Tuesday, December 9, 2014

கூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்


பெண்ணுக்கே உரிய நளினத்தைத் தருவது நீண்ட கூந்தல்தான். சிலருக்கு நீளமான முடி இருந்தும் போதிய நேரமின்மை காரணமாக, பார்லருக்கு சென்று வெட்டிக்கொள்கின்றனர். குதிரை வால் அளவில் முடி இருக்கும் பலரும், நீண்ட கூந்தலுக்கு ஆசைப்பட்டு,  விளம்பரங்களில் வரும் வளர்ச்சிக்கான ஷாம்பு, கண்டிஷனர்கள் என அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். முடி வளர வேண்டும் என்ற ஆசையில் செய்யும் இந்த அழகு விஷயங்கள், முடி வளர்ச்சியை அடியோடு நிறுத்திவிடுவதுடன், முடி உதிர்வதற்கான வாய்ப்பை அதிகப்படுத்திவிடும்.   

முடி வளராமல் போவதற்கு என்ன காரணம்?
திருச்சியைச் சேர்ந்த தோல் நோய் மருத்துவர் ராஜசேகரனிடம் கேட்டோம்.
'பொதுவாக முடியின் வாழ்க்கைச் சுழற்சியை ஆனஜென், கேட்டஜென், டெலோஜென் (anagen, catagen, telogen) என மூன்றாகப் பிரிப்பார்கள். 'ஆனஜென்' பருவத்தில் முடி தடிமனாக, ஆரோக்கியமாக இருக்கும். 'கேட்டஜென்' காலத்தில் முடி வலுவிழந்து, உதிரக்கூடிய நிலையில் இருக்கும். 'டெலோஜென்' காலத்தில், முடி உதிரும். அந்த நேரத்தில் மீண்டும் முடியின் வேர்க்காலில் முடி முளைக்க ஆரம்பிக்கும்.

ஒரு நாளைக்கு 100 முடிகளுக்கு மேல் விழுகின்றன. அதே அளவுக்கு, புதிதாக முடி முளைத்துவிடும்.  இப்படி 100 முடி கொட்டுவதைப் பார்த்ததும் முடி முற்றிலும் கொட்டிவிடுமோ என்ற பயத்தில் தலைமுடிக்கு, கண்ட கண்ட க்ரீம், ஷாம்புக்களைப் போடுகின்றனர். உதிர்ந்த முடி தானாகவே மீண்டும் முளைக்கும்போது, நாம் பயன்படுத்திய ஷாம்புவால்தான் முடி வளர்ந்திருக்கிறது என்று தவறாக நினைத்து, தொடர்ந்து அந்த ஷாம்புக்களைப் பயன்படுத்துகின்றனர். ஷாம்புவில் உள்ள ரசாயனம், முடியைக் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்கிறது என்பதுதான் உண்மை.

அந்தக் காலத்தில் மக்கள், தலைக்கு சீயக்காய் பயன்படுத்தினர். அதனால் முடியும் கருகருவென நீளமாக இருந்தது. இன்று 99 சதவிகிதம் பேர், ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்துவதால்தான் முடி அதிகமாக உதிர்கிறது.

செயற்கை ரசாயனங்களைப் பயன்படுத்தாமல், கவலைகளுக்கு இடம் கொடுக்காமல், எப்போதும் சந்தோஷமான மனநிலையில் இருந்தாலே முடி கொட்டாமல், ஆரோக்கியமாக இருக்கும்.'' என்றவர், முடி உதிர்வதை விரைவுபடுத்தும் நாம் செய்யும் தவறுகளைப் பட்டியலிட்டார்.

குளித்து முடித்தவுடன், ஈரமாக இருக்கும் முடியில், 'ஹேர் ட்ரையர்' பயன்படுத்தும்போது அதிக வெப்பத்தின் காரணமாக முடியில் இருக்கும் நெகிழ்வுத்தன்மையைப் பாதிக்கும். இதனால், முடியில் உள்ள புரதம் உள்ளிட்ட பொருட்கள் சிதைந்து முடியை வலுவிழக்கச் செய்துவிடும். ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

 பல பெண்கள், குளிப்பதற்கு முன்பு, தலை வாருவது இல்லை. ஈரமான முடி மிகவும் பலவீனமாக இருக்கும். இந்த நிலையில், தலையில் அதிகமாகச் சிக்கு ஏற்படும். எனவே, தலைக்குக் குளிப்பதற்கு முன்பு தலையை வாரிக்கொள்ள வேண்டும்.
  
குளிக்கும்போது கைவிரல்களை, சீப்பு போல் பயன்படுத்தி, சிக்கு எடுக்க வேண்டும்.
   தலைமுடியின் முனைப் பகுதியில் அதிக அளவில் உடைதல், பிளவு இருப்பதால் அடிப்பகுதியில் மட்டும் நீண்ட நேரம் முடியை கோதிவிடுவது கூடாது. உச்சந்தலையில் இயற்கை கண்டிஷனர் உள்ளது பலருக்குத் தெரியவில்லை.

முடியின் வேர்ப்பகுதியில் வாரும்போது, இந்த இயற்கை கண்டிஷனர் தூண்டப்பட்டு முடிக்கு ஆரோக்கியம் அளிக்கும். தலை வாரும்போது வேர்ப்பகுதியில் இருந்து வார வேண்டும்.
  
தலைமுடியை உலர்த்தப் பயன்படுத்தப்படும் டவல் மென்மையானதாக இருக்க வேண்டும். தலைமுடியைக் காய வைக்கும்போது, டவலால் அழுத்தித் துடைப்பது கூடாது. இதனால், முடி கடினமாகிப் பொலிவு இழந்து, உடைபட வாய்ப்பு உண்டு. டவலால் ஒத்தி எடுத்து, கைவிரல்களால் கோதி, காயவிட வேண்டும். இப்படிச் செய்ய நேரம் ஆகலாம், ஆனால், கேசம் ஆரோக்கியமாக இருக்க இது பெரிதும் உதவியாக இருக்கும்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: