Saturday, January 3, 2015

சிலிண்டர் விபத்து இன்ஷூரன்ஸ்... க்ளைம் பெறுவது எப்படி?!


சிலிண்டரை வெளியே வைத்து சமைக்கும்போது, விபத்து ஏற்பட்டால்  க்ளைம் பெறுவதில் சிக்கல் வரும்.
இன்றைய நிலையில் நகர்ப்புறங்களில் காஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது. பயன்படுத்துவதற்கு எளிது என்பதில் ஆரம்பித்து, அரசு மானியம், சுற்றுச்சுழலுக்கு  நல்லது என பல சாதகமான விஷயங்கள் இருப்பதால பலரும் அதையே  பயன்படுத்துகின்றனர்.  

ஆனால், இந்த காஸ் சிலிண்டரினால் சில சமயங்களில் விபத்து நடந்து விடுகிறது. இப்படி விபத்து நடந்தால், ஏற்படும் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இன்ஷூரன்ஸ் மூலம் செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாத தகவல்.

யார் எடுக்க வேண்டும்?
காஸ் சிலிண்டருக்கான இன்ஷூரன்ஸை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எடுக்க தேவையில்லை. அதை சிலிண்டர் டிஸ்ட்ரிப்யூட்டரே எடுத்துவிடுவார்.
அரசு விதிமுறைகளின்படி, காஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் தங்கள் கொடுக்கும் காஸ் இணைப்புக்கு கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டும். இதற்கான ப்ரீமியத்தை விநியோகஸ்தர் கட்டிவிடுவார். இந்த இன்ஷூரன்ஸுக்கான பாலிசி எண், எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டி யதில்லை. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இன்ஷூரன்ஸ் க்ளைம் தொகை போகும்போது எண்ணெய் நிறுவனங்கள் எடுத்து வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளைம் வாங்கிக்கொள்ளலாம். (பிபிசி, ஐஓசி, ஹெச்பிசி ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒரே பாலிசியாக இதை எடுத்து வைத்திருக்கும்.)

பராமரிப்பு முக்கியம்!
காஸ் சிலிண்டர் டிஸ்ட்ரிப்யூட்டரால் அங்கீகரிக்கப்பட்ட காஸ் மெக்கானிக் மூலமாக இரண்டு வருடத்துக்கு ஒருமுறை சிலிண்டர், இணைப்புக் குழாய், ரெகுலேட்டர், அடுப்பு ஆகியவை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு 75 ரூபாய் கட்டணம் உண்டு. அத்துடன் மெக்கானிக் மாற்றச் சொல்லும் பொருட்களை உடனடியாக மாற்றுவது முக்கியம். இதற்கு தனியாக செலவாகும். இணைப்புக்கு குழாய் சுமார் 170 ரூபாயும், ரெகுலேட்டர் சுமார் 250 ரூபாயும் ஆகும். அரசினால் ஐஎஸ்ஐ முத்திரை அளிக்கப்பட்ட நிறுவனத்தின் பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.

அதிகபட்சம் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை இணைப்புக் குழாயை கட்டாயமாக மாற்றவேண்டும். பச்சை கலர் இணைப்புக் குழாயை பயன்படுத்தக் கூடாது. இதைப் பயன்படுத்தும்போது அதிக அளவு விபத்துகள் ஏற்படுகிறது. இவை அனைத்துக்கும் ரசீது வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். ஏனெனில், விபத்து ஏற்பட்டு க்ளைம் செய்யும் சமயங்களில் இந்த ரசீது கட்டாயம் தேவை.
அதேபோல. காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால் அடுப்பு, ரெகுலேட்டர் ஆகியவற்றை அணைத்துவிட்டு உடனடியாக உங்களின் விநியோகஸ்தருக்கு தெரிவிப்பது அவசியம். அவர் வந்து சரிசெய்து தந்தபின் மீண்டும் அடுப்பை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இதை சரியாகச் செய்யாமல் விபத்து ஏற்பட்டால், க்ளைம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

சிலிண்டரை பயன்படுத்தும் முறைகள்!
வீட்டுத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக வாங்கப்படும் சிலிண்டர்களை, வேறு எந்தவிதமான காரியத்துக்கும் பயன்படுத்தக் கூடாது. அதாவது, ஹோட்டல்களுக்கு விற்பது, அண்டை வீடுகளுக்கு கடன் தருவது போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது நல்லது.
மேலும், உங்களுடைய வீட்டிலே ஏதாவது சுபகாரியங்கள் நடக்கும்போது வீட்டிலே உங்கள் சமையல் அறையில் வைத்து சமைத்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதே சிலிண்டரை வெளியே அல்லது தரையில் வைத்து சமைக்கும்போது, அதனால் விபத்து ஏற்பட்டால் அந்தச் சமயத்திலும் க்ளைம் பெறுவதில் சிக்கல் வரும்.
சிலிண்டர் வைக்கும் இடத்துக்கு அருகில் ஸ்விட்ச் போர்டு இருக்கக்கூடாது. அதோடு, அடுப்பு மேடைக்கு கீழ்தான் சிலிண்டர் வைத்திருக்க வேண்டும். எளிதில் தீபற்றிக் கொள்ளும் பொருட்களை வைக்கக்கூடாது.

எப்படி க்ளைம் செய்வது?
சிலிண்டரைப் பொறுத்த வரை, நீங்கள் இணைப்பு வைத்திருக்கும் எண்ணெய் நிறுவனம் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ், விநியோகஸ்தர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் என இரண்டு இன்ஷூரன்ஸ் இருக்கும். இதில் சிலிண்டர் விபத்தினால் ஏற்பட்டால் அதை உடனடியாக விநியோகஸ்தருக்கு தெரிவிக்கவேண்டும். அவர் விபத்தை நேரில் ஆய்வு செய்து, அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத்  தெரிவிப்பார். க்ளைம் விண்ணப்பத்தையும் தருவார். காவல் துறைக்கு அந்த விபத்தைத் தெரிக்க வேண்டுமெனில், அதையும் நீங்கள் செய்யவேண்டும். இன்ஷூரன்ஸ் அதிகாரி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து உங்களின் க்ளைம் தொகையை நிர்ணயிப்பார். இதில் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் முகவரி, நபரின் பெயர் ஆகியவை சரியாக இருக்கவேண்டும்.

காஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வர காலதாமதமானால், விபத்து ஏற்பட்டு பொருட்கள் சேதம் அடைந்தற்கான ஆதாரத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். தரை சேதம் அடைந்திருந்தால் அதை, காஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரும்வரை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது அதை சரிசெய்ததற்கான ரசீதை வைத்திருக்கவேண்டும்.  
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஒன்றிரண்டு தெரு தாண்டி வீட்டை மாற்றினால்கூட, பலசமயங்களில் காஸ் டிஸ்ட்ரிபியூட்டருக்கு தெரிவிப்பதில்லை. இது தவறு.  இதுபோன்ற சமயங்களில் விபத்து ஏற்பட்டால், உங்களுக்கான க்ளைம் நிராகரிக்கப்பட நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

 எவ்வளவு க்ளைம் பெறலாம்?
சிலிண்டர் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, இவ்வளவு தொகைக்குதான் க்ளைம் என எந்தவிதமான வரைமுறையும் கிடையாது. விபத்தின் தன்மையைப் பொறுத்தும், அதன் பாதிப்பைப் பொறுத்தும் க்ளைம் தொகை வித்தியாசப்படும். மேற்கூறிய பாதுகாப்பு அம்சங்களையெல்லாம் சிறப்பாகச் செய்தாலே விபத்துகளைத் தவிர்க்கலாம். இதையும் தாண்டி, விபத்து ஏற்பட்டால் இன்ஷூரன்ஸில் க்ளைம் பெற்று, பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்! 


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: