Saturday, December 13, 2014

ஸஜ்தாவின் சிறப்புககள்…!

ஸஜ்தாவின் சிறப்புககள்…!

தூய்மையான வணக்கங்களுக்குச் சொந்தக்காரனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ ஸஜ்தா செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வணங்கு வோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள் (அல்குர்ஆன் 41:37)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீர் அதிகமாக ஸஜ்தா செய்து வருவீராக! நிச்சயமாக நீர் செய்யும் ஒவ்வொரு ஸஜ்தாவைக் கொண்டும் அல்லாஹ் உமக்கு ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். உம்மை விட்டு ஒரு பாவத்தை அழிக்கிறான்.(அபூ அப்துல்லாஹ் தவ்பான் (ரலி)முஸ்லீம்)
நீங்கள் ருகூஉ செய்தீர்களானாலும், ஸூஜூது செய்தீர் களானாலும் ருகூஉவையும் ஸஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அனஸ் (ரலி) நஸயி 1009)
ஸஜ்தா என்று சொல்லப்படக் கூடிய சிரவணக்கம் இஸ்லாத்தின் பார்வையில் மிகுந்த சிறப்புக்குரியது.
எண்சாண் உடம்பையும் கூனிக்குறுகி ஏழு உறுப்புக்கள் தரையில்படுமாறு தங்களைப் படைத்த இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே மனிதர்கள் செய்யும் வணக்கம் தான்  ஸஜ்தா என்பது.
ஸஜ்தா என்ற சிரவணக்கம் மனிதன் காட்டக்கூடிய பணிவுகளின் இறுதி எல்லைக்கோடு அல்லது மரியாதைகளின் உச்சகட்டநிலை என்று சொன்னால் அது மிகையாகாது.
மனித உடற்கூற்றில் தலை எத்தனை பிரதான படைப்பாக இருக்கிறது என்பதை மனிதன் சிந்தித்துப் பார்ப்பானே யானால் வல்ல நாயன் அல்லாஹ்  எத்தனை நுண்ணறிவோடு அதைப் படைத்திருக்கிறான் என்ற அற்புதத்தை புரிந்து கொள்வதுடன் அந்த தலை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சாய்க்கப்பட வேண்டிய ஒன்று மற்ற யாருக்கும் எதற்கும் சாய்க்கப்பட கூடாத ஒன்று என்ற மிகமிகச் சரியான -  நியாயமான உணர்வுகளையும் அம்மனிதன் பெற்றுக் கொள்ள முடியும். இன்றைக்கு மனிதர்களைப் பார்க்கிறோம்.
மனிதர்களில் சிலர் எது எதையோ வணங்குவதை  சிரம் தாழ்த்தி வணங்குவதைப் பார்க்கிறோம். விழுந்து கும்பிடுவதைப் பார்க்கிறோம். நெடுஞ்சாண்டையாக விழுவதைப் பார்க்கிறோம். தங்களை விட கீழான கீழினும் கேவலமான படைப்புகளுக்கெல்லாம் சிரவணக்கம் செய்வதைப் பார்க்கிறோம். எந்தவொன்றையும் படைக்கவோ பாதுகாக்கவோ சக்தி இல்லாதவைகளுக்கு போய் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மனிதன் போய் சிரம் சாய்த்து வணங்குகிறான்.
அப்படி அவைகளுக்கு சிரம் சாய்ப்பதற்கு அம்மனிதன் ஏதும் வேத ஆதாரத்தைப் பெற்றிருக்கிறானா? நபித்துவத்தின் ஆதாரத்தை பெற்றுள்ளானா என்று ஆராய்ந்து பார்த்தால் சுத்தமாக இல்லை. ஷைத்தானிய ஊசலாட்டம். மனோஇச்சைகளின்  தூண்டுதல் இவற்றுக்கு ஆட்பட்டுப்போய் அழிவிலும் அவமானத்திலும் போய் மனிதர்களில் சிலர் வீழ்ந்துள்ளனர். மேதை என்பார்கள். ஜீனியஸ் என்பார்கள். அரசியல் வித்தகர் என்பார்கள்.
விஞ்ஞானத்தில் மேம்பட்டவர் என்று பாராட்டுவார்கள். ஆனால் மெய்யறிவின் குறைபாட்டால் தன்னைப் படைத்த இரட்சகனுக்கு  உண்மையான இறைவனுக்கு  சிரம் சாய்க்கும் பாக்கியமில்லாமல் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் மகத்தான இரட்சகன் அல்லாஹ்வின் கிருபையால் அவனுக்கு ஸஜ்தா செய்யும் பாக்கியம் பெற்ற நாம் எந்த அளவுக்கு அந்த விஷயத்தில்  கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறோம்?

ஸஜ்தா செய்வது நல்லடியார்களின் பண்பு: அல்லாஹ் கூறுகிறான்.

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும் போது ஸலாம் கூறி விடுவார்கள். அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும் நின்றும் இரவைக் கழிப்பார்கள்.    அல்குர்ஆன். (25: 63 – 64)
நம்பிக்கைக் கொண்டோரே!ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவளை வணங்குங்கள். நன்மையைச் செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.(அல்குர்ஆன் 22:77)
அடிபணியாதவர்களின் நிலை: அல்லாஹ் கூறுகிறான்:
அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும்போது அது என்ன அளவற்ற அருளாளன்? நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தாச் செய்வோமா? என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகமாக்கியது (அல்குர்ஆன். 25: 60)
அல்லாஹ்வின் தூதரே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா? என்று கெட்டார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இல்லை என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா?  என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் இல்லை என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதேப்போல்தான் நீங்கள் உங்கள் இறைவனைக் காண்பீர்கள் என்று கூறினார்கள்.
தொடர்ந்து கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப்பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதனை பின்பற்றி செல்லட்டும் என்ற இறைவன் கூறுவான்.சிலர் சூரியனை பின்பற்றுவர்.சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீயசக்திகளைப் பின்பற்றுவர் அப்போது இறைவன் அவர்களை நோக்கி நான் தான் உங்கள் இறைவன் என்பான். அதற்கு அவர்கள் எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம்.
எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம் என்பார்கள். பின்னர் அல்லாஹ், அவர்களிடம் வந்து நான்தான் உங்கள் இறைவன  என்பான். அதற்கு அவர்கள் நீ எங்கள் இறைவன் தான்! என்பார்கள்;
பின்பு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப்படும். நபிமார்கள், தத்தமது சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத்தூதர்களைத் தவிர வேறு யாரும் பேச மாட்டார்கள். இறைவா! காப்பாற்று! இறைவா காப்பாற்று! என்பதே அன்றைய தினம் பேச்சாக இருக்கும். நரகத்தில் கருவேல மரத்தின் முட்கள் போன்ற இரும்பு ஆயுதங்கள் இருக்கும். என்ற நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு நீங்கள் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா? என்ற கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர்.  அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றுதான் இருக்கும் என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும்.
நல்லறங்கள் முழுவதும் அழிக்கப்பட்டவர்களும் அவர்களில் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர். நரகவாசிகளில் அல்லாஹ் நாடுபவர்களுக்கு அருள் செய்ய எண்ணும்போது அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்வர்களை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு உத்தரவிடுவான். வானவர்கள் அவர்களை வெளியேற்று வார்கள் ஸஜ்தா செய்த அடையாளத்தை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம்;காண்பார்கள்.
ஸஜ்தாச் செய்ததினால் வடுக்களை நரகம் தீண்டாது நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக்கி வைத்து விட்டான். அவர்கள் நரகலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஸஜ்தாவின் வடுவைத்தவிர மனிதனின் முழு உடம்பையும் நரகம் சாப்பிட்டு விடும். நரகிலிருந்த கரிந்தவர்களாக வெளியேறுவார்கள். அவர்கள் மீது உயிர்தண்ணிர் தெளிக்கப்படும். ஆற்றோரத்தில் தானியம் வளர்வது போல் அவர்கள் செழிப்பார்கள். பின்னர் அடியார்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பை முடித்து வைப்பான்.(அபூஹூரைரா(ரலி) புகாரி )
ஸஜ்தாச் செய்யும் முறை: 
நீங்கள் ருகூஉ செய்தீர்களானாலும், ஸூஜூது செய்தீர் களானாலும் ருகூஉவையும் ஸஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அனஸ்(ரலி) நஸயி 1009)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக்கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தா செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில்படாதவாறு) தடுக்கக்கூடாது எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.(இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 806)
உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்தால் ஒட்டகம் (கால்நடை) அமருவதைப் போன்று அமராதீர்கள். அவரது இரு கைகளையும் முதலில் வைக்கவும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(அபூஹூiரா(ரலி),அபூதாவுத் அஹ்மது, நஸயி)
நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வார்களானால் தங்களது மூக்கையும் நெற்றியையும் தரையின் மீது அழுத்தமாக வைப்பார்கள்.இன்னும் தங்களது இரு கைகளையும் விலாப் பகுதியிலிருந்து தூரமாக்கி  தங்களது இருமுன் கைகளையும் தங்களது தோள் பட்டைகளுக்கு சமமாக ஆக்குவார்கள். அபுஹூரைரா(ரலி) அபூதாவுத்
பூமியில் நெற்றி தொட்டதை எவரின் மூக்குத் தொட வில்லையோ அவருக்குத் தொழுகையில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.இப்னு அப்பாஸ்(ரலி) தாரகுத்னி
தொழுகையில் திருடர்கள்: 
மனிதர்களில் திருட்டுத்தனம் செய்பவர்களில் மிகக் கெட்டவன் தொழுகையில் திருட்டுத்தனம் செய்யக்கூடியவனே! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்போது சஹாபாக்கள்) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தொழுகையில் அவன் எவ்வாறு திருட்டுத்தனம் செய்வான்? எனக் கேட்டனர். (அதற்கு நபி(ஸல்) அவர்கள், தொழுகையில் ருகூவையும் ஸூஜூதையும் அவன் நிறைவாகச் செய்ய மாட்டான் (அவ்வாறு நிறைவாகச் செய்யாதவனே திருடர்களில் மிகக் கெட்டவன் எனக் கூறினார்கள்.அபூகதாதா(ரலி),நுஃமான் பின் முர்ரா(ரலி) இப்னு அபீ ஸைபா, தப்ரானி அஹ்மது)
ஸஜ்தாவின் துஆக்கள்:
ஸூப்ஹான ரப்பியல் அஃலா (மிக உயர்வுமிக்க என் இரட்சகன் தூயவன்) என்று நபி(ஸல்) அவர்கள் ஸூஜூதில் மூன்று முறைக் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.(ஹுதைஃபா(ரலி) நஸயீ)
நபி(ஸல்) அவர்கள் தங்களது ருகூவிலும் ஸூஜூதிலும்  ஸூப்பூஹூன் குத்தூஸூன் ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ் (துதிக்கப்படுபவனும், பரிசுத்தமாக்கப்படுபவனும் ரூஹ் என அழைக்கப்பட்ட ஜிப்ரயில் அவர்களுக்கும் இரட்சகனாகிய அல்லாஹ் தூயவன்) என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.ஆயிஷா(ரலி) நஸயி 1086)
இப்படி ஏகத்துவ உறுதியை இறைவனிடம் பணிவை இம்மை மறுமையில் நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத எண்ணற்ற நன்மைகளை பெற்றுதரும் ஸஜ்தா என்ற செயலை அல்லாஹ்வுக்காக உறுதியுடன் செய்யும் நன்மக்களாக நாம் அனைவரும் ஆகிட வல்ல நாயன் அல்லாஹ் நற்கிருபை செய்வானாக!
http://kulasaisulthan.wordpress.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: