இஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி!
ஸ்பெக்ட்ரம் – சுடுகாடு – சவப்பெட்டி – பேர்பர்ஸ்
இவை எல்லாம் என்ன? தி.மு.க – அதிமுக – பாரதீய ஜனதா – காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஊழல் பட்டியல்கள். இந்த கட்சிகள் அனைத்தும் தங்களது கொள்கைகளில் நேரெதிராக இருந்தாலும் ஊழல் செய்வதில் ஒருவருக்கு மற்றொருவர் சற்றும் சளைத்தவர்கள் அல்ல எனபது ஒவ்வொரு நாளும் செய்திகளின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. ஏன் இப்படி நடக்கிறது? இவர்கள் அனைவரும் பத்தரைமாற்று தங்கங்கள் என்றல்லவா இத்தனை நாளும் காவடி தூக்கினோம்? இவர்களை இதய தெய்வம் என்று பூஜித்து வந்த தனது தொண்டர்களை ஏமாற்ற எப்படி மனது வந்தது? என்ன காரணம்? என்பதை சற்று இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு பார்ப்போம்.
ஆட்சியாளர்களுக்குரிய தகுதி
முகமது நபிக்கு பிறகு ஆட்சியாளராக பதவி ஏற்ற ஜனாதிபதி அபுபக்கர் தனது மக்களிடம் ஒரு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
'மனிதர்களே! உங்கள் தலைவனாக நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். நான் உங்கள் எல்லோரையும் விடவும் சிறந்தவன் என்று நான் எண்ணவில்லை. நான் சத்தியம் தவறாது நடந்தால் நீங்கள் எனக்குத் துணையாக இருக்க வேண்டும். நான் பிழை செய்தால் நீங்கள் என்னைத் திருத்த வேண்டும். உங்கள் விவகாரங்களில் நான் இறைவனின் கட்டளைப்படி நடந்து கொள்ளும் போது நீங்கள் எனக்கு கட்டுப்பட வேண்டும். இறைவனின் தூதர் சென்ற வழியில்தான் நானும் செல்வேன். நான் நேர்மையை கைக் கொண்டு ஒழுகினால் நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் கோணல் வழி சென்றால் என்னை நேர்வழிப்படுத்துங்கள்.' –ஹூகூகல் இன்ஷான், பக்கம் 160
இப்படிப்பட்ட ஒரு சிறந்த ஆட்சியாளரை உருவாக்கிய முகமது நபியை இங்கு நாம் நினைவு கூறுகிறோம். நம் நாட்டு தற்போதய ஆட்சியாளர்களையும் இங்கு ஒப்பிட்டு பார்க்கிறோம்.
அடுத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி உமரைப் பற்றி பார்ப்போம்:
உமருடைய ஆட்சி காலத்தில் பஹ்ரைனின் ஆளுநராக அபுஹூரைராக நியமிக்கப்டுகிறார். ஆட்சியில் அமர்ந்த சில காலங்களிலேயே மிகப் பெரிய செல்வந்தராக ஆகி விட்டார் அபுஹூரைரா. இந்த விஷயம் ஜனாதிபதி உமரின் கவனத்துக்கு வருகிறது. அபுஹூரைராவை வரவழைத்து விசாரிக்கிறார் உமர்.
ஜனாதிபதி உமர்: உம்மை பஹ்ரைனுக்கு அதிகாரியாக நியமித்தபோது உமது காலில் அணிய செருப்பும் இருக்கவில்லை.
இப்பொழுது நீர் 1600 தீனார் கொடுத்து ஒரு குதிரை வாங்கியுள்ளதாய் அறிகிறேன்.
அபுஹூரைரா: ஆம். எங்களுக்கு ஒன்றல்ல. பல குதிரைகள் உண்டு. நமக்கு ஏராளமான சன்மானங்கள் கிடைக்கின்றன.
ஜனாதிபதி உமர்: உமக்கு உணவுக்கும் ஏனைய தேவைகளுக்கும் போதிய பணத்தை அரசாங்கத்திலிருந்து பெற்றுக் கொள்ள நாம் ஏற்பாடு செய்திருந்தோமே!
அபுஹூரைரா: அப்படியானால் எனக்குக் கிடைத்த சன்மானங்களை எல்லாம் உம்மிடம் ஒப்படைக்கவா சொல்கிறீர். அது முடியாது.
ஜனாதிபதி உமர்: முடியாது. இறைவன் மீது ஆணையாக உமது முதுகை உரிப்பேன். (எழுந்து தம் கையிலிருந்த சாட்டையால் அபுஹூரைராவின் முதுகில் அடித்து) எங்கே அந்த பணம்?
அபு ஹூரைரா: நான் அவற்றை எல்லாம் தர்மம் செய்யப் போகிறேன்.
ஜனாதிபதி உமர்: நீர் சம்பாதித்து நேர்மையான முறையில் பொருள் திரட்டி அவற்றை உமது இஷ்டம் போல் தர்மம் செய்யலாம். நீர் வசூலித்த பணம் அரசுக்கு சேர வேண்டிய பணம்.
என்று கடுமையாக கூறி அவரது சம்பளத்தை கணக்கிட்டு உபரியாக உள்ள சொத்துக்களை எல்லாம் அரசு கஜானாவில் சேர்க்கிறார் உமர். பின்னால் தனக்கு ஏற்பட்ட சிறிய சஞசலத்தை உணர்ந்த அபு ஹூரைரா உமரின் நியாயமான வாதங்களை ஏற்றுக் கொள்கிறார்.
அடுத்து எகிப்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த அம்ருப்னுல் ஆஸ் என்பவரும் உமரின் விசாரணையிலிருந்து தப்பவில்லை. ஒரு முறை எகிப்து ஆளுனருக்கு ஜனாதிபதி உமர் கடிதம் ஒன்று எழுதுகிறார்.
'உமக்கு அளவுக்கதிகம் பொருட்களும் கால்நடைகளும் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். நீர் அங்கு பதவியேற்கச் சென்றபோது அப்படி ஒன்றும் இருக்கவில்லையே!'
இதற்கு அம்ருப்னுல் ஆஸ் அனுப்பிய பதில்:
'இது விவசாயமும் வர்த்தகமும் மலிந்த செல்வம் கொழிக்கும் நாடு. தேவையை விடக் கூடுதலாக வருவாய் நமக்குக் கிடைக்கிறது'
அந்த கடிதத்துக்கு ஜனாதிபதி உமர் எழுதிய பதில் கடிதம்:
'பல தீய அதிகாரிகளின் செயல்களிலிருந்து நான் நிறைய அனுபவம் பெற்றுள்ளேன். உமது பதிலும் ஏதோ பயந்தவன் எழுதியது போல் தெரிகிறது. நான் உம் மீது சந்தேகம் கொள்கிறேன். உமது சொத்துக்களைப் பரிசீலனை செய்ய முஹம்மது பின் மஸ்லமாவை அனுப்புகிறேன். அவர் கேட்கும் சகல விபரங்களையும் நீர் கொடுக்க வேண்டும்.'
ஜனாதிபதியின் உத்தரவுக்கு கீழ்படிந்த எகிப்து ஆளுநர் அந்த அதிகாரியிடம் தமது சொத்து விபரங்களை எல்லாம் ஒப்படைக்கிறார். – -ஹூகூகல் இன்ஷான், பக்கம்46
ஒரு நாட்டின் ஆளுநராக இருப்பவர்களும் ஜனாதிபதியின் கட்டளைக்கு அடி பணிய வைத்தது உளப்பூர்வமான இறை பக்தி. அது இரு தரப்பும் இருந்ததால்தான் ஊழலற்ற ஆட்சியை அவர்களால் கொடுக்க முடிந்தது. இறப்புக்கு பிறகு ஒரு வாழ்வு இருக்கிறது. அங்கு நாம் பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் இவர்களை நீதியின் பக்கம் நிற்க வைத்தது.
அடுத்து ஒரு சம்பவம்
ஜனாதிபதி நோய்வாய்பட்டபோது ஜனாதிபதி உமருக்குப் பிறகு யார் வருவது என்ற பிரச்னை வருகிறது. அரச சபையில் சில பேர்களை தேர்வு செய்து ஜனாதிபதி உமரிடம் கொடுக்கின்றனர். அந்த பட்டியலில் உமருடைய மகனின் பெயரும் இருந்தது. அந்த பட்டியலில் இருந்தவர்களில் தலைமைத்துவத்துக்கு மிகவும் ஏற்றவராக உமரின் மகன் இருந்தார். இருந்தும் தனது மகன் என்ற ஒரே காரணத்துக்காக அவரை அந்த பட்டியலிலிருந்து நீக்கி மற்றவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க உமர் பணிக்கிறார்.எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை! இந்த எண்ணம் எத்தனை ஆட்சியாளர்களிடத்தில் இருக்கும்? இன்று வாரிசுகள் புகாத அரசியல்வாதிகளை பார்க்க முடிகிறதா? இன்று நமது நாட்டின் அத்தனை ஊழல்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பவர்கள் அரசியல்வாதிகளின் வாரிசுகளே!
முன்பு ஜெயலலிதாவின் மீது கோர்ட்டு தண்டனை கொடுத்த போது தமிழகம் எத்தனை பிரச்னைகளை ஏற்கொண்டது. இன்னும் இரண்டொரு நாட்களில் வேறு யாரும் கைதானால் என்னென்ன ரகளைகள் நிறைவேறுமோ தெரியவில்லை.
எனது நாட்டை சுயநலமிகளிடமிருந்து இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.
நன்றி:சுவனப்பிரியன்
http://chittarkottai.com--
No comments:
Post a Comment