Saturday, July 14, 2012

ரமளானும் அதன் சிறப்புகளும்

ரமளானும் அதன் சிறப்புகளும் - S. ALAUDEEN

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

 அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)  ஒவ்வொரு வருடமும் நம்மை வந்து அடையும் புனித மாதத்தை வரவேற்பதில் மிக அதிக அளவில் நாம்  மகிழ்ச்சி  அடைகிறோம். இன்னும் சில தினங்களில் நம்மை வந்து அடைய இருக்கும் ரமளானைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2:183)

நோன்பு சென்று போன சமூகத்தாருக்கும் கடமையாகி ஆரம்ப காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பை கடமையாக்கி இருக்கிறேன் என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான்.

ரமளான் பிறை:


'ரமளான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள். (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி : 1906)

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்:

'ரமளான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)நூல்: புகாரி: 1898).

'ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி :1899).

நோன்பும் உள்ளமும்:

நோன்பு பசியை உணரச்செய்கிறது. நல்ல பழக்கங்களை கற்றுத் தருகிறது. பிறருக்கு உதவும் எண்ணத்தை தாராளமாக வழங்குகிறது. மற்ற நேரங்களில் உதவும் எண்ணம் இல்லாதவர்கள் கூட நோன்பு காலங்களில் பிறருக்கு உதவி செய்யும் நிலைகளை காணமுடிகிறது.

எந்த ஒரு காரியத்தையும் தொடர்ந்து செய்தால் பழக்கமாகிவிடும். மற்ற நேரங்களில் மனிதர்கள் பல தவறுகளில் இருந்தாலும் நோன்புக் காலங்களில் எல்லாவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்கள். இப்படியே தொடர்ந்து கொண்டு இருப்பதால் (வருடா வருடம் நோன்பு வைப்பதால்) இறையச்சத்துடன் நோன்பு வைத்தவர்களின் கஞ்சத்தனம், தீய செயல்கள் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை விட்டு அகன்று உள்ளத்தை தூய்மைபடுத்தி நல்லபழக்கத்தை கற்றுத்ததருகிறது புனித ரமளான் நோன்பு.

http://www.seasonsnidur.blogspot.in/

--
*more articles click*
www.sahabudeen.com



No comments: