Sunday, September 1, 2013

அன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள்

அன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள்

 "என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா?" என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.

அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார்.

சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிலிருந்து மாலை வரை மாரடித்து விட்டு மனக் கஷ்டத்துடன் திரும்பும் ஆசிரியராகக் கூட அவர் இருப்பார். அல்லது ஊரில் நடக்கும் ஃபித்னா, ஃபஸாதுகளைப் பற்றி சங்கடப்பட்டுக் கொண்டே திரும்பும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவராக இருப்பார்.

அல்லது இரவெல்லாம் கண் விழித்து காரோட்டி விட்டு வீடு திரும்பும் ஒரு டிரைவராகக் கூட அவர் இருப்பார்.
இப்படிப்பட்டவர்கள் மன அமைதியையும் நிம்மதியையும் தங்கள் மனைவியரிடம் நாடியே வீடு திரும்புவார்கள். ஆனால் இங்கோ அவர் வந்ததும் எரிமலையை எதிர்நோக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு நிம்மதியின்றி தவிப்பார்.

கணவனின் மகிழ்ச்சிக்காக தனது  துன்பத்தையும் மறைத்துக் கொண்ட உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா :

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:

அபூ தல்ஹாவின் மகன் நோயுற்றிருந்தார். ஒரு நாள் அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு வேளியே சென்றிருந்த போது குழந்தை இறந்து விட்டது. இதைக் கண்ட அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி, உடனே கொஞ்சம் உணவைத் தயாரித்தார். பிறகு மய்யித்தை வீட்டின் மூலையில் வைத்தார்.

வெளியே சென்றிருந்த அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு வீடு திரும்பியதும், மகன் எவ்வாறு இருக்கின்றான்? என்று விசாரித்தார். அதற்கு அவரது மனைவி, "அமைதியாகி விட்டான். நிம்மதி பெற்று விட்டிருப்பான் என்பதே என் எதிர்பார்ப்பு" என்று பதிலளித்தார். அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு தம் மனைவி கூறியது உண்மை தான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார். பொழுது விடிந்து குளித்து விட்டு வெளியே செல்ல நாடிய போது மகன் இறந்து விட்டதை மனைவி கூறினார்.

அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தொழுது விட்டுத் தம் வீட்டில் நடந்த சம்பவத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் செய்யக் கூடும்" என்று கூறினார்கள்.

"அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என்று மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்" என்று சுஃப்யான் கூறுகின்றார். (நூல்: புகாரி 1301)

இதே ஹதீஸ் முஸ்லிமில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

உம்மு சுலைம் மூலமாக அபூ தல்ஹாவுக்குப் பிறந்த குழந்தை இறந்து விடுகின்றது. உடனே உம்மு சுலைம் தம் குடும்பத்தாரை நோக்கி, அவரது மகனின் (இறப்புச்) செய்தியை நான் அவரிடம் தெரிவிக்கும் வரை நீங்கள் தெரிவிக்காதீர்கள் என்று சொன்னார். அவர் வந்ததும் இரவு உணவை வழங்கினார். அவர் சாப்பிட்டு முடித்து நீர் பருகவும் துவங்கினார்.
பிறகு உம்மு சுலைம் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அபூ தல்ஹாவிடம் காட்சியளித்தார். அவர் நன்றாக சாப்பிட்டு விட்டு இல்லறத்தில் ஈடுபட்டதும், "அபூ தல்ஹாவே! ஒரு கூட்டத்தார் ஒரு பொருளை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுக்கின்றனர். பின்னர் தாங்கள் இரவல் கொடுத்த பொருளைத் திருப்பிக் கேட்கும் போது, அவ்வீட்டார் கொடுக்காமல் இருப்பது முறையாகுமா?" என்று கேட்கின்றார். அதற்கு அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு, "கூடாது" என்று பதிலளித்தார். "(அது போலத் தான்) உங்கள் மகனின் நிலையைக் கருதிக் கொள்ளுங்கள்" என்று சொல்கின்றார்.

அதற்கு அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு, "என்னை நீ அசுத்தமடைய விட்டு விட்டு இப்போது என்னுடைய மகனைப் பற்றி அறிவிக்கின்றாயே?" என்று கோபப்படுகின்றார். பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவிக்கின்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "சென்று விட்ட அந்த இரவில் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக" என்று துஆச் செய்தார்கள். அது போல் அவர்களுக்குக் குழந்தை பிறக்கின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அந்தச் செய்து எடுத்துச் சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம்பழத்தை மென்று கொடுத்து அப்துல்லாஹ் என்று பெயர் வைத்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4496)

பொதுவாக பிள்ளைகளைப் பறி கொடுத்த பெண்கள் தங்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் அரிது! அதனால் அழுது தீர்ப்பதோடு அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளைக் கூட அள்ளி வீசுவார்கள். ஆனால் இங்கு உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா தமது கணவரிடம், பொய்யைத் தவிர்ப்பதற்காக, "அமைதியடைந்து விட்டான், நிம்மதியடைந்து விட்டான் என்று கருதுகின்றேன்" என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள். மேலும் இரவல் பற்றிய பீடிகையைப் போட்டு நேரமறிந்து, மகன் இறந்த செய்தியை எவ்வளவு பக்குவமாக எடுத்து வைக்கின்றார்கள் என்று நாம் பார்க்க முடிகின்றது. இது போன்ற ஒரு பக்குவத்தையும் அணுகுமுறையையும் தமது கணவனிடம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கனிவான ஆறுதல்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதன் முதலில் மிகப் பாரமான இறை வஹீயைப் பெற்று விட்டு நடுநடுங்கிக் கொண்டு வந்த நேரத்தில் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா உதிர்த்த வார்த்தைகள் இஸ்லாமிய வரலாற்றில் அழியாத வைர வரிகள் ஆகும்.

(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதன் முதலில் "வஹீ" அறிவிக்கப்பட்ட போது) இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து, "என்னைப் போர்த்துங்கள். என்னைப் போர்த்துங்கள்" என்று கூறினார்கள். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டு, தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள்.

அப்போது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா, "அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவு படுத்த மாட்டான். நீங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கின்றீர்கள். வறியவர்களுக்காக உழைக்கின்றீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 3)

உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் உயரிய ஆலோசனை

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் உம்ராச் செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.

இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "எழுந்திருங்கள்! அறுத்துப் பலியிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!" என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போது உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, யோசனை வழங்குகின்றார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! பலிப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து. அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்" என்று உம்மு ஸலமா அவர்கள் கூறினார்கள்.

உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை.

இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப் பிராணிகளை அறுத்து. ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பலிப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர். (அறிவிப்பவர்: உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2732)

இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் புத்திக் கூர்மை மிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.

மனைவிமார்களின் அணுகுமுறை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அணுகுமுறை போன்று அறிவு ரீதியானதாகவும், கணவன் ஈடுபட்டிருக்கும் துறைக்கு உகந்ததாகவும், அவர் மாட்டியிருக்கும் சிக்கலைத் தீர்ப்பதாகவும் அமைந்திருக்க வேண்டும். கணவன் சந்திக்கும் பிரச்சனைகள் அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சதாரணமான வீட்டுப் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

விருந்துபசரிப்பில் அசத்திய தம்பதியர்

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காக) தமது மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், "எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை" என்று பதிலளித்தனர்.

ஆகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இவரை சேர்த்துக் கொள்பவர் யார்?" அல்லது "இவருக்கு விருந்தளிப்பவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "நான் (விருந்தளிக்கின்றேன்)" என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு தமது மனைவியிடம் சென்றார்.

"அல்லாஹ்வின் தூதருடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து" என்று (தம் மனைவியிடம்) கூறினார். அதற்கு அவருடைய மனைவி, "நம்மிடம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவும் இல்லை" என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், "உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு" என்று கூறினார்.
அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று விளக்கை அணைத்து விட்டார்.

பிறகு (இருக்கும் உணவை விருந்தாளியை உண்ணச் செய்து விட்டு) அவரும் அவரது மனைவியும் உண்பது போல் அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர்.

காலையானதும் அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான்" அல்லது "வியப்படைந்தான்" என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், "தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்" எனும் (59:9) வசனத்தை அருளினான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3798)

இது போன்று எல்லாப் பிரச்சனைகளுக்கும் மனைவியரின் அணுகுமுறைகள் மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் அமைந்திருக்குமானால் இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் வெற்றி கிடைப்பதற்கு இது காரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி : சத்தியப்பாதை

http://chittarkottai.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: