையிடம் வேண்டுகோளாக விண்ணப்பம் போட்டுவிடுங்கள்.

5. முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் குறைந்தபட்சம் மூன்று வருட இடைவெளி இருந்தால் தாய்க்கு வளர்ப்பு சிரமமும், சேய்க்கு புரிதல் சிரமமும் குறைவாக இருக்கும்.

6.குழந்தை பிறந்த பிறகு, புதுவரவை முதல் குழந்தையின் எதிரில் நீங்களோ, மற்றவர்களோ அதிகமாக கொஞ்சுவதை தவிருங்கள். கூடவே, 'நீயும் என்னைக்கும் எனக்கு ஸ்பெஷல்' என்று, உங்கள் முதல் குழந்தைக்கான அன்பை தொடர்ந்து அதனிடம் உறுதிசெய்யுங்கள். செய்யும் சேட்டைகளுக்கான வழக்கமான கண்டிப்புகூட, 'பாப்பா வந்துட்டதாலதான் அம்மாவுக்கு நம்மை பிடிக்காம போயிடுச்சு...' என்று இந்த நேரத்தில் அதற்கு தோன்றும் என்பதால், மிகவும் பொறுமையாக அணுகுங்கள்.

7. பவுடர் டப்பா, டயபரில் ஆரம்பித்து பாத் டப், டாய்லெட் டப், வாக்கர் என்று பிறந்த குழந்தைக்கு மாதம் ஒரு புதிய பொருள் வாங்கிக்கொண்டேதான் இருக்க நேரிடும். அதில் எல்லாம் முதல் குழந்தை ஏங்கிப்போய்விடாமல் இருக்க, இந்தக் குழந்தைக்குப் புதிதாக ஒரு பொருள் வாங்கும்போது, கேம்ஸ், பென்சில் பாக்ஸ், க்ரயான்ஸ் செட் என்று முதல் குழந்தைக்கும் மறக்காமல் ஏதாவது ஒரு குட்டி கிஃப்ட் வாங்கிக் கொடுங்கள். மேலும் குட்டிப் பாப்பாவுக்கான பொருட்களை, 'பாப்பாவுக்கு இந்த டவல் வாங்குவோமா..?', 'தம்பிக்கு இந்த கலர் வாக்கர் வாங்குவோமா..?' என்று முதல் குழந்தையையே அதை தேர்ந்தெடுக்க வையுங்கள். குழந்தைக்கு பெயரிடும்போதுகூட, முதல் குழந்தையின் சாய்ஸ்களையும் கேட்டு மதிப்புக் கொடுங்கள்.

8. அம்மா, மாமியார், கணவர் என மற்றவர்கள் என்னதான் உங்கள் குழந்தையை குறையில்லாமல் பார்த்துக்கொண்டாலும், குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்ட என்று கடமையளவில் உங்கள் குழந்தைகளின் தேவைகளில் இருந்து நீங்கள் விடுபட்டிருந்தாலும், மனதளவில் அதனுடனான நெருக்கத்தை தொடர்ந்து பேணுங்கள். குழந்தை ஸ்கூல் விட்டு வந்ததும் ஒரு அணைப்பு முத்தம், 'இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்துச்சு..?' போன்ற விசாரிப்புகள், உங்கள் அருகில் உறங்கும் அரவணைப்பு என்று அதன் மீதான உங்களின் அன்புப் பிடி தளராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

9. இரண்டாவது குழந்தையின் சின்ன சின்ன தேவைகளை முதல் குழந்தையை செய்யச் சொல்லிப் பழக்குங்கள். 'அண்ணா பவுடர் எடுத்து கொடுத்தாதான் பாப்பா போட்டுப்பாளாம்', 'அக்காவுக்குதான் தம்பியோட ஜட்டி எங்க இருக்குனு தெரியுமாம்... எடுத்துட்டு வாங்க செல்லம்...' என்று, நேரடியாக வேலை வாங்காமல், இரண்டு குழந்தைகளுக்குமான பாலமாக அந்தத் தருணத்தை அமைத்துக் கொடுங்கள்.

10.. நிறைய முடி, பெரிய கண்கள், கொழுகொழு தேகம் என்று இரண்டாவது குழந்தையை கொண்டாடும்போது, எக்காரணம் கொண்டும் அதை முதல் குழந்தையோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள். 'பெரியவனுக்கு பிறந்தப்போ மூக்கே இல்லை, ஆனா, பாப்பாவுக்கு நல்ல கூர்மையான மூக்கு', 'பெரியவ பிறந்தப்போ அழுதுட்டே இருப்பா, இந்தக் குட்டிப் பையன் சமர்த்தா தூங்குறான்' போன்ற ஒப்பீடுகள் எல்லாம் முதல் குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், தன் உடன்பிறப்பின் மீதான் தீராத பகையையும் (சிப்லிங் ரைவல்ரி) ஏற்படுத்தலாம்... ஜாக்கிரதை.

11. அதற்காக, 'நீதான் பெரியவன், விட்டுக் கொடுத்துப் போகணும்' என்று பொறுப்புகளை முதல் குழந்தை மீது சுமத்தாதீர்கள். 'சின்னப்பிள்ளைகூட சரிக்குச்
சமமா பிடிவாதம் பிடிக்கலாமா..?' போன்ற வன்சொற்களும் வேண்டாம். தனக்கான அன்பு பங்கிடப்படுகிறது என்ற தவிப்பைத் தவிர, வேறு எதுவும் குழந்தைக்கு இப்போது புரியாது, மனதில் பதியாது.    

12. ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் சகோதரர்களாக வளர்வதும், பங்காளிகளாக வளர்வதும் வளர்ப்பு முறையில்தான் இருக்கிறது. பின்னாளில் உங்கள் குழந்தைகளுக்கு இடையேயான நெருக்கம் எள் அளவும் குன்றாமல் பாசமலர்களாக இருக்க, இப்போதே அதற்கான விதையிடப்பட வேண்டும். எந்தவிதத்திலும், சூழ்நிலையிலும் குழந்தைகளுக்கு இடையில் பாரபட்சம் காட்டாமல், அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பை மட்டுமே இறுதிவரை பரிமாறும் வகையில் அன்னைதான் வார்த்தெடுக்க வேண்டும் பிள்ளைகளை! 


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: