--
Thursday, January 29, 2015
மருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்
--
Tuesday, January 27, 2015
கணினி முடங்குவதற்காண காரணங்களும் தீர்வுகளும்
கணினி முடங்குவதற்காண காரணங்களும் தீர்வுகளும்
கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது:இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.
2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.
3. மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்னை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டியதிருக்கும்.
4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.
5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக் காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.
6. பிளாப்பி டிஸ்க்/ சி.டி.டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.
8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
9. CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.
10. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது: பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.
11. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.
12. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.
13. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.
14. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.
15. Non System Disk Error: ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம்.ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக் கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.
16. Missing Operating System: சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம்.
17. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.
18. IO Error: சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.
19. Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.
20. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியானகேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
21. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லதுSCANDISKபயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோத னை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.
22. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.
23. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.
24. MMX/DLL FILE MISSING: இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும்.
பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்
http://kulasaisulthan.wordpress.com
--
Sunday, January 25, 2015
உப்பு, ரொம்ப தப்பு... அயோடின் உப்பு, ரொம்ப ரொம்ப தப்பு!
--
Saturday, January 24, 2015
ஸ்கிப்பிங் பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள்
• இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்
• ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடைகுறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.
• உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக்கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற கோளறுகள் நீங்குகின்றன.
• உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன்,இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
• கை, கால், தொடைப்பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன் முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது.
• ஆரோக்கியம், அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. மிக முக்கியம் ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும்.
• எனவே நீங்களும் உடலுக்கும் ஸ்கிப்பிங் தானே என எண்ணாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு ஸ்கிப்பிங் செய்து பயன் பெறுங்கள்
http://pettagum.blogspot.in/2013/05/blog-post_5.html
--
அப்பாவாகப்போகும் ஆண்களுக்கு அருமையான ஆலோசனைகள்!
தாயாகும் பூரிப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் பேரின்ப நிகழ்வு. கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமிப் பந்தில் தவழவிடும் நாள் வரை அவர்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. பிரசவத்தோடு பெண்ணின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுகின்றனவா என்ன? அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா? அப்போ... அப்பாக்களுக்கு? மனைவி கருவுற்றபோதும், பிரசவித்தபோதும் சக நண்பர்களுக்கு 'பார்ட்டி' கொடுப்பதோடு சரியா?
''குழந்தையைப் பெற்றெடுப்பது முதல் பேணிக்காப்பது வரை தாய்க்கு நிகரான பணியைத் தந்தையும் செய்ய வேண்டும். மனைவியுடன் கூடவே இருந்து குழந்தையைக் கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பு கணவனுக்கு உண்டு'' எனச் சொல்லும் முதன்மைக் குடியுரிமை (மகப்பேறு) மருத்துவர் சித்ரா செல்வமணி, மனைவியின் கர்ப்பகாலத்தில் கணவர்எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும், தந்தையாகப் போகும் தன்னிகரில்லா உறவை, வரவேற்க எப்படிக் காத்திருக்கவேண்டும் என்பதையும் விளக்கினார்.
''இந்த விஷயத்தில் திருமணம் ஆனதில் இருந்தே ஆண்களின் பங்கும் தொடங்கிவிடுகிறது.
முதலில் இப்போது நமக்குக் குழந்தை அவசியம்தானா என்பதைத் தம்பதிகள் இருவரும் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும். இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்பது உங்கள் முடிவு என்ற£ல், தகுந்த கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கருவுற்ற பிறகு தொடர்ந்து செக்-அப்கள் செய்வது அவசியம். இதை தேவையற்ற செலவு என ஒருபோதும் நினைக்காமல், ஒத்துழைப்பு தரவேண்டியது முக்கியம்.
டாக்டர் சொல்லும் நேரத்தை ஒருபோதும் தவிர்க்காமல், அழைத்துச் செல்லுங்கள். அதைவிட முக்கியமானது, ஒவ்வொரு முறையும் செக்-அப்பிற்கு நீங்களே உடன் இருந்து அழைத்துச் செல்லவேண்டும். ஆபீஸ் வேலையைக் காரணம் காட்டி தப்பிக்காதீர்கள்.
திருமணம் ஆன புதிதில் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில், பிறந்த வீடு அளவுக்கு அந்நியோன்யம் இருக்காது. அதனால் கணவனாகிய நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அந்தப் பெண்ணுக்கு, இதுவும் நம் வீடுதான் என்ற எண்ணத்தை மனதில் ஆழ பதிக்கவேண்டும். அந்த அளவுக்கு மனைவிக்கான உரிமைகளையும், பொறுப்புகளையும் வழங்குவது முக்கியம். ஏனெனில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி ஏதாவது சாப்பிடத் தோன்றும் அல்லது பிடித்த தின்பண்டங்களை உண்ணத் தோன்றும்.
விரும்பிக் கேட்கும் பதார்த்தங்களை வாங்கிக் கொடுப்பது சரிதான். அவை தரமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை எண்ணெய்ப் பதார்த்தங்களை தவிர்த்திடுங்கள்.
அடிக்கடி மனைவியை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று அவருடன் மனம் விட்டுச் சிரித்துப் பேசி, கொஞ்சி விளையாடுங்கள். இது கர்ப்பக் காலத்தில் அவருக்கு இருக்கும் தேவையற்ற பயத்தைப் போக்க உதவும்.
கர்ப்பம் ஆன முதல் மூன்று மாதங்களில் ஒரு பெண்ணுக்கு எடைக் குறைவு இருப்பது இயல்புதான். அதைப் புரிந்துகொள்ளுங்கள். இதுகுறித்து தேவை இல்லாமல் பயம்வேண்டாம்.
கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்குச் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னைகள் இருக்கலாம். உங்கள் துணைக்கு, இந்தப் பிரச்னைகள் இருக்கிறதா என்பதைத் தயக்கம்கொள்ளாமல் கேட்டுத் தெரிந்து, பிரச்னை இருப்பின் அதற்குரிய தீர்வுகள் கிடைக்க வழிவகை செய்யுங்கள். எந்த விஷயத்திலும் இருவருக்குள்ளும் ஒளிவுமறைவு வேண்டாம்.
கர்ப்பக் காலத்தில் சரியான உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். மனைவி சரியாகச் சாப்பிடுகிறாரா என்பதைக் கவனியுங்கள். நேரம் கிடைக்கும்போது, நீங்களே ஊட்டிவிடுங்கள். அப்போது உங்கள் மனைவி, நிச்சயம் குறைந்தது ஒரு கைப்பிடியாவது அதிகம் சாப்பிடுவார்.
வெவ்வேறு மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றிருந்தாலும், ஒரே இடத்தில் ஆலோசனை பெற்று வந்தாலும், அனைத்து டாக்குமென்ட்களையும் தேதிவாரியாக வைத்துக்கொள்ளுங்கள். இது சரியான சிகிச்சைக்குப் பேருதவியாக இருக்கும்.
மூட நம்பிக்கைகளை ஆதரிக்காதீர்கள். உதாரணமாக 'சித்திரை மாதம் குழந்தை பிறந்தால், மாமனுக்கு ஆகாது' என்பன போன்ற மூட நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, சித்திரை மாதம் பிறக்கவேண்டிய குழந்தையை முன்கூட்டியே அறுவைசிகிச்சை செய்து பங்குனி மாதமே வெளியில் எடுப்பார்கள். இது முற்றிலும் தவறானது. இது முதலில் இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை மறவாதீர்கள்.
பிரசவ நேரத்தில் கணவன் அருகில் இருந்தாலே, பெண்ணுக்குத் தனி தைரியம் பிறக்கும். அதே சமயம் இதில் அனுபவம் மிக்க பெண் ஒருவரையும் அருகில் இருத்திக்கொள்வதும் மிகவும் நல்லது.
l குழந்தை பிறந்த பிறகு சில பெண்கள், தாய்ப்பால் கொடுக்கக் கூச்சப்படுவார்கள். இந்த நேரத்தில் அருகில் இருந்து, தாய்ப்பாலின் மகத்துவத்தைச் சொல்லி மனைவிக்குப் புரியவைப்பதும், தேவையற்ற கூச்சத்தைப் போக்குவதும் உங்கள் கடமை.
சில குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்ரீதியாகச் சின்ன சின்னப் பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். அந்த நேரங்களில் கணவன், குழந்தையையும் மனைவியையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் ஆரம்பித்து, மருந்து, மாத்திரைகள் சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது வரை எல்லாவற்றிலும் பொறுப்பாகச் செயல்படுங்கள்.
ஒரு குழந்தைக்கும் மறு குழந்தைக்கும் போதுமான இடைவெளி இருக்கவேண்டும். வயிற்றில் அடுத்த குழந்தையைச் சுமக்கும்போது, பிறந்த பச்சிளம் குழந்தைப் போதிய கவனிப்பு இல்லாமல் சவலைப் பிள்ளையாகிவிடக்கூடாது.''
உளவியல்ரீதியில் பல பயனுள்ள விஷயங்களை அலசுகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ராஜ்மோகன்
''திருமணம் ஆனவுடனேயே குழந்தை பெற்றுக்கொண்டாக வேண்டும் என்று இல்லை. உங்களின் விருப்பத்தையும், கடமைகளையும், பொருளாதாரத்தையும் கணக்கில்கொண்டு, இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் குழந்தைப் பெறுவதைப்பற்றி முடிவெடுங்கள். இல்லையெனில் குழந்தை பிறந்த பிறகு 'இப்ப நான் குழந்தை கேட்டேனா?' என்ற வாக்குவாதம் ஏற்படலாம்.
கர்ப்பமான பிறகு, நல்லபடியாகக் குழந்தை பெற்றுக்கொள்வது மனைவியின் வேலை; நமக்கு இதில் என்ன இருக்கிறது?' என்று இருக்காதீர்கள். குழந்தையை பெற்றெடுப்பதில் இருவருக்குமே சம அளவில் பொறுப்பு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
கர்ப்ப காலத்தில் மனைவிக்கு வாந்தி எடுப்பது, பசியின்மை போன்ற உடல்ரீதியான பிரச்னைகள் ஏற்படும்போது, கணவன் கூடுமானவரை அருகிலேயே இருந்து, அனுசரனையாகப் பேசினால், இந்தப் பிரச்னைகள் அவர்களை மனதளவில் பாதிக்காது.
மனைவியுடன் வாக்கிங் போவது, உணவு ஊட்டிவிடுவது, சிரிக்கச் சிரிக்கப் பேசுவது, நெறிக் கதைகளைச் சொல்வது இதெல்லாம் மற்ற நேரத்தைவிட இந்த நேரத்தில் மிகவும் அவர்களைக் கவரும். இதன் மூலம் உங்கள் மீதான காதலும் பெருகும்.
சில பெண்கள் பிரசவக் காலத்தில் பிறந்த வீட்டிற்குச் செல்வார்கள். சில பெற்றோர்கள் தங்கள் மகளை விரும்பி அழைத்துச் செல்வதில் தவறே இல்லை. சிலர் வற்புறுத்தி அனுப்பிவைப்பதும் உண்டு. இது தவறு. தன் பெற்றோர்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடி, அந்த பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பது கணவனின் கையில்தான் இருக்கிறது.
குழந்தை பிறந்த சில மாதங்கள் வரை, மனைவி கணவனுடன் செலவிடும் நேரம் குறைவது இயல்பு. குறிப்பாக உடலுறவில் சிறிய இடைவெளி ஏற்படலாம். இதைக் கணவன் சகஜமாக எடுத்துக்கொள்ளவேண்டும். மனைவியை வற்புறுத்தவோ, சண்டை போடவோ செய்யாதீர்கள்.
பொதுவாக வீட்டு வேலைகளை இருவருமே பகிர்ந்துகொள்வது நல்லது. குறைந்தபட்சம் குழந்தை பிறக்கும் காலகட்டத்திலாவது வீட்டு வேலைகளைக் கணவரே செய்யுங்கள். தவறில்லை.
'இது என் குழந்தையும் இல்லை, உன் குழந்தையும் இல்லை; நம் குழந்தை' என்ற நினைப்பதை இருவருமே உணர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தையின் மனநிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.
அப்பாவுக்கு நிகர் ஏதப்பா?
http://pettagum.blogspot.in/2013/05/blog-post_8976.html
--
வெளிநாட்டில் வேலை... ஏமாறாமல் இருக்க இதைப் படிங்க !
வெளிநாட்டில் வேலையா? எங்கே, எங்கே?' என்று கேட்டு ஓடியது அந்தக் காலம். வெளிநாட்டில் வேலை என்றாலே சந்தேகத்தோடு ஒதுங்குவது இந்தக் காலம். காரணம், வெளிநாட்டு வேலை என்று நம்பிப் போய், அடியும், மிதியும் பட்டு ஊருக்குத் திரும்புகிற அனுபவம் பலருக்கு. ஆனாலும், முறையான வழியில் உஷாராகப் போகிறவர்கள் கைநிறைய பணத்தோடு திரும்பவே செய்கிறார்கள்.
வெளிநாட்டு வேலைக்குத் தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்வது? யாரிடம் சென்று சரியான தகவல் பெறுவது? உண்மையான முகவர் என்பவர் யார்? அவரை எப்படி நாம் அடையாளம் காண்பது? என்கிற கேள்விகளுக்கு பதில் தேடி அலைந்தபோதுதான் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் கே.இளங்கோவனைச் சந்தித்தோம். அவரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டோம். தெளிவான விளக்கத்தைத் தந்தார் அவர்.
''தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் கடந்த 33 ஆண்டுகளாக, வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு உதவி செய்து வருகிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் நம்பகமான சான்றிதழுடன் இந்நிறுவனம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்வதற்கான முக்கிய நோக்கம், அதிக சம்பளம் கிடைக்கும்; புது கலாசார சூழலில் வேலை செய்ய முடியும் என்பதால்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யும் நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா போன்றவை. இங்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்பது மட்டும் காரணம் கிடையாது; அங்கு செல்வதற்கான விதிமுறைகளும் குறைவு'' என்றவர், ஏஜென்ட்கள் மூலம் வெளிநாடுகளில் வேலைக்குச் சேரும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுக்கினார்.
சரியான முகவரா?
''வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடிவு செய்தபின்பு முதல் நடவடிக்கையாக, சரியான முகவரைத் தேர்வு செய்ய வேண்டும். சரியான முகவராக இருந்தால் அவரிடம் கண்டிப்பாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் எம்.ஓ.ஐ.ஏ. (Ministry Of Overseas Indian Affairs) தரும் அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் லைசென்ஸ் நம்பர் இருக்கும். இந்த நிறுவனத்திடம் அங்கீகாரச் சான்றிதழைப் பெற்றால் மட்டுமே அயல்நாட்டுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் முகவராகப் பணியாற்ற முடியும்.
சரியான முகவர் யார் என்கிற விவரங்கள் www.poechennai.in என்ற வலைதளத்தில் நமது இந்திய அரசால் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் விவரங்கள், அவர்களின் பணி அனுபவம், முகவர்களின் தரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். சரியானவர்கள் யார் என்ற விவரம் இருப்பதுபோலவே கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முகவர்கள் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டிருப்பார்கள். இதை முன்னதாகவே பார்ப்பதன் மூலம் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முகவர்களை அணுகாமல் தப்பித்துக்கொள்ளலாம்.
சில முகவர்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வேலை வாங்கித் தருபவர்களாக இருப்பார்கள். எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறோமோ, அந்த நாட்டு முகவர்களை அணுகும்போது வேலை இன்னும் எளிமையானதாக முடியும். இப்போதெல்லாம் முகவர்கள் அவர்களின் விவரங்களுடன், எம்.ஓ.ஐ.இ.-ன் அங்கீகார எண்களுடன் செய்தித்தாள்களில் விளம்பரங்களை தருகிறார்கள். இதைக் கவனிப்பதன் மூலம் சரியான முகவர்களை எளிமையாக நம்மால் அடையாளம் காணமுடியும்.
நேர்முகத் தேர்வின்போது..!
நேர்முகத் தேர்வின்போது எலெக்ட்ரீஷியன், பிளம்பர் என ஒவ்வொரு வேலைக்கும் டிரேடு டெஸ்ட் இருக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும் சொந்தமான அல்லது தனியார் டிரேடு டெஸ்ட் சென்டர்கள் இருக்கின்றன. அங்கு வேலைக்குத் தேர்ந்தெடுப்பவர்களின் வேலை தரத்தைப் பரிசோதனை செய்வதற்காக டெஸ்ட்கள் நடத்தப்படும். நமது வளாகத்தில் அயல்நாட்டு வேலை வாய்ப்புக்காக நேர்முகத் தேர்வை நடத்தும்போது இங்கேயே டிரேடு டெஸ்ட்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது.
இந்த நேர்முகத் தேர்வின்போது வேலைக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயங்கள் வெளிநாட்டில் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு, பணி நேரம், வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை, அதிக நேரம் வேலை செய்தால் கூடுதல் சம்பளம் தரப்படுமா, தங்குமிடம் மற்றும் உணவு இலவசமா, மெடிக்கல் இன்ஷூரன்ஸ் வசதியை நிறுவனம் செய்து தருமா, விமானப் போக்குவரத்திற்கான செலவை நிறுவனம் ஏற்றுக்கொள்கிறதா என்பனவற்றை நன்கு கவனித்த பின்னரே ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்து போட வேண்டும். ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்திட்ட பிறகு அந்தப் படிவத்தின் நகல் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.
இ.சி.ஆர் (Emigration clearance required)
வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் அவருக்கு தரப்படும் மதிப்பெண் சான்றிதழிலேயே இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்று தரப்பட்டுவிடும். ஆனால், பத்தாம் வகுப்பிற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பி.ஓ.இ. (Protecter of Emigration) அமைப்பிடமிருந்து கண்டிப்பாக இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்று வாங்கி முகவர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும். அயல்நாட்டிற்கு செல்லும் சான்றுகள் அத்தனையையும் முகவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் இந்த இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்றையும் அவர்களே வாங்கி தந்துவிடுவார்கள். இந்த இ.சி.ஆர். என்பது 18 நாடுகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.
சமர்ப்பிக்க வேண்டியவை!
பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் முன்னனுபவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவேண்டும். அதுதவிர, தங்களது உடல் முழுவதையும் பரிசோதனை செய்து குறை எதுவும் இல்லாதபடி மருத்துவச் சான்றிதழ் ஒன்றையும் முகவரிடம் சமர்ப்பிக்கவேண்டும். இந்த நடைமுறை விஷயங்கள் முடிவுக்கு வந்ததும் விசா எடுப்பதற்கான விஷயங்கள் ஆயத்தமாகிவிடும்.
வெளிநாடுகளில் வேலைக்குச் செல்பவர்கள் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம், எம்ப்ளாய்மென்ட் விசாவில்தான் செல்ல வேண்டும். டூர் விசாவில் சென்றுவிட்டு அங்கு உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்தால் பிரச்னைதான் ஏற்படும். எம்ப்ளாய்மென்ட் விசாவை கையில் வாங்கியதும், அதில் வேலை செய்வதற்கான விவரங்கள் போடப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்கவேண்டும்'' என்று உஷார் டிப்ஸ்களைத் தந்தார் அவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தாங்கள் பணிக்குச் செல்ல விரும்பும் துறைகளில் இரண்டு வருட அனுபவம் இருப்பது நல்லது. 18 வயதைப் பூர்த்தி செய்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இமிக்ரேஷன் தொல்லை இருக்காது. விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களின் கட்டணம் 450 ரூபாயில் இருந்து 1,015 ரூபாய் வரை (இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) வசூலிக்கப்படுகின்றன. இவற்றோடு சேவை வரியும் வசூலிக்கப்படும்.
சேவைக் கட்டணம்!
ஒன்றரை மாதச் சம்பளம் அல்லது அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கும் சேவை கட்டணம் இதில் எது குறைவோ அந்த தொகையை முகவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்பவர் கட்டணமாக கொடுத்தால் போதுமானது.
ஆக, இந்த விஷயங்களை எல்லாம் கவனித்து, வெளிநாட்டில் வேலைக்குப் போனால், எந்த வகையிலும் ஏமாறாமல் பொன்னும் பொருளும் சேர்த்துகொண்டு தாயகம் திரும்பலாமே!
செய்யவேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்!
அரசு அங்கீகாரம் பெற்ற அயல்நாட்டு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் முகவர்களை மட்டுமே அணுகவேண்டும்.
அயல்நாடு வேலை வாய்ப்பு குறித்த எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, பண பரிவர்த்தனைகளாக இருந்தாலும் சரி, அதற்கான ரசீதுகளை உடனுக்குடன் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.
மெயின் முகவர்களின் உதவியுடன்தான் அயல்நாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும். எந்தவொரு பரிவர்த்தனைகளாக இருந்தாலும் அது இவர்களின் மூலம் நடைபெறுமாறு பார்த்துக்கொள்ளலாம். துணை முகவர்களை நம்பி எந்தவொரு டாக்குமென்ட்களையும், பண பரிவர்த்தனைகளையும் செய்யக் கூடாது. அப்படி செய்வதன் மூலம் கூடுதல் செலவு ஆவதுடன் வேலை கிடைக்க காலதாமதம் ஆகலாம்.
வெளிநாட்டிற்குச் சென்ற பின்னரோ அல்லது வேலை தேடும் சமயங்களிலோ பாஸ்போர்ட் புதுப்பிக்கும் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
வெளிநாட்டில் எந்த நிறுவனத்தாருக்காக நீங்கள் வேலை பார்க்கச் செல்கிறீர்களோ, அந்த நிறுவனத்தைத் தவிர்த்து கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதற்காக மற்ற நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்கக் கூடாது.
வேலை ஒப்பந்த காலத்திற்குள் ஏதேனும் பிரச்னை என்றால் அந்த நாட்டில் இருக்கும் இந்தியத் தூதரகத்திடமோ அல்லது எந்த முகவரின் உதவியுடன் வெளிநாட்டிற்கு சென்றீர்களோ அவர்களிடமோ தெரியப்படுத்தலாம்.
வெளிநாடுகளில் வேலை செய்யும் காலத்தில் எங்கு வெளியில் செல்வதாக இருந்தாலும் ஐ.டி. கார்டுடன்தான் செல்லவேண்டும்.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மாதிரியான சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அதன்படி நடக்கவேண்டுமே தவிர்த்து, முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
எந்த நாட்டில் வேலை செய்து வருகிறீர்களோ, அந்த நாட்டின் வேலைக்கான சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.
உதவிக்கு அணுகுங்கள் !
வெளிநாட்டு வேலை தொடர்பான விளக்கங்களைப் பெற தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: Overseas Manpower Corporation Limited, Government Industrial Training Institute Campus for Women, No.42, Alandur Road, Thiru-vi-ka Industrial Estate, Guindy, Chennai-32.
மேலும், விண்ணப்பங்களை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு 2250 2267, 2250 1538 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்தைக் காணலாம்.
வெளிநாடுகளில் பணிபுரியும்போது உதவிக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை அழைத்துக் கூடுதல் தகவல்களைப் பெறலாம். தாங்கள் அணுகும் ஏஜென்சி நிறுவனம் உண்மையானதா என்று அறிய மேலே சொன்னபடி
www.moia.gov.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல்திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்துகொள்ள
www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தைக் காணுங்கள்.
http://pettagum.blogspot.in/2013/05/blog-post_867.html
--
சொர்க்கத்திற்கு இலகுவான வழி பசித்தோருக்கு உணவு அளித்தல் :
சொர்கத்திற்கு இலகுவான வழி பசிதோருக்கு உணவு அளித்தல் :அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ தோழனே அல்லாஹுவின் அருள் பொருந்திய மூமினே
இன்று நாம் மறந்த ஒரு உன்னத மான செயல் தர்மம் அல்லாஹுவின் அருளுக்கு உகந்த செயல் தர்மம் அதனை பற்றி பாப்போம்
ஏழைகளுக்கு உணவளிப்பது இறைவனுக்கு உணவளிப்பதைப் போன்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மறுமை நாளின் விசாரணை பற்றிக் குறிப்பிடும் போது இந்தக் கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(மறுமை நாளில்) அல்லாஹ், "ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை" என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியான் இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால் அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அதை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (5021)
உங்களில் யார் இன்று நோன்பு நோற்றிருக்கிறார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று ஜனாஸாவைப் பின் தொடர்ந்திருக்கிறார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று மிஸ்கீனுக்கு உணவு அளித்திருக்கின்றார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் உங்களில் யார் இன்று நோயாளியை சந்தித்தார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் இவையனைத்தும் ஒரு மனிதர் விஷயத்தில் ஒன்றுபட்டிருக்குமானால் அவர் சொர்க்கத்தில் புகுவார் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயி
நபி அவர்கள் என்னிடம் கூறினார்கள். "நான் உமக்கு நன்மையானவற்றின் வாயில்களை அறிவிக்கட்டுமா? நோன்பு கேடயமாகும் மேலும் தண்ணீர் நெருப்பை அணைப்பது போல தான தர்மம் பாவத்தை அழித்துவிடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஅத் இப்னு ஜபல்(ரலி)நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்
தர்மம் செல்வத்தைக் குறைத்து விடுவதில்லை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் மதிப்பை உயர்த்தாமாலிருப்பதில்லை. அல்லாஹ்வுக்காக யாரேனும் பணிவுடன் நடந்தால் அவரை அல்லாஹ் உயர்த்தாமலிருப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி
ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. நிலையான தர்மம் ,பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி
ஒருவர் நபி அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார் "நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு 'இன்னாருக்கு இவ்வளவு' என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
"உலக மக்களில் நீங்கள் 70வது சமுதாயமாக இருக்கிறீர்கள். அந்த 70 சமுதாயங்களில் நீங்கள் தான் சிறந்த சமுதாயம் ஆவீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் மதிப்பு மிக்க சமுதாயம் ஆவீர்கள்." (திர்மிதீ)
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையை நாமும் நம்மால் இயன்றளவு பின் பற்றி தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்க முன் வரவேண்டும்.
அவ்வாறு தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்குவதால் நம் பொருளாதாரம் ஒருப்போதும் குறைவதில்லை மாறாக அவற்றை அல்லாஹ் பல்கி பெருகச்செய்வதாக கீழ்காணும் திருமறை வசனத்தில் கூறுகின்றான்.
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.()2:261)
அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் தர்மம் செய்வதால் இரண்டு நன்மைகள் கிடைக்கிறது, 1. தர்மம் செய்பவரின் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேற்காணும் விதம் அபிவிருத்தி ஏற்படுகின்றது.
2. தர்மம் செய்ததற்கான நன்மைகள் எழுதப்படுகின்றன.
மேற்காணும் இரண்டு நற்பாக்கியங்களும் குறைவின்றி நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், கீழ்காணும் விதம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும் விஷயத்தில் ஏவியவைகளை செய்யவேண்டும், தடுத்தவைகளை தடுத்துக் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் தங்களிடம் உதவிக் கேட்டு வந்தவர்களை எதாவது ஒருக் காரணத்தைக் கூறி திருப்பி அனுப்பியதில்லை.
உதவி கோரியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து அனுப்புவார்கள் அவர்களிடத்தில் கொடுத்து உதவ ஏதுமில்லை என்றால் உதவிக் கோரியவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் தோழர்களிடத்தில் சென்று இவர்களுக்கு இயன்றளவு உதவி செய்யுங்கள் என்று பரிந்துரை செய்வார்கள்.
ஒருக் குழுவாக உதவி கேட்டு வந்தால் மிம்பரில் ஏறி நின்று மக்களை அழைத்து தான தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டும் திருமறைக் குர்ஆன் வசனங்களை எடுத்துக்கூறி உருக்கமாக உரை நிகழ்ததி மக்;களின் உள்ளங்களை அந்த ஏழைகளின் மீது ஈர்க்கச் செய்து விடுவார்கள்.
சிறிது நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளதை கொண்டு வந்து கொட்டி அவர்களின் பையை நிறைத்து அனுப்புவார்கள்.
நபி(ஸல்)அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய)நாவினால் நிறைவேற்றித் தருவான் எனக்கூறினார்கள்.1432. அபூமூஸா(ரலி) அறிவித்தார்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
இன்று நம்மில் பலர் கை வசம் எதுவும் இருந்தால் கொடுத்து உதவுகிறோம்,
கை வசம் எதுவும் இல்லை என்றால் இல்லை என்றுக் கூறி ஒதுங்கி விடுகிறோம்,
நம்மிடம் இருப்பு இல்லை என்றாலும் உதவிக் கோரி வந்தவர்களை நம்முடைய நண்பர்களிடம், உறவினர்களிடம், அல்லது உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்ய வேண்டும், அவர்களிடமும் எதுவும் கிடைக்க வில்லை என்றால் தொண்டு நிருவனங்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்;ய வேண்டும். இவ்வாறான எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நபி வழி.
அண்ணலார் அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி நாமும் நம்மால் இயன்ற அளவு தர்மம் செய்து அல்லாஹ்வின் பேரருளை அடைந்து கொள்வதற்கு முயற்சி செய்வோம், எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.
எங்களது பாவங்களை எங்களது பெற்றோட்களின் பாவங்களை உலக முஸ்லீம்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
தோழர்களே இந்த பதிவுகளை அதிகம் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள் இந்த பக்கத்தில் இணையுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு விடுங்கள் எங்களது பணி தொடர துஆ செய்யுங்கள்
ஹஸ்புனல்லாஹ் நிமல் வக்கீல்
தவக்கல்து ஆலல்லாஹ்
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாஹ் பில்லாஹ்அல்லாஹுவை அஞ்சிக்கொள்ளுங்கள் தோழர்களே
http://kulasaisulthan.wordpress.com--