Saturday, December 20, 2014

பளிச்சென முகம் பிரகாசிக்க..


'கல்யாணப் பொண்ணுஇப்படியா களையிழந்து இருக்கிறது?' என்று கேட்கும் அளவுக்கு வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல், வேலைப்பளு, உணவுப் பழக்கங்கள் போன்றவை இன்றைய இளைய தலைமுறையினரைப் பாதிக்கிறது.

உணவு

தினசரி மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதன் மூலமும் உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் தக்கவைக்கலாம். தினமும் மூன்று வெவ்வேறுவிதமான பழங்களை எடுத்துக்கொள்வது சருமத்துக்குத் தேவையான வைட்டமின், நீர்ச்சத்தைத் தந்து, தோலில் வறட்சியைப் போக்கிப் பளபளப்பாக்கும். உணவில் பொன்னாங்கண்ணி மற்றும் கேரட் தினசரி சேர்த்துக்கொண்டால், சோர்வு நீங்கி முகம் எப்போதும் பிரகாசிக்கும்்.

பாதாம் பருப்பை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது நல்லது. முகப்பருக்கள் வருவதற்கு அதிகக் கொழுப்பும் ஒரு காரணம். எண்ணெய்ப் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாலை நன்கு காய்ச்சி அதில் இரண்டு பேரீச்சம்பழங்களைப் போட்டு, மறுநாள் காலை அருந்தலாம். முகத்தின் பளபளப்புக்கு பேரீச்சம் பழம் கேரன்டி.

பியூட்டி பார்லர்

பிளீச்சிங் செய்துகொள்வதைக் காட்டிலும் ஃபேஷியல் செய்து கொள்வது நல்லது. கெமிக்கல் ஃபேஷியல் செய்துகொள்வதால் தோல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். முகத்தின் சருமமும் மிருதுத்தன்மையை இழந்து கரடுமுரடாக மாறலாம். ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், வாழைப்பழம் போன்ற இயற்கை முறையில் செய்யப்படும் பழ ஃபேஷியல் எல்லா வகை சருமங்களுக்கும் ஏற்றது. பக்க விளைவுகள் இல்லாதது. சருமத்துக்கான சத்துக்களுடன், நீர்ச்சத்தும் சேர்ந்து பளபளப்பைக் கூட்டும். மேலும், அழகு நிலையத்தில் முகத்துக்கு அக்குபிரஷர் சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது. இதனால் முகம் மற்றும் உடலின் இயக்கங்கள் தூண்டப்பட்டு, தலைவலி, டென்ஷன் குறைந்து மனதும், உடலும் ரிலாக்ஸாகும். ரத்த ஓட்டம் சீராகும். இந்த நிம்மதியே, முகத்தில் புத்துணர்ச்சியையும் பொலிவையும் தரும். மேலும் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தாலும் வறண்டுபோனாலும் அதற்கும் பார்லரில் இயற்கை முறையில் தீர்வைத் தர முடியும்.

அசத்தலான அழகுக்கு!

தினமும் தண்ணீரில் வேப்பிலைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். இது சருமத்துக்கு எந்தப் பாதிப்பும் வராமல் காக்கும். வாரம் இருமுறையாவது சோப்புக்குப் பதிலாக கடலைப் பருப்பு, பாசிப் பயிறு போன்றவற்றை அரைத்துக் குளிக்கலாம்.

வாரம் ஒரு முறை பப்பாளிப் பழத்தை நன்றாகப் பிசைந்து, அந்தக் கூழை முகத்தின் மீது பூசி 15 நிமிடங்கள் உலரவைத்து பின் குளிக்கலாம். இது சருமத்துக்கு மிருதுத்தன்மையைக் கொடுக்கும்.

இரு வாரங்களுக்கு ஒரு முறையேனும் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும்.

வாரம் ஒரு முறை பால், பாதாம் அல்லது பிஸ்தா பருப்புடன் சிறிதளவு மஞ்சள் கலந்து முகத்தின் மீது 15 நிமிடங்கள் பூசிவிட்டுக் குளித்தால் மிகவும் நல்லது.

வெளியில் சென்றுவிட்டு வந்த பிறகு, கெட்டியான மோரில் ஒரு வெள்ளைத் துணியை நனைத்து முகத்தின் மீது அப்படியே 10 நிமிடங்கள் வைத்திருப்பது புத்துணர்ச்சியைத் தரும்.

மாதம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்வது, ஆவி பிடிப்பது, நீராவிக் குளியல்போடுவது மிகவும் நல்லது.

கிரீம்கள் மற்றும் பவுடர்கள் வியர்வை வெளியேறுவதைத் தடுப்பதால், தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தினமும் அதிகாலையில் எழுந்திருப்பது, சூரிய ஒளிக்கதிர்கள் படுமாறு 20 நிமிடங்கள் ஆசனங்கள் செய்வது போன்றவை மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.

முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்

சிலர், இளமை வயதுகளைத் தாண்டிய பிறகும் கம்பீரமாய் காட்சியளிப்பார்கள். சிலரோ இளம் வயதிலேயே முதுமை தட்டிப்போய் தோன்றுவார்கள். இவர்கள் மட்டும் எப்படி அன்று பார்த்தது மாதிரியே இன்றும் இருக்கிறார்கள்? என்று சிலரைப் பார்க்கும்போதுதான் தோன்றுகிறது. நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம்தான். அதை ஒழுங்காக, சீராகப் பராமரித்தாலே நமது இளமை நீடித்திருக்கும். எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும் சருமத்தில் முதுமைத் தோற்றம் தெரிகிறது.

இதைத் தடுக்க, முகத்தைப் பாதுகாக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சரி, எப்படி இளமையைத் தக்கவைத்துக்கொள்வது என்று பார்ப்போம்

தண்ணீர் நல்லது : இளமையைத் தக்கவைப்பதில் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. சருமத்தை மென்மையாக்குவதற்கும், பாதுகாப்பதற்கும் தினமும் குறைந்தபட்சம் 1 லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது என்கிறார்கள் சரும நிபுணர்கள்.

இளமை காக்கும் உணவுகள்: என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், இறைச்சி, மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வதும் அவசியம். உடல் திசுக்களைப் புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டி ஆக்சிடென்ட் குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் முகம் சுருக்கம் இல்லாமலும், மென்மையாகவும் தோன்றும். மேலும், பசலைக்கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, கிரீன் டீ போன்றவற்றையும் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.

ஆழ்ந்த உறக்கம் அவசியம்: சரியான உறக்கம் இல்லாததாலும் உடல் அழகு பாதிக்கப்படும் என்பதை பலர் அறிவதில்லை. சரியான தூக்கமின்மை, சோர்வை ஏற்படுத்தும், இளமையையும் பாதிக்கும். இரவில் குறைந்தது 6, 7 மணி நேர உறக்கம் அவசியம். அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், மனதில் புத்துணர்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்திலும், சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

கவலை கூடாது: ஏதாவது ஒரு கவலையை இழுத்துப் போட்டுக் கொண்டு அதில் மூழ்குவது பலருக்கும் பழக்கமாக இருக்கிறது. கவலை உடல் நலத்தையும், அழகையும் பாதிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே கவலையை விட்டொழியுங்கள். மகிழ்ச்சியுணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் முகம் ஜொலிக்கும்!

http://www.muthamilmantram.com



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: