Friday, October 3, 2014

முன்முடிவுகளை முறியடியுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!!!

முன்முடிவுகளை முறியடியுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!!!
நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டே திரிவார்.. நல்ல திறமைசாலிதான். வாழ்க்கையில் அவரால் ஒரு படி கூட முன்னேற முடியவில்லை..
காரணம் அவர் எடுக்கும் முன் முடிவுகள்(Prejudice).. புதிதாக எந்த ஒரு தொழிலையோ, வேலையையோ ஆரம்பிப்பதற்கு முன்பு அவர் எடுக்கும் சில முன் முடிவுகளால் அதைத் தொடங்காமலேயே இருந்துவிடுவார்.
நண்பர்களிடம் அடிக்கடி உதவி கேட்பார்.. தன்னால் இயலவில்லை.. தனக்கு பொருளாதார பின்னடைவு. குடும்பம் நலிவுற்றுவிட்டது. எனக்கு வருமானம் இல்லை.. எப்படியும் உதவுங்கள் என்று நண்பர்களை கேட்டு நச்சரித்துக்கொண்டே இருப்பார்.
திறமையானவர்தான். ஆனால் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அவருடைய மனம் பக்குவப்படாமலேயே இருக்கிறது. யாராவது ஏதாவது ஒரு வேலையை, சம்பாதிக்கும் வழிமுறையைச் சொன்னால் கூட அதிலிருக்கும் பாதங்களை மட்டுமே சொல்வார்.
இப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது? அப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது? என்னால் செய்ய முடியும் என்றாலும், அதனுடைய விளைவுகளை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது. ஒரு தொழில் ஆரம்பிக்கிறேன் என்றால் அதில் உள்ள நெழிவு சுழிவுகளை தெரிந்துகொண்டே தான் ஆரம்பிக்க வேண்டும். இது எனக்கு புதியது.. இது எனக்கு ஒத்துவராதுஇப்படியே எடுத்ததற்கெல்லாம் தட்டிக்கழித்தே காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பார்.
சுருக்கமாக சொன்னால், சோம்பேறி, பயந்தாங்கொள்ளிஆனால் உண்மையிலேயே அவர் சோம்பேறியும் அல்லபயந்தாங்கொள்ளியும் அல்ல.. அவர் எடுக்கும் முன் முடிவுகளே இத்தகைய சூழ்நிலையை அவருக்கு உருவாக்கியிருக்கிறது என நான் உணர வைத்தேன்..
அதாவது புதிய சூழ்நிலைக்கு அவருடைய மனம் மாற மறுக்கிறது. தடைகள் நிறைய வரும். இதனால் தனக்கு தோல்வியே மிஞ்சும் என்ற ஆதீத பயம். எப்போது நடந்து முடிந்த ஒரு சில நிகழ்வுகளை மனதில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு புதிய முயற்சியும் அவ்வாறே நடந்துவிடுமோ என்ற எண்ணத்தின் வெளிப்பாடு.
இறுதியில் கிடைக்கப்பெற்றதென்னவோ அவருக்கு வறுமையும், ஏழ்மை நிலைமையும்தான்.
இந்த கதையை கொஞ்சம் கவனியுங்கள்.
ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் நமக்கெல்லாம் தெரியும். கேள்விப்பட்டிருப்போம். இவர் தன்னுடைய நிறுவனத்தை நிர்வகிக்க ஒரு மிகச்சிறந்த நிர்வாகி தேவையென கருதினார். தனக்கு அடுத்தாற்போன்று நிறுவனத்தை நல்ல முறையில் நடத்த தகுதியான ஆள் ஒருவரைத் தேடினார்.
அந்த தகுதியான நிர்வாகி ஒரு புகழ்பெற்ற குளிர்பான நிறுவனத்தில் பணிசெய்துகொண்டிருந்தார். அவரது நிர்வாகம், திறமை அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொண்டிருந்த ஸ்டீவ்ஜாப்ஸ் தன்னுடைய நிறுவனத்தில் பணியில் சேருமாறு அழைப்புவிடுத்தார்.
குளிர்பான நிறுவனத்திலேயே அதிக பேரும் புகழும் பெற்று விளங்கிய ஸ்கல்லி என்ற அந்த நிர்வாகி புதியாக தொடங்கப்பட்ட ஸ்டீவ்ஜாப்ஸ்சின் ஆப்பிள் நிறுவனத்தில் இணைய யோசித்தார்.
குளிர்பான நிறுவனத்திலேயே போதும் போதும் என்றளவுக்கு பணமும், புகழும் கிடைத்திருக்கிறது. இதைவிட்டு புதிய நிறுவனத்தில் சேருவதா? என தயங்கினார்.
எப்படியும் ஸ்கல்லி மறுத்து பேசப் போகிறார் என்பதை உணர்ந்த ஸ்டீவ்ஜாப்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?
ஸ்கல்லி நீங்கள் காலம் முழுக்க இந்த குளிர்பான நிறுவனத்திலேயே இருந்து இந்த குளிர்பானங்களை விற்கப் போகிறீர்களா? அல்லது என்னுடைய இணைந்து இந்த உலகத்திற்காக ஒரு புதிய மாற்றத்தையே, சகாப்த்த்தையே உருவாக்கப் போகிறீர்களா? " நீங்களே முடிவு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்.
ஸ்கல்லியின் மனதில் அந்த வார்த்தைகள் ஆழப் பதிந்துவிட்டன. யார்வேண்டுமானாலும் குளிர்பானங்கள் தயாரித்து ்விற்கலாம்.. விற்பனையை அதிகரிக்க குளிர்பானங்களில் சுவையை கூட்டினாலே போதும்..
தனக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவிருக்கிறது என ஒரு மின்னல் வெட்ட சட்டென அதற்கு சம்மத்துவிட்டார்.. அதற்கான பலனையும் ஓரிரண்டு ஆண்டுகளிலேயே அடைய ஆரம்பித்துவிட்டார். உலகப்புகழ்ப் பெற்ற ஆப்பிள் கணினி நிறுவனத்தில் அட்டகாசமான நிர்வாகியாக, உழைப்பாளியாகி செயல்பட்டு, நினைத்துப் பார்க்க முடியாத புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார்.
அதனால் புதிய மாற்றங்களை மனதளவில் ஏற்று, துணிச்சலுடன் யார் போராடுகிறார்களோ, அவர்களுக்கு வெற்றி நிச்சயம். இவர் தனக்கு குளிர்பான நிறுவனப் பணியே போதும், புதிய நிறுவனத்தில் பணிபுரிந்தால் தன்னால் சரிவர செயல்பட முடியுமா என்ற முன் முடிவை ஸ்டீவ்ஜாப்ஸ் உடைத்ததால்தான் இந்த அளவுக்கு வளர முடிந்தது.
எனவே நண்பரைப் போல நீங்களும் தேவையில்லாத, பயன்படாத முன்முடிவுகளை எடுக்காதீர்கள்.. ஏற்கனவே மனதில் நீங்கள் எடுத்திருக்கும் முன்முடிவுகளை தகர்த்தெறியுங்கள்(break Prejudices )…
புதிய தெம்புடன், உற்சாகத்துடன் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.. வெற்றி தானாகவே உங்கள் கைகளில் தவழும்.
சிறு குழந்தைகளைப் பாருங்கள்.. ஒரு மேடான பகுதியை, மணல் குவிப்பை பார்த்தால் ஓடோடி சென்று ஏறு குதித்து அடுத்த பக்கத்திற்கு செல்லும். இதிலிருந்து நாம் ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம்.
மனம் உற்சாகத்துடன் இருந்தால், முன்முடிவுகள் ஏதுமின்றி இருந்தால் உடனே நாம் அதை செயல்படுத்த முடியும். ஆனால் குழந்தைகளைப் போல் இல்லாமல் இவ்வளவு பெரிய குன்றை நாம் கடக்க முடியாது என்று எடுக்கும் முன் முடிவுகள் எப்போதும் நம்மை முட்டாள்தனமாக, முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாகவே ஆக்கிவிடுகிறது. எனவே வாழ்க்கையில் வெற்றிப்பெற, வாழ்க்கையில் முன்னேற நீங்கள் எடுக்கும் முன்முடிவுகளை முறியடியுங்கள்..
புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.. உங்கள் கண்ணெதிரேயே உங்கள் வெற்றிக்கான வெளிச்சம், வெற்றிக்கான பாதை தெரியும். வெல்லுங்கள்.. வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!!!
நன்றி: தங்கம்பழனி தொழில்நுட்பம்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: