Sunday, November 17, 2013

(அதிகாலை ஆண்கள்) அதிகாலையில் எழும்புவது கடினமாக உள்ளதா?

(அதிகாலை ஆண்கள்) அதிகாலையில் எழும்புவது கடினமாக உள்ளதா?

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை
இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: "யா அல்லாஹ்!எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!" (அபூதாவூத்)

அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும்இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம்இருக்கின்றது.

ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்-தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்:

"அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்." (பைஹகீ)
ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள்.

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:

"படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான். வானவர்களிடம் கேட்கின்றான்:"வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..!

படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..?என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது அருள்மீது ஆசை வைத்தா…?
எனதுதண்டனையைப் பயந்தா…?" பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்:"உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்:
அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்." (அஹ்மத்)

நபிகளாரின் வேதனை:

உபை இப்னு கஅப் (ரலி)அறிவிக்கின்றார்: ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகை முடித்தபின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள்:"இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?"
மக்கள், "இல்லை.." என்று கூறினர். மீண்டும், "இன்னவர் வந்தாரா..?"
என்று கேட்க, மக்களும் "இல்லை" என்று கூற, பெருமானார் (ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்:

"நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா)
கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்." (புகாரி,முஸ்லிம்)

ஆம். நபித்தோழர்களின் காலத்தில் இறை-நம்பிக்கை-யாளர்களை அளக்கும் அளவுகோலாக இந்த இருவேளைத் தொழுகைகள்தாம் இருந்தன. இப்னு உமர் (ரலி) கூறுகின்றார்: "ஸுபுஹ் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும்

யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களைக் குறித்து நாங்கள் மோசமாகவேஎண்ணியிருந்தோம்" (அதாவது நயவஞ்சகர்கள் என்று).

அண்ணலாரின் அமுத மொழிகள்:

மறுமையில் ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தில் இருளில் ஒளியின்றி நடப்பவர்களுக்கு நற்செய்தியாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

"(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில் முழுமையான ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்" (பைஹகீ)

"சூரிய உதயத்திற்கு முன்புள்ள தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப் பின் உள்ள தொழுகையையும் (ஸுபுஹ், இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில் ஒருநாளும்நுழைய மாட்டார்" (முஸ்லிம்)
யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்." (தபரானி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவிக்கின்றார்: யார் ஒளு செய்தபின் பள்ளிவாசலுக்கு வந்து ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத் தொழுது பின்னர் ஃபஜ்ர் தொழுகையையும் தொழுகின்றாரோ அவர் நன்மக்களின் பட்டியலிலும்,அல்லாஹ்வின் தூதுக்குழுவினரின் பட்டியலிலும் எழுதப்படுகின்றார்."

ஒவ்வொரு நாளும் வானவர்கள் இரு தடவை இந்தப் பூமிக்கு வருகை தருகின்றார்கள். அவர்கள் அனைவரும் அஸர் தொழுகையிலும் ஸுபுஹ் தொழுகையிலும் சந்தித்துக் கொள்கின்றார்கள். பணி முடித்துத் திரும்பும் வானவர்களிடம்
அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கின்றான்:
"எனது அடியார்களை எந்நிலையில் சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?" அதற்கு வானவர்கள் கூறுவார்கள்:"அவர்கள் தொழுகையில் இருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையிலேயே விட்டு வந்தோம்."(திர்மிதி)

அதிகாலை சூரியன் உதயமாகும் வரை தூங்குபவர்களைக் குறித்து அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகளாரின் பதில் இது: "அந்த மனிதரின் காதுகளில் ஷைத்தான் சிறுநீர்க் கழித்து விட்டான்"

யூதப் பெண் அமைச்சரின் பதில் :

நான் அரபுலகில் வசித்தபோது யூதப் பெண் அமைச்சர் ஒருவரின் நேர்காணலைப்பத்திரிகையில் படிக்க நேர்ந்தது. கோல்டா மேயர் என்ற அந்தப் பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கின்றனர். "கடைசி காலத்-தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறியுள்ளாராமே.. அதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்..?" இதுதான் கேள்வி.

அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா..? "ஆம். நாம் அதனை நம்புகின்றோம்.

ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்". அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்?" என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க, அப்பெண்மணி கூறினார் :

"ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்றுஎன்றைக்கு முஸ்லிம்கள் ஸுபுஹ் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்றுவேண்டுமென்றால் அது நடக்கலாம். அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை." அப்பெண்மணியின் மதி நுட்பத்தைப் பாருங்கள். இஸ்லாமியச் சமூகத்தை எவ்வாறுஎடை போட்டு வைத்துள்ளார் என்பதைக் கவனியுங்கள்.

'யூதர்களால் நாங்கள் சுக்கப்படுகின்றோம்; எங்களைக் காப்பாற்று' என்று நாம் இறைவனிடம் இருகைஏந்துகின்றோமே.. இறைவன் ஏன் நமது இறைஞ்சுதல்கள் மீது இரக்கம்காட்டுவதில்லை..? அவனது கட்டளையை நாம் நிராகரித்தோம்; அவன் நமதுவிண்ணப்பங்களை நிராகரிக்கின்றான் அவ்வளவுதான். காலை 7 மணி முதல் 10 மணி வரை சாலைகளில் போக்கு வரத்து நெரிசலைச் சற்றுகவனித்துப் பாருங்கள். கூட்டம் கூட்டமாக மக்கள். புற்றீசல்கள் போன்று எங்கிருந்து இவ்வளவு மக்களும் ஒரு சேரப் புறப்பட்டு வந்தனர் என்று தோன்றும். அதில் முஸ்லிம்களும் கணிசமாக இருப்பர்.

ஆச்சரியம் சுமார் 3 மணி நேரத்திற்கு முன் இம்முஸ்லிம்கள் எல்லாம் எங்கிருந்தனர்..? உயிருடனா அல்லதுஉயிரற்றவர்களாகவா..? உயிருடன்தான் இருந்தனர் என்றால் ஸுபுஹ் தொழுகைக்குப்பள்ளிவாசலுக்கு ஏன் வரவில்லை? யாரிடம் கேட்டால் இதற்கான பதில் கிடைக்குமோதெரியவில்லை.

அதிகாலைத் தொழுகையில் அரை வரிசையை வைத்துக்கொண்டு அமெரிக்காவை வெற்றி கொள்ள நாம் ஆசைப்படுகின்றோம். பள்ளிவாசலில் பாதி வரிசை கூட இல்லை;

பலஸ்தீன் எங்களுக்கே என்கிறோம். ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு நடத்துகின்றோம். முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும் என்கிறோம். எப்படிக் கிடைக்கும்?

அதிகாலைத் தொழுகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

மாற்றத்தின் நேரம் அதிகாலை உலகில் பெரும் மாற்றங்களை எல்லாம் அதிகாலை நேரத்திலேயேதான் அல்லாஹ்ஏற்படுத்தி உள்ளான். உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம்அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.

ஹூத் (அலை) அவர்களின் ஆத் கூட்டத்தை அழித்ததைக் குறித்து
அல்லாஹ்கூறுகின்றான்: "இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள்வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் அங்கு தென்படவில்லை." (46:25)

ஸாலிஹ் நபி (அலை) அவர்களின் சமூத் கூட்டத்தைக் குறித்து இறைவன்குறிப்பிடுகின்றான் : "திடுக்குறச்செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற(உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்" (7:91) (இதே கருத்தை அத்தியாயம் ஹூத் வசனம் 94, அல்ஹிஜ்ர் வசனம் 83 ஆகியவற்றிலும் காணலாம்.)
 லூத் (அலை) அவர்களின் சமூகத்தைக் குறித்து மிகத்தெளிவாகவே அல்லாஹ்கூறுகின்றான்: "எந்த வேதனை இம்மக்களைப் பீடிக்கப்போகிறதோ, அந்த வேதனைதிண்ணமாக அவளையும் பீடிக்கப்போகிறது. இவர்களை அழிப்பதற்காகநிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமாஇருக்கிறது?" (11: 81)

ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்துக் கூறுகின்றான் : "இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம்வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்" (29:37) இவ்வாறு ஒவ்வொன்றாக நாம் கூறிக்கொண்டே போகலாம். மண்ணோடு மண்ணாக்கப்பட்ட அத்தனை சமூகங்களும் அநேகமாக அதிகாலை நேரத்திலேயே அழிக்கப்பட்டுள்ளனர். ஆகவேதான், மக்கத்து சமூகமும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் செய்தியைஏற்றுக்கொள்ளாமல் ஏளனம் செய்தபோது அல்லாஹ்வின் எச்சரிக்கை இவ்வாறுஇருந்தது: "என்ன, இவர்கள் நம்முடைய தண்டனைக்காக அவசரப்படுகின்றார்களா? அதுஅவர்களின் முற்றத்தில் இறங்கிவிடுமாயின்,

எவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாளின் அதிகாலை மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும்" (37:176,177)
(இப்போது கூறப்பட்ட அத்தனை வசனங்களிலும் அதிகாலை என்பதற்கு ஸுபுஹ் எனும் அரபிச் சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.)

பண்டைய காலத்தில்தான் இவ்வாறு அதிகாலை என்பது அழிவிற்கான நேரமாகஇருந்தது என்று நாம் நிம்மதி அடைய வேண்டாம். இன்றும் அவ்வப்போதுஅல்லாஹ்வின் எச்சரிக்கைகள் அதிகாலை நேரத்திலேயேதான் வருகின்றன.

2004-இல் ஏற்பட்ட சுனாமி அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது. துருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயே நடைபெற்றன.

2009 -இல் ஆப்ரிக்கா ஹெய்தியில் 3 லட்சம் பேர் பலியான பூகம்பமும் அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.

ஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும் அநேகமாகஅதிகாலை 3 முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள்கூறுகின்றன.

இன்னும் இன்னும் ஏராளம் கூறலாம். இவை அனைத்தும் அல்லாஹ்வின் வேதனை என்றோ எச்சரிக்கை என்றோ எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

மரணம் என்பது அல்லாஹ்வின் விதி. அது வந்தே தீரும். அதில் எந்த ஐயமும்எவருக்கும் இருக்க முடியாதுதான். ஆனால், துர் மரணம் என்பது…?

அல்லாஹ்வின்தூதரே பாதுகாப்பு கேட்ட விஷயம் அல்லவா? மேலே கூறிய அனைத்தும் துர் மரணம்அல்லவா? அல்லாஹ் பாதுகாப்பானாக!

"யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில்இருக்கின்றார்" என்று நாம் மேலே கூறிய ஹதீஸின் முழுமையான பொருள் இப்போதாவது புரிகின்றதா..?

நாம் செய்ய வேண்டியது என்ன?

1) தூங்கு முன் நாளை கண்டிப்பாக ஸுபுஹ் தொழுவேன் (இன்ஷா அல்லாஹ்) என்றஉறுதியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள் (எழுந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்றல்ல!)

2) படுக்கும் முன் அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்.

3) தவறிய தொழுகைகளுக்காக பாவமன்னிப்புக் கேளுங்கள்.

4) நாம் தொழுதால்தான் நமது பிள்ளைகள் தொழுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்

5) அலாரம் வைத்துக் கொண்டு தூங்குங்கள்.

6) சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவதே நபிவழி என்பதை நினைவில் வையுங்கள்

7) கெட்ட முஸ்லிம்களுக்கு நாமே முன்னுதாரண-மாக அமைந்துவிடக்கூடாது என்பதாக உறுதி எடுங்கள்.

வழக்கமாக ஸுபுஹ் தொழும் நல்லவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

9) ஒளுவுடன் தூங்குவதற்கு முயலுங்கள்.

10) தம்பதிகளாக இருந்தால் முதலில் எழும் ஒருவர் மற்றவரைத் தண்ணீர்தெளித்தாவது எழுப்ப முயலுங்கள். அல்லாஹ்வின் அருள் அதில்தான்அடங்கியுள்ளது.
( MSM.பாயிஸ்)
Mohamed Faiz
Saudi Arabia



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: