வேர்ட், நமக்கு விருப்பமான வகையில் டாகுமெண்ட் அமைத்துச் செயல்பட அனைத்து வழிகளையும் தருகிறது. இவற்றை நாம் உணர்ந்து, பழகி டாகுமெண்ட் அமைக்கையில் மேற்கொண்டு வருகிறோம். ஆனால், ஏற்கனவே அமைக்கப்பட்ட டாகுமெண்ட்டில் மாற்றங்களை மேற்கொள்கையில் சில நேரங்களில் தடுமாறுகிறோம். இதில் பலர் அனுப்பியுள்ள சில சந்தேகங்கள் குறித்த குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.
ஹைலைட்டிங் வண்ணம் மாற்ற: வேர்டில் டாகுமெண்ட் உருவாக்குகையில், அதனைப் படிப்பவர்களின் கவனத்தைத் திருப்ப, டெக்ஸ்ட்டின் குறிப்பிட்ட பகுதிகளை ஹைலைட்டிங் செய்கிறோம். எப்படி ஹைலைட்டர் பேனாவினை நாம் செயல்படுத்துகிறோமோ, அதே போல ஹைலைட்டிங் டூல் செயல்படுகிறது. மாறா நிலையில், ஹைலைட்டிங் டூல் மஞ்சள் வண்ணத்தினைத் தருகிறது. ஆனால், இந்த வண்ணத்தினை நீங்கள் விரும்பும் வண்ணத்திற்கு மாற்றலாம். கலர் பிரிண்டர் வைத்து, டாக்குமெண்ட்டினை அச்சிடுபவர்களுக்கு இது அவசியம் தேவை. வண்ணத்தினை கீழ்க் கொடுத்துள்ள வழிகளின்படி மாற்றலாம்.
முதலில் ரிப்பனில் ஹோம் டேப்பினைக் கிளிக் செய்திடவும். இங்கு Font குரூப்பில் கிடைக்கும் ஹைலைட் டூல் (Highlight tool) கொண்டிருக்கும் கீழ் நோக்கிய அம்புக் குறியின் மீது கிளிக் செய்திடவும். உடன், பதினைந்து வண்ணங்கள் கொண்ட கட்டம் உங்களுக்குக் கிடைக்கும். இதில் உங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனால், ஏற்கனவே அமைக்கப்பட்ட டெக்ஸ்ட் ஹைலைட்டிங் வண்ணம் மாறாது. புதியதாக ஏற்படுத்தப்படும் ஹைலைட்டிங் வண்ணம் மட்டும், புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணத்தில் அமையும்.
சரி, உங்களுக்கு ஒரு டாகுமெண்ட் கிடைக்கிறது. அதில் பல இடங்களில், டெக்ஸ்ட் பலவகைகளில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. இது உங்களுக்குப் பிடிக்கவில்லை. இதனை நீங்கள் விருப்பப்படும் ஒரு வண்ணத்திற்கு மாற்றத் திட்டமிடுகிறீர்கள். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம். இதற்கு வேர்ட் புரோகிராம் தரும் find and replace என்ற வசதியினைப் பயன்படுத்தலாம்.
1. முதலில் ஹைலைட் டூல் கிளிக் செய்து, நீங்கள் அமைக்க விரும்பும் வண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்.
2. அடுத்து கண்ட்ரோல் + எச் (Ctrl+ H) கீகளை அழுத்தி Find and Replace டயலாக் பாக்ஸில் Replace டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பெறவும்.
3. Find What என்ற பாக்ஸில், கர்சர் நிற்கட்டும். இனி, Format | Highlight என அழுத்தவும். Format பட்டனை, நீங்கள் More பட்டன் அழுத்திப் பெற வேண்டும்.
4. அடுத்து Replace With பாக்ஸில், மீண்டும் Format | Highlight அழுத்தவும்.
5. அடுத்து Replace All என்பதனை அழுத்தவும்.
டாகுமெண்ட்டில் உள்ள, ஏற்கனவே ஹைலைட் செய்யப்பட்ட வண்ணம் அனைத்தும், ஸ்டெப் 1ல் நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணத்திற்கு மாறி இருக்கும்.
குறிப்பிட்ட பக்கம் செல்ல: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், குறிப்பிட்ட பக்கம் ஒன்றுக்குச் செல்ல விரும்புகிறீர்கள். அதன் பக்க எண் உங்களுக்குத் தெரியும். அந்தப் பக்கத்திற்குச் செல்ல, முதலில் எப்5 கீயினை அழுத்துங்கள். இப்போது Find and Replace டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் டேப் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும். இங்கு Go To What என்பதில் பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் முதலாவதாக Page என்ற ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும். அருகே, Enter Page Number என்று காட்டப்பட்டு நீளமான கட்டம் ஒன்று காட்டப் படும். இதில் பக்க எண்ணை அமைத்து Next என்பதில் கிளிக் செய்தால், உடன் குறிப்பிட்ட பக்கம் திறக்கப்பட்டு காட்டப்படும்.
ஹெட்டர் அல்லது புட்டர் நீக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் ஹெடர் மற்றும் புட்டர்களை அமைத்து, அதில், பக்கங்களில் தொடர்ந்து மேலாகவும், கீழாகவும் வரவேண்டிய டெக்ஸ்ட் அமைப்போம். இவை டாகுமெண்ட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் கிடைக்கும். ஆனால், அவ்வாறு அமைத்த பின்னர், சிலர் இவற்றை நீக்க விரும்புவார்கள். சிலர் தங்களுக்குக் கிடைத்திருக்கும் டாகுமெண்ட்டில் உள்ள ஹெடர் மற்றும் புட்டர்களை நீக்க விரும்புவார்கள். இவர்கள் செயல்பட வேண்டிய வழிகள் கீழே தரப்படுகின்றன.
1. முதலில், எந்த ஹெடரை நீக்க விரும்புகிறீர்களோ, அதில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும்.
2. நீங்கள் Normal அல்லது Outline பயன்படுத்தினால், View மெனுவிலிருந்து Header and Footer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Print Layout வியூவாக இருந்தால், ஹெடர் அல்லது புட்டர் இடத்தில் டபுள் கிளிக் செய்தால் போதுமானது.
3. நீங்கள் புட்டரை அழிக்க விரும்பினால், Header and Footer டயலாக் பாக்ஸில் Switch ஐகானில் கிளிக் செய்திடவும்.
4. அடுத்து ஹெடர் அல்லது புட்டரின் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து Del கீ அல்லது கண்ட்ரோல் + எக்ஸ் கீயை அழுத்தவும்.
6. அடுத்து Close என்பதில் கிளிக் செய்திடவும்.
வித்தியாசமான டெக்ஸ் தேர்வு: வேர்ட் டாகுமெண்ட்டில் வேலை செய்கையில், டெக்ஸ்ட் தேர்வு செய்வது மிக எளிதான ஒன்றுதான். வரிசையாக வரிகள் என்றாலோ, அல்லது விட்டு விட்டு வரிகள் என்றாலோ, அவற்றைத் தேர்வு செய்துவிடலாம். ஆனால், நெட்டுவாக்கில் வரிகளில் சில எழுத்துக்களை மட்டும் தேர்வு செய்திட வேண்டும் என்றால் என்ன செய்வது?
எடுத்துக் காட்டாக, வரிசையான வரிகளில், பத்தாவது எழுத்து முதல், பதினைந்தாவது எழுத்துவரை, அனைத்து வரிகளிலும் மற்றவற்றை விட்டுவிட்டு, தேர்வு செய்திட வேண்டும் எனில் என்ன செய்வது? வேர்ட் இதனை மிக எளிதாக மேற்கொள்ள கீ போர்ட் மற்றும் மவுஸ் பயன்படுத்தும் வழிகளை நமக்குத் தருகிறது. இதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. எந்த டெக்ஸ்ட் பகுதியைக் காப்பி செய்திட வேண்டுமோ, அதன் மேல் இடது மூலைக்கு, கர்சரைக் கொண்டு செல்லவும்.
2.அடுத்து , கண்ட்ரோல் + ஷிப்ட்+ எப்8 (Ctrl+Shift+F8) அழுத்தவும்.
3. அடுத்து, கர்சர் கண்ட்ரோல் கீகளைப் பயன்படுத்தி, நீங்கள் காப்பி செய்திட விரும்பும் டெக்ஸ்ட் முழுமையும் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் மவுஸ் கொண்டு இதனைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். விரும்பிய டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன், நீங்கள் விரும்பிய செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். டெல் (Del) கீ அழுத்தினால், அந்த டெக்ஸ்ட் பகுதி முழுவதும் அழிக்கப்படும்.
Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது.
Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய இடைக்கோட்டினை அமைக்கிறது. இதனால் ஹைபன் அமைக்கப்பட்ட இரு சொற்களும் பிரிக்கப்பட மாட்டா.
Ctrl + T: பாராக்களை ஒரு ஹேங்கிங் இன்டென்ட் எனப்படும் முன் இடைவெளியிட்டு அமைக்கிறது.
Ctrl + Shift + T: மேலே சொன்ன பாரா ஹேங்கிங் இன்டென்ட் இருப்பின் அதனை நீக்குகிறது.
டேபிளில் வரிசையாக எண்களை அமைக்க: வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள Numbering என்ற ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்
தேவையற்ற கோடுகளை தவிர்க்க: வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற் கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.
தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் என்ற AutoFormat As You Type டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.
விருப்பமான இடத்தில் மெனு பட்டன்கள்: நாம் அன்றாடம் வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். அதில் மேலாக உள்ல மெனு பட்டன்களை அவற்றின் வழக்கமான இடங்களில் வைத்துப் பார்த்து தேர்தெடுக்கிறோம். சில வேளைகளில் இவை இடம் மாறி, வேறு ஒரு இடத்தில் இருந்தால் நல்லது என்று எண்ணுவோம். ஆனால் அதற்கு என்ன செய்வது என்று எண்ணாமல் விட்டுவிடுவோம். இதற்கான வழியை இங்கு காண்போம்.
இதற்கு முதலில் Alt கீயை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டுவிடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்
http://kulasaisulthan.wordpress.com
--
No comments:
Post a Comment