Saturday, January 24, 2015

சொர்க்கத்திற்கு இலகுவான வழி பசித்தோருக்கு உணவு அளித்தல் :

 

சொர்கத்திற்கு இலகுவான வழி பசிதோருக்கு உணவு அளித்தல் :அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ தோழனே அல்லாஹுவின் அருள் பொருந்திய மூமினே
இன்று நாம் மறந்த ஒரு உன்னத மான செயல் தர்மம் அல்லாஹுவின் அருளுக்கு உகந்த செயல் தர்மம் அதனை பற்றி பாப்போம்

ஏழைகளுக்கு உணவளிப்பது இறைவனுக்கு உணவளிப்பதைப் போன்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மறுமை நாளின் விசாரணை பற்றிக் குறிப்பிடும் போது இந்தக் கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(மறுமை நாளில்) அல்லாஹ், "ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை" என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியான் இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால் அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அதை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (5021)

உங்களில் யார் இன்று நோன்பு நோற்றிருக்கிறார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று ஜனாஸாவைப் பின் தொடர்ந்திருக்கிறார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று மிஸ்கீனுக்கு உணவு அளித்திருக்கின்றார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் உங்களில் யார் இன்று நோயாளியை சந்தித்தார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் இவையனைத்தும் ஒரு மனிதர் விஷயத்தில் ஒன்றுபட்டிருக்குமானால் அவர் சொர்க்கத்தில் புகுவார் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயி

நபி அவர்கள் என்னிடம் கூறினார்கள். "நான் உமக்கு நன்மையானவற்றின் வாயில்களை அறிவிக்கட்டுமா? நோன்பு கேடயமாகும் மேலும் தண்ணீர் நெருப்பை அணைப்பது போல தான தர்மம் பாவத்தை அழித்துவிடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஅத் இப்னு ஜபல்(ரலி)நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்

தர்மம் செல்வத்தைக் குறைத்து விடுவதில்லை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் மதிப்பை உயர்த்தாமாலிருப்பதில்லை. அல்லாஹ்வுக்காக யாரேனும் பணிவுடன் நடந்தால் அவரை அல்லாஹ் உயர்த்தாமலிருப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி

ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. நிலையான தர்மம் ,பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி

ஒருவர் நபி அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார் "நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு 'இன்னாருக்கு இவ்வளவு' என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

"உலக மக்களில் நீங்கள் 70வது சமுதாயமாக இருக்கிறீர்கள். அந்த 70 சமுதாயங்களில் நீங்கள் தான் சிறந்த சமுதாயம் ஆவீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் மதிப்பு மிக்க சமுதாயம் ஆவீர்கள்." (திர்மிதீ)

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையை நாமும் நம்மால் இயன்றளவு பின் பற்றி தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்க முன் வரவேண்டும்.

அவ்வாறு தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்குவதால் நம் பொருளாதாரம் ஒருப்போதும் குறைவதில்லை மாறாக அவற்றை அல்லாஹ் பல்கி பெருகச்செய்வதாக கீழ்காணும் திருமறை வசனத்தில் கூறுகின்றான்.

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.()2:261)

அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் தர்மம் செய்வதால் இரண்டு நன்மைகள் கிடைக்கிறது, 1. தர்மம் செய்பவரின் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேற்காணும் விதம் அபிவிருத்தி ஏற்படுகின்றது.
2. தர்மம் செய்ததற்கான நன்மைகள் எழுதப்படுகின்றன.

மேற்காணும் இரண்டு நற்பாக்கியங்களும் குறைவின்றி நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், கீழ்காணும் விதம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும் விஷயத்தில் ஏவியவைகளை செய்யவேண்டும், தடுத்தவைகளை தடுத்துக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் தங்களிடம் உதவிக் கேட்டு வந்தவர்களை எதாவது ஒருக் காரணத்தைக் கூறி திருப்பி அனுப்பியதில்லை.

உதவி கோரியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து அனுப்புவார்கள் அவர்களிடத்தில் கொடுத்து உதவ ஏதுமில்லை என்றால் உதவிக் கோரியவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் தோழர்களிடத்தில் சென்று இவர்களுக்கு இயன்றளவு உதவி செய்யுங்கள் என்று பரிந்துரை செய்வார்கள்.

ஒருக் குழுவாக உதவி கேட்டு வந்தால் மிம்பரில் ஏறி நின்று மக்களை அழைத்து தான தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டும் திருமறைக் குர்ஆன் வசனங்களை எடுத்துக்கூறி உருக்கமாக உரை நிகழ்ததி மக்;களின் உள்ளங்களை அந்த ஏழைகளின் மீது ஈர்க்கச் செய்து விடுவார்கள்.

சிறிது நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளதை கொண்டு வந்து கொட்டி அவர்களின் பையை நிறைத்து அனுப்புவார்கள்.

நபி(ஸல்)அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய)நாவினால் நிறைவேற்றித் தருவான் எனக்கூறினார்கள்.1432. அபூமூஸா(ரலி) அறிவித்தார்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே,
இன்று நம்மில் பலர் கை வசம் எதுவும் இருந்தால் கொடுத்து உதவுகிறோம்,

கை வசம் எதுவும் இல்லை என்றால் இல்லை என்றுக் கூறி ஒதுங்கி விடுகிறோம்,

நம்மிடம் இருப்பு இல்லை என்றாலும் உதவிக் கோரி வந்தவர்களை நம்முடைய நண்பர்களிடம், உறவினர்களிடம், அல்லது உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்ய வேண்டும், அவர்களிடமும் எதுவும் கிடைக்க வில்லை என்றால் தொண்டு நிருவனங்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்;ய வேண்டும். இவ்வாறான எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நபி வழி.

அண்ணலார் அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி நாமும் நம்மால் இயன்ற அளவு தர்மம் செய்து அல்லாஹ்வின் பேரருளை அடைந்து கொள்வதற்கு முயற்சி செய்வோம், எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.

எங்களது பாவங்களை எங்களது பெற்றோட்களின் பாவங்களை உலக முஸ்லீம்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

தோழர்களே இந்த பதிவுகளை அதிகம் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள் இந்த பக்கத்தில் இணையுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு விடுங்கள் எங்களது பணி தொடர துஆ செய்யுங்கள்
ஹஸ்புனல்லாஹ் நிமல் வக்கீல்
 

 தவக்கல்து ஆலல்லாஹ் 

 லா ஹவ்ல  வலா குவ்வத்த இல்லாஹ் பில்லாஹ்அல்லாஹுவை அஞ்சிக்கொள்ளுங்கள் தோழர்களே

http://kulasaisulthan.wordpress.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: