Saturday, January 17, 2015

டூத் பேஸ்ட்… எது பெஸ்ட்?

காஜல் அகர்வால், 'உங்கள் டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கா?' என்கிறார். ஷாரூக் கானோ, 'இரண்டு நிமிடம் பிரஷ் செய்ய வேண்டும்' என்று அறிவுறுத்துகிறார். சூர்யாவின் 'நெருங்கி வருவாய்! நெருங்கி வருவாய்!' என்ற வாசம் வீசப் பாடுகிறார். 'பல்கூச்சத்திற்கு இந்த டூத்பேஸ்ட்தான் சிறந்தது' என்று டாக்டர் ஒருவரின் அறிவுரைஇப்படி தொலைக்காட்சியில் எந்தச் சேனலைத் திருப்பினாலும் டூத்பேஸ்ட் விளம்பரங்கள். இறுதியில், எந்த டூத்பேஸ்ட் தான் வாங்குவது? 

மார்க்கெட்டில் என்னென்ன டூத்பேஸ்ட்கள் கிடைக்கின்றன, எதை உபயோகப்படுத்தலாம் என்பது பற்றி, புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பல் மருத்துவர் எஸ்.தேவகுமாரியிடம் விரிவாகப் பேசினோம்.

பற்பசைகளில் என்னென்ன வகைகள் உள்ளன? அதன் பலன்கள் பற்றி சொல்லுங்கள்?

'பற்களை வலுப்படுத்தும், காரையைத் தவிர்க்கும், பற்களை வெண்மையாக வைத்திருக்கும், பற்கூச்சத்தைப் போக்கும் பற்பசை என பல்வேறு வகையான பற்பசைகள் உள்ளன.

ஃப்ளோரைட் டூத்பேஸ்ட்

(Fluoride) ஃப்ளோரைட் உள்ள பற்பசை, பற்களின் எனாமலைப் பாதிக்கக்கூடிய அமிலத்திற்கு எதிராகச் செயல்பட்டு, எனாமலைப் பாதுகாத்து பல்லை வலுப்படுத்துகின்றது; பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது.

காரை படியாமல் தடுக்கும் டூத்பேஸ்ட்: இதில் இருக்கும் ஃப்ளோரைட், பைரோபாஸ்பேட்ஸ் (Pyrophosphates),டெட்ராசோடியம் பைரோபாஸ்பேட் (Tetrasodium pyrophosphate)மற்றும் ஸிங்க் சிட்ரேட் (Zinc citrate) போன்ற மூலப்பொருட்கள் காரை படியாமல் காப்பதுடன், பற்களில் படிந்த காரையையும் நீக்குகின்றன. மேலும் சில டூத்பேஸ்ட்களில் உள்ள ட்ரைக்ளோஸன் (Triclosan)என்னும் மூலப்பொருள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கிறது.

வெண்மைப்படுத்தும் டூத்பேஸ்ட்: முத்து போன்ற வெண்மையான பற்களைத் தரும். இவற்றில் உள்ள சிராய்க்கும் தன்மைகொண்ட கால்ஷியம் பாஸ்பேட் மற்றும் அலுமினா போன்ற மூலப்பொருட்கள் உணவு, பானம் மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் கறைகளை நீக்கி பற்களைப் பளபளப்பாக்குகின்றன. அதிகம் சிராய்க்கும் தன்மையால், சில சமயம் பற்களுக்குப் பாதிப்பைக்கூட ஏற்படுத்தலாம். எனவே, இதை தினசரி உபயோகப்படுத்த விரும்பினால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பற்கூச்சத்தைத் தவிர்க்கும் டூத்பேஸ்ட்: ஸ்ட்ரான்ஷியம் குளோரைட் என்னும் மூலப்பொருள் பல்லின் மிக நுண்ணிய குழாய்களை (Microtubules)அடைத்து, வெப்பம் மற்றும் குளிர்ச்சி உணர்வுகளை பற்களில் உள்ள நரம்புகளைச் சென்றடையாமல் தடுக்கிறது. பொட்டாஷியம் சிட்ரேட் (Potassium citrate)  மற்றும் பொட்டாஷியம் நைட்ரேட் (potassium nitrate) போன்ற மூலப்பொருட்கள் நரம்புகள் வழியாக வலி உணர்வு கடத்தப்படுவதைத் தடுப்பதுடன், பற்கூச்சம் உள்ளவர்களுக்கு ஏற்படும் வலிகளைக் குறைக்கிறது.

ஈறுகளைப் பாதுகாக்கும் டூத்பேஸ்ட்: இதில் இருக்கும் ஸ்டேனஸ் ப்ளோரைட் (Stannous fluoride) பற்களின் ஈறுகளில் வீக்கம் வராமல் தடுக்கிறது.

டிரெய்னிங் ஜெல் டூத்பேஸ்ட்: பல் தேய்க்கக் கற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கான டூத்பேஸ்ட். இந்தக் குழந்தைகள், சாதாரண டூத்பேஸ்ட்களை உபயோகப்படுத்தினால், பேஸ்ட்டை விழுங்கும் அபாயம் ஏற்படலாம். இதில் உள்ள அதிகப்படியான ஃப்ளோரைடால், 'ஃப்ளோரோஸிஸ்' பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுப்பதற்காகவே குழந்தைகளைக் கவரும் நிறங்களில், ப்ளேவர்களில், குறைந்த அளவு ஃப்ளோரைட் உள்ள ட்ரெய்னிங் ஜெல் டூத்பேஸ்ட் கிடைக்கிறது.

மூலிகை டூத்பேஸ்ட்: ரசாயனம் சேர்க்காத, முற்றிலும் இயற்கையான மூலிகைகளால் தயாரிக்கப்படுகிறது. சாதாரண பற்பசைகளில் உள்ள சில மூலப்பொருட்களுக்கு சென்சிட்டிவாக இருந்தால், இந்த டூத்பேஸ்ட்களை உபயோகப்படுத்தலாம். ரத்தக்கசிவைத் தடுக்கும் ஆற்றல் இருந்தாலும், சில சமயம் வீக்கத்தை மறைத்துவிடும். அதனால் 'க்ரானிக் பெரிஓடோன்டைட்டிஸ்'(Chronic periodontitis)  என்ற பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் போகக்கூடும்.'

எந்த டூத்பேஸ்ட் உபயோகப்படுத்தலாம்? எவற்றைத் தவிர்க்கலாம்?

'ஃப்ளோரைட் டூத் பேஸ்ட்தான் எல்லாப் பற்களுக்கும் ஏற்றது. அடிக்கடி டூத்பேஸ்ட்டை மாற்றுவதும் தவறு. பற்களின் பாதிப்புக்கு ஏற்ப, மருத்துவரின் ஆலோசனைப்படி பற்பசையைப் பயன்படுத்தலாம். என்ன பற்பசை, எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதைவிட, பற்பசையைக் கொண்டு எப்படி பிரஷ் செய்கிறோம் என்பதில்தான் பல்லின் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது.

தேய்மானத்தாலோ, பல் உடைந்துவிடுவதாலோ பற்களின் மேலுள்ள எனாமல் பாதிக்கப்பட்டு அதன் அடியிலுள்ள டென்டைன் (Dentine) வெளியே தெரிய நேரலாம். இதனால் சூடாக டீ, காபி, ஜில் பானங்கள், ஐஸ்க்ரீம் சாப்பிடும்போதும் மற்றும் பல் துலக்கும்போதும் பற்களில் வலி ஏற்படும். இதைத்தான் 'பற்கூச்சம்' என்கிறோம். சிலருக்கு சாதாரணமாகக்கூட ஏதேனும் குடிக்கும்போது, அது பல்லில் பட்டு பற்கூச்சம் ஏற்படலாம். இதனால் தனக்கு பற்கூச்சம் இருக்கிறது என்று தாங்களாகவே நினைத்துக்கொண்டு, பற்கூச்சத்துக்கு எதிரான டூத்பேஸ்ட்களை பயன்படுத்தக் கூடாது.

தங்களுக்கு பற்கூச்சம் இருக்கிறதா என்று பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொண்டபின், அவர் பரிந்துரை செய்தால் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். பற்கூச்சம் உள்ளவர்கள் இந்த டூத்பேஸ்ட்களை மூன்று மாதம் வரை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுவார்கள்; குழந்தைகளுக்கு பட்டாணி அளவுக்கு மேல் உபயோகப்படுத்தக் கூடாது.'

- மு. ஜெயராஜ்

 'பிரெஷ்' டிப்ஸ்!

பெரும்பாலான பல் நோய்களுக்கு, வலியோ அல்லது ஆரம்ப அறிகுறியோ இருக்காது. பல்மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ளும்போது, ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து குணப்படுத்தலாம்.

பல் துலக்கும்போது, பெரும்பாலான ப்ளாக் (Plaque)ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் நீக்கப்பட்டாலும், சில பாக்டீரியாக்கள் அங்கேயே தங்கிவிடும். அவை பல்கி பெருகி, 24 மணி நேரத்துக்குள் பற்களைத் தாக்க தொடங்கிவிடும். எனவேதான், தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.

l உணவு உண்ட பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும்.

l  தினமும் ஒரு முறையாவது ஃப்ளாசிங் (Flossing)செய்ய வேண்டும்.

l இரண்டு முதல் மூன்று மாதத்துக்கு ஒருமுறை டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

l ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல்மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

http://kulasaisulthan.wordpress.com



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: