Sunday, May 29, 2011

உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!


உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
'
இந்திய ராணுவ ஜெனரலின் செல்போன் எண்ணை வெளி​நாட்டுத்தீவிரவாதிகளுக்குக் கிடைக்கச்செய்து, செல்போன் சேவை நிறுவனத்தின் துணையுடன் அவரது பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்பட்டால் என்ன நடக்கும்?'
 உச்ச நீதிமன்றம் இந்தக் கேள்வியைக் கேட்டதும்​தான்... அதன் விபரீதமும், அதிகாரத்தில் உள்ள ஓட்டைகளும் நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது!
'தனது தொலைபேசி உரையாடல் தவறான அனுமதியின் பேரில் ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்யப்பட்டதால், அதனை வெளியிடக் கூடாது! என்று முன்னாள் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அமர்சிங், 2006-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து ஒரு தடை உத்தரவு பெற்றார். 'அந்தத் தடையை நீக்க வேண்டும், உரையாடல் டேப் வெளியிடப்பட வேண்டும்! எனக் கோரி சி.பி.ஐ.எல். எனப்படும் பொதுநல அமைப்பு தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போதுதான், மேற்படி கேள்வியை உச்ச நீதிமன்றம் கேட்டது. போலியான அனுமதிக் கடிதங்களின் அடிப்படையில் பல்வேறு உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தெரியவந்தன.
ஆனால், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த ரிலையன்ஸ் நிறுவனம், கடந்த 2006 முதல் 2010 வரை ஒன்றரை லட்சம் பேரது தொலைபேசி எண்களைத் தங்களுடைய நிறுவனம் ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளது. அதன்படி, தினமும் 82 பேரது தொலைபேசி உரையாடல்களை அந்த நிறுவனம் ஒட்டுக் கேட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் சார்பில் மட்டுமே ஆண்டுக்கு, 30,000 போன் எண்களை ஒட்டுக்கேட்குமாறு அரசுத் தரப்பில் உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் கூறியது.
டெல்லியில் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்​களில் மட்டுமே 3,588 நபர்களது போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.
'போன்களை ஒட்டுக்கேட்பது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என்றாலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பது அவசியக் கடமை. இது உரிமம் பெறும் ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை மீறினால்,  50 கோடி அபராதம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால், அரசு சொல்லும்படி நாங்கள் ஒட்டுக்கேட்டு தகவலை சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளுக்குத் தருகிறோம்...'' என ரிலையன்ஸ் தெரிவித்தது.
ஒரு தனி நிறுவனம் இத்தனை போன்களை ஒட்டுக் கேட்கும்போது, நாட்டில் உள்ள அனைத்து தொலை​பேசி நிறுவனங்களும் ஒட்டுக் கேட்கும் எண்களின் எண்ணிக்கை தோராயமாக, ஒரு லட்சமாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பார்தி ஏர்டெல் நிறுவனம் 15.25 கோடி சந்தாதாரர்​களுடன் முதலிடத்திலும், 12.57 கோடி சந்தாதாரர்களுடன் ரிலையன்ஸ் இரண்டாம் இடத்திலும், வோடபோன் 12.43 கோடி சந்தாதாரர்களுடன் மூன்றாம் இடத்திலும், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். 8.67 கோடி வாடிக்கை​யாளர்களுடன் நான்காம் இடத்திலும் உள்ளன. மற்ற தொலைபேசி நிறுவனங்கள் ஒட்டுக்கேட்டதையும் கணக்​கிட்டால், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல லட்சம் பேரது போன் ஒட்டுக் கேட்கப்பட்டு இருக்கலாம்!
மத்திய உளவுத் துறை, ராணுவ உளவுத் துறை, சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, வருமான வரித் துறை, ஊழல் தடுப்புப் பிரிவு, போதைத் தடுப்புப் பிரிவு மற்றும் போலீஸார் கேட்டுக்கொள்வதற்கு ஏற்ப, இந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்து கொடுத்து வருகின்றன. மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை, ''மத்திய அரசின் பல்வேறு புலனாய்வு ஏஜென்சிகள் மூலமாக ஆறாயிரம் முதல் எட்டாயிரம் தொலைபேசிகள் வரை ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இது தவிர, மாநில அரசுகள் சார்பாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன...'' என்று கூறியிருக்கிறார்.
இது அதிகாரபூர்வமான புள்ளிவிவரம். நடைமுறையில் எவ்வளவு போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு இருக்கும்?
'ஒட்டுக்கேட்பது தனிமனித உரிமைக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தபோதிலும், செல்போன் மற்றும் இணைய உரையாடல், தகவல் பரிமாற்றங்களை இடையூறு செய்து பதிவு செய்ய 90 கருவிகளை மத்திய அரசும் மற்ற துறைகளும் வாங்கி உள்ளன.
'தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் என்பது பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்​காணிப்பின் கீழ் இயங்கும் அமைப்பு. இது ஆறு கருவிகளையும், ஐ.பி. எட்டு கருவிகளையும் வைத்​துள்ளது. ஒரு கருவியின் விலை சுமார் ஏழு கோடி ரூபாய். இதைத் தவிர, தனியார் செல்போன் சேவை நிறுவனங்கள் மூலமாகவும் ஒட்டுக் கேட்பு நடைபெறுகிறது. 'இவ்வாறு எத்தனை கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன? என பட்டியல் தயார் செய்ய உளவுத் துறையிடம், உள்துறை அமைச்சகம் கேட்டது. அதன்படி, 'சுமார் 2,000 ஒட்டுக் கேட்கும் கருவிகள் இறக்கு​மதி செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
அரசியல், தொழில் துறை வட்டாரத்தில் செல்வாக்கு மிகுந்த நீரா ராடியா, பல்வேறு தரப்பி​னருடன் தொலைபேசியில் உரையாடிய தகவல்கள் ஊடகங்களில் அண்மையில் வெளியாகின. மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் ரகசியமாகப் பதிவு செய்த இந்த உரையாடல்கள், பகிரங்கமாக வெளியாகி இருப்பதற்கு டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, ஹெச்.டி.எஃப்.சி. தலைவர் தீபக் பரேக் உள்ளிட்டோர் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ள​னர். 'தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் ரத்தன் டாடா வழக்கும் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கும் இப்போது சேர்ந்துகொண்டது. தனிமனித உரிமை மீறல் என சொல்வது யார்? குப்பன் சுப்பன் இல்லை. அவர்களுக்குத்தான் மனித உரிமையே இல்லையே... சொல்வது டாடாவும், தீபக் பரேக்கும் அல்லவா! உடனே விழித்துக்கொண்டு, 'தொழிலதிபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என பிரதமர் சொல்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய வர்த்தக வார தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், 'தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு என்பது நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம். வரி ஏய்ப்பு, கறுப்புப் பண மோசடி, நிதி முறைகேடு போன்றவை இதன்மூலம் கண்டுபிடிக்கப்படுகின்றன. எனினும், ஒட்டுக் கேட்கப்படும் தகவல்கள் பகிரங்கமாக வெளியாவது கவலை அளிக்கிறது. ரகசியமாகப் பதிவு செய்யப்படும் டேப்புகளின் விவரங்கள் வெளியாகாமல் இருக்கவும், அவற்றைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கவும்... உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரகசியங்களைக் காக்க தொழில்நுட்ப ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!'' என்றார்.
நாட்டின் நலன் கருதி தொலைபேசி உரையாடல்​களை ஒட்டுக் கேட்பது கட்டாயத் தேவை​யாகிவிட்டது என்றால், அந்த அதிகாரத்தை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். ரகசியத்தைப் பாதுகாக்கவும், தனிமனித உரிமைக்கும் அந்தரங்​கத்துக்கும் மதிப்பளிக்கவும் சரியான விதிகளும், வழிகாட்டுதல்களும் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், ஒட்டுக் கேட்புக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் அமெரிக்காவில் உள்ளதுபோல், இதற்கென நியமிக்கப்பட்ட தனி நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் அல்லது நடுநிலை​யான அமைப்பிடம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசியல் காரணங்களுக்காகவும், சுயநலத்துக்காகவும், தனி நபர்களைப் பழிவாங்கவும் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படாது!
- வழக்கறிஞர் என்.ரமேஷ்

1885-
ம் வருடத்திய இந்தியன் டெலி​கிராப் சட்டம், பிரிவு 5-ன் கீழ் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. இந்தச் சட்டம் சுதந்திரத்​துக்கு முந்தைய சட்டம். தற்போதைய நவீன தொழில்நுட்ப சாதனங்களான செல்போன், இணையம் ஆகியவற்றில் நடக்கும் தகவல் பரிமாற்றங்களை இடையூறு செய்து, அந்தத் தகவல்களைப் பெறுவதற்கும், இதே சட்டத்தின் பிரிவுதான் பயன்படுத்தப்படுகிறது.
'ஒட்டுக் கேட்பு அதிகாரத்தை எப்படி, யார் செயல்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகள் அல்லது வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. சுதந்திரத்துக்குப் பிறகு, வழிகாட்டுதல்களை ஏற்படுத்துவதற்காக எழுந்த கோரிக்கைகளையும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. 'தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது தனிமனித அந்தரங்கத்தில் தலையிடுவது என்றும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதால் தனிமனிதனின் வாழ்வுரிமைக்கு எதிரான செயல் என்றும் குற்றம் சாட்டி, உரிய காரணங்களுக்காக அன்றி தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படக் கூடாது என PUCL (People Union for Civil Liberties) என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக 1996-ல் வழக்குத் தொடுத்தது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தொலைபேசி ஒட்டுக் கேட்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான தேவையான விதிகளையும், வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு விரைவாக ஏற்படுத்த வேண்டும் என்று உத்தர​விட்டது. 'அவ்வாறு விதிகள் ஏற்படுத்தப்படும் வரை ஒட்டுக்​கேட்பதற்கான அதிகாரம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என வழிகாட்டுதல்களையும் நீதிமன்றமே வகுத்தது. அதன்படி,
1. இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, 2. நாட்டின் பாதுகாப்பு, 3. வெளிநாடுகளுடனான நட்புறவு, 4. பொது ஒழுங்கு, 5. குற்றம் புரியத் தூண்டுவதைத் தடுக்க ஆகிய காரணங்களுக்காக மட்டும் அந்த அதிகாரத்தை பயன்​படுத்த வேண்டும். மேலும் ஒட்டுக் கேட்பதற்கான ஆரம்ப உத்தரவை அல்லது அனுமதியை மாநில அல்லது மத்திய அரசின் உள்துறைச் செயலர் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே வழங்க முடியும். எந்த வகையான தகவல் பரிமாற்றம் ஒட்டுக்கேட்கப்பட வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்​பட வேண்டும். மத்திய அரசில் உள்துறைச் செயலர் சட்டத் துறைச் செயலர் மற்றும் தொலைத்தொடர்புத் துறை செயலர் ஆகியோர் அடங்கிய குழு மட்டுமே, உள்துறை செயலர் வழங்கிய ஆரம்ப உத்தரவைப் புதுப்பிக்க முடியும். அதேபோன்ற குழுவை மாநில அரசும் அமைக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் 1996-ல் தீர்ப்பு வழங்கிய பிறகு இன்று வரை ஒட்டுக் கேட்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்​பாக எவ்வித விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை.

No comments: