Monday, November 11, 2013

சூனியமும் ஜோதிடமும் இஸ்லாம்கூறுவதென்ன?

சூனியமும் ஜோதிடமும் இஸ்லாம்கூறுவதென்ன?

அளவிலாக் கருணையும் நிகரிலா கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலாதும் ஸலாமும் இறுதி நபி மீது உண்டாவதாக!

இன்றைய காலகட்டத்தில், மருத்துவம் செய்வதாகக் கூறிக் கொண்டு சூனியம், ஜோதிடம் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை செய்யக் கூடிய மந்திரவாதிகள் பெருகிவிட்டனர். அறியாமைக்கு ஆளாகியுள்ள சாமானிய மக்களை ஏமாற்றுகின்றனர்! இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் நலன் நாடுதல் என்கிற ரீதியில் – இத்தகைய போக்கில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பேராபத்து உள்ளதென்பதைத் தெளிவாக விளக்கிட நாடினேன். ஏனெனில், இதனால்; அல்லாஹ் அல்லாதவர்களுடன் மக்கள் தொடர்புகொள்கிற அவர்களும் காரண காரியத்திற்கு அப்பாலிருந்து நிவாரணம் அளிப்பவர்களே என்று நம்புகிற சூழ்நிலை ஏற்படுகிறது! மேலும் இந்தப்போக்கில் அல்லாஹ் – ரஸுலுடைய கட்டளைகளுக்கு மாறு செய்வதும் உள்ளது!

இது குறித்து- அல்லாஹ்வின் உதவியை நாடியவனாக நான் கூறுவது இது தான்:

நோய்க்கு சிகிச்சை பெறுவது ஆகுமான ஒன்றே என்பது ஏகோபித்த கருத்தாகும். எனவே சிறந்த மருத்துவரிடம் செல்ல வேண்டும். அதாவது, உட்பிரிவு நோய்களிலும் அறுவைச் சிகிச்சையிலும், நரம்பு நோய்கள் ஆகியவற்றிலும் திறமை பெற்ற மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்க்க வேண்டும். அவர்களுக்கு என்ன நோய் என்பதை அவர் உறுதிப் படுத்திக்கொண்டு, பொருத்தமான ஷரீஅத்தில் அனுமதியுள்ள மருந்துகளின் மூலம் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார். அவர் கற்றுத் தேரிய மருத்துவத் திறமைக்கு ஏற்ப மருத்துவம் செய்வார்.

இதற்கு அனுமதி உண்டு. ஏனெனில், இது சாதாரணமாக நடைமுறையிலுள்ள, காரண காரியங்களுக்குட்பட்ட ஒன்று தான். மேலும் தவக்குல் (இறைவனையே முழுவதும் சார்ந்திருத்தல்) எனும் பண்புக்கு இது முரணானதல்ல. மேலும் அல்லாஹ், (இவ்வுலக வாழ்வில்) சில நோய்களைக் கொடுத்துள்ளானெனில் அவற்றிற்கான மருந்தையும் வழங்கியே இருக்கிறான். இதனை அறிந்தவர் அறிந்தார்., அறியாதார் அறியாது போனார்! ஆனால் அல்லாஹ், என்னென்ன பொருள்களை அடியார்கள் மீது ஹராம் விலக்கப்பட்டவையாக ஆக்கினானோ அவற்றில் அவர்களுடைய நிவாரணத்தை வைக்கவில்லை!

எனவே நோயாளிகள் ஜோசியக்காரர்களிடம் செல்வது கூடாது., மறைவானவற்றை அறிவதாக வாதிடக்கூடிய இத்தகையவர்களிடம் தங்களுடைய நோய்களைத் தெரிந்து கொள்ளலாமெனச் செல்வது கூடாது. மேலும் அவர்கள் சொல்லக்கூடிய விஷயங்களை உண்மையென ஏற்றுக் கொள்வதும் கூடாது!

ஏனெனில் அவர்கள் விஷயங்களை இட்டுக் கட்டி யூகத்தின் அடிப்படையில் சொல்கிறார்களே தவிர வேறில்லை! மேலும் தங்களது நோக்கம் நிறைவேறுவதற்காக உதவி வேண்டி ஜின்களை அழைக்கிறார்கள் எனில் இவர்கள், இல்முல் ஃகைப் எனும் மறைவான உண்மைகளை அறிவதாக வாதிடுகிறார்களெனில் இவர்கள் குஃப்ர் எனும் இறை நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் உள்ளனர் என்பதே இவர்களைப் பற்றிய சட்ட நிலையாகும்!

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
من أتى عرافاً فسأله عن شيء لم تقبل لهصلاة أربعين ليلةஒருவர் நட்சத்திரம் பார்த்து குறி சொல்பவரிடம் சென்று ஏதேனும் விஷயமாக விசாரித்தால் அவருடைய நாற்பது நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது" நூல் : முஸ்லிம் பாகம்: 4 பக்கம் : 1751 ஹதீஸ் எண்: 2230

அபூஹுரைரா (ரலி) அறிவித்துள்ளார்கள்., நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
من أتى كاهناً فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد
யாரேனும் (மறைவான விஷயங்களைச் சொல்வதாக வாதிடும்) சோதிடர்களிடம் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால், முஹம்மத்صلى الله عليه وسلم அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை அவர் நிராகரித்து விட்டார்" நூல் : அபூதாவூத் பாகம்: 4 பக்கம்: 225 ஹதீஸ் எண்: 3904

இமாம் ஹாகிம் அவர்கள் பின்வருமாறு அறிவித்து அதனை ஸஹீஹ் தரத்திலானது என்றும் கூறியுள்ளார்கள்:
நட்சத்திரம் பார்த்துக் குறி சொல்பவரிடமோ ஜோசியரிடமோ ஒருவர் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால் அவர், முஹம்மத்صلى الله عليه وسلم அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை நிராகரித்து விட்டார்" நூல்: ஹாகிம், பாகம்1-8

இந்த நபிமொழிகளில் குறி சொல்பவர்கள், ஜோசியம் பார்ப்பவர்கள், சூனியக்காரர்கள் ஆகியோரிடம் செல்வதும் அவர்களிடம் விளக்கம் கேட்பதும் அவர்கள் சொல்வதை நம்புவதும் கூடாது என்று தடையும் எச்சரிக்கையும் உள்ளது!

எனவே ஆட்சியாளர்கள், அதிகாரத்திலுள்ளவர்கள், தீன்-இறைமார்க்க விவகாரங்களைக் கண்காணிப்பவர்கள், ஏனைய பொறுப்பாளர்கள் ஆகியோரின் கடமையாதெனில், குறி சொல்பவர்களிடமோ ஜோதிடர்களிடமோ மக்கள் செல்வதை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்., இத்தகைய தொழில் செய்வோர் தெருக்களுக்கோ கடைவீதிகளுக்கோ வராமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மந்திரவாதிகள் சொல்வது, சில விஷயங்களில் சரியாக இருப்பதை வைத்துக் கொண்டும் இவர்களிடம் வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை வைத்துக் கொண்டும் ஏமாந்து விடக்கூடாது. ஏனெனில் இவர்களிடம் வருவோர் அறியாதவர்களாவர்!

இவர்களிடம் செல்வதையும் விளக்கம் கேட்பதையும் இவர்கள் சொல்வதை உண்மைப்படுத்துவதையும் நபிصلى الله عليه وسلم அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்பதே நமக்குப் பெரும் ஆதாரமாகும். மட்டுமல்ல, அப்படிச் செல்வதில் பெரும் தீமையும் பேராபத்தும் உள்ளன., மோசமான பின் விளைவுகளும் அதிலுண்டு!

ஜோதிடர்களும் மந்திரவாதிகளும் இறைநிராகரிப்பவர்களே என்பதற்கு மேற்சொன்ன நபிமொழிகளில் தெளிவான ஆதாரம் உள்ளது. ஏனெனில் இவர்கள் மறைவான விஷயங்களை அறிவதாக வாதிடுகிறார்கள். அப்படி வாதிடுவது குஃப்ர் எனும் இறை நிராகரிப்பாகும். மேலும் இவர்கள் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஜின்களைப் பூஜிக்கிறார்கள். அப்படி செய்வது ஷிர்க்-இணைவைப்பும் குஃப்ர்- நிராகரிப்புமே ஆகும். மறைவான விஷயங்களை அறிவதாக வாதிடக் கூடிய இவர்களை யார் உண்மைப்படுத்துகிறாரோ அவரும் இவர்களைப் போன்று நிராகரிப்பவரே ஆவார். மேலும் இந்தத் தொழிலைச் செய்வோரிடம் சென்று யார் யார் மந்திரத்தையும் ஜோசியத்தையும் கற்றார்களோ அவர்களை விட்டும் அல்லாஹ்வின் தூதர்صلى الله عليه وسلم அவர்கள் விலகிவிட்டார்கள்., எந்த விதத்திலும் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர்.

இந்த மந்திரவாதிகள் சொல்கிற சிகிச்சை முறையை நம்புவது முஸ்லிம்களுக்குக் கூடாது. உதாரணமாக, இவர்களது மந்திர முனங்கலையும், மந்திரித்துக் கோடுகள் கிழிப்பது, தகடு எழுதுவது, அதனை தாயத்தில் கட்டிக் கொடுப்பது போன்ற இவர்களது வீணான செயல்களையும் நம்புவதும் அதன்படி செயல்படுவதும் முஸ்லிம்களுக்குக் கூடாது. ஏனெனில் இவை எல்லாம் ஜோசியம் பார்ப்பது போன்றது தான். மக்களைக் குழப்பத்திலாழ்த்தும் காரியங்கள் தாம்! யார் யார் இவற்றில் திருப்தி கொள்கிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த மந்திரவாதிகளின் வழிகேட்டிற்கும் குஃப்ர் எனும் நிராகரிப்புக்கும் துணை போனவர்களே ஆவர்!

மேலும் எந்த முஸ்லிமும் இந்த மந்திரவாதிகளிடம் சென்று தன் மகனுக்கு அல்லது உறவினருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? என்று கேட்பதோ கணவன் – மனைவிக்கு மத்தியில் அன்பும் நட்பும் தோன்றுமா? அல்லது பிரிவும் பகைமையும் ஏற்படுமா? என்று கேட்பதோ கூடாது. ஏனெனில் இவையாவும் ஃகைப் எனும் மறைவான காரியங்களாகும்., இவற்றை அறிவது அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் முடியாது!

சூனியமும் மந்திரமும் குஃப்ர் எனும் நிராகரிப்புப் போக்கைச் சேர்ந்தவையும்- தடை செய்யப்பட்ட தீமைகளைச் சேர்ந்தவையுமாகும். அல்பகரா அத்தியாயத்தில் ஹாரூத், மாரூத் எனும் இருமலக்குகளின் விஷயத்தில் அல்லாஹ் கூறுவது போன்று:

وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ۖ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ ۚ وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ ۚ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ ۚ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ ۚ لَوْ كَانُوا يَعْلَمُون2:102َ
ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் – நிச்சயமாக நாங்கள் (உனக்கு) ஒரு சோதனையே! எனவே (இதனை) நீ கற்று இறை நிராகரிப்பாளனாக ஆகிவிடாதே!,, என்று கூறிய பின்னரே எவருக்கும் கற்றுக் கொடுத்தார்கள். அப்படியிருந்தும் – கணவனுக்கும் மனைவிக்கும் பிரிவை ஏற்படுத்தும் சூனியத்தை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்று வந்தனர். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் இதன் மூலம் எவருக்கும் எத்தீங்கும் இழைக்கக்கூடியவர்கள் அல்லர். உண்மையில், அவர்களுக்குப் பயனளிக்காத (மாறாக) தீங்கு அளிக்கக்கூடிதையே அவர்கள் கற்றுக்கொண்டார்கள். அதனைக் (கற்று) விலைக்கு வாங்கிக் கொண்டவனுக்கு மறுவுலகத்தில் யாதொரு பங்கும் கிடையாது என்பதை அவர்கள் நன்கு அறிந்தே இருந்தனர். தங்களின் உயிரை (அதாவது உழைப்பையும் சக்தியையும்) விற்று அவர்கள் வாங்கிக் கொண்ட பொருள் எத்துணை கெட்டது! இதனை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா?" அல்குர்ஆன் (2: 102)

இத்திருமறை வசனம் பின்வரும் விஷயங்களைத் தெளிவு படுத்துகிறது:

சூனியம் குஃப்ர் எனும் இறைநிராகரிப்பாகும். சூனியம் செய்பவர்கள், கணவன் – மனைவிக்கிடையே பிளவை உண்டு பண்ணுகிறார்கள்;

சூனியம் செய்வது, சுயமாக எவ்விதப் பயனையும் தீங்கையும் ஏற்படுத்தக்கூடியதல்ல. மாறாக, இவ்வுலக நியதியிலான – விதியின் அடிப்படையிலான இறைநாட்டத்தைக் கொண்டு தான் எதையும் அது நிகழ்த்த முடியும். ஏனெனில் அல்லாஹ்தான் நன்மை தீமைகளைப் படைத்தவன். மேலும் கற்பனைகளை இட்டுக் கட்டக்கூடிய இந்த மந்திரவாதிகளால் தீமைகள் பெருகிவிட்டன. அபாயங்கள் கடுமையாகி விட்டன! இவர்கள், இத்தகைய விஷயங்களை, சிலை வணங்கிகளிடம் இருந்து கற்றுக்கொண்டு வந்து, அறிவு நிலையில் பலவீனமாக உள்ள மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார்கள்! இன்னா லில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிஊன், ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல் (திண்ணமாக நாம் அனைவரும் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்., மேலும் திண்ணமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாய் இருக்கிறோம். அல்லாஹ் நமக்குப் போதுமானவன்., பொறுப்பேற்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன்)

சூனியத்தைக் கற்றுக் கொள்ளக்கூடியவர்கள், தங்களுக்கு எவ்விதப்பயனும் அளிக்காத, மாறாக, தீங்கு அளிக்கக்கூடியதையே கற்றுக் கொள்கிறார்கள். சரி, மறுவுலகிலும் சரி அவர்களுக்குக் கடுமையான நஷ்டம் உண்டென்று அறிவிக்கக்கூடிய பெரிய எச்சரிக்கையும் இந்த வசனத்தில் உண்டு.

இத்தகையவர்கள் தங்களது உயிரை (அதாவது உழைப்பையும் சத்தியையும்) மிகவும் மோசமான விலைக்கு விற்று விட்டார்கள். இதனால் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் அவர்களுடைய வியாபாரத்தை மிகவும் இகழ்ந்து கூறியுள்ளான்: தங்களுடைய உயிரை விற்று அவர்கள் வாங்கிக்கொண்ட பொருள் எத்துணை கெட்டது! இதனை அவர்கள் அறிந்திருக்கக்கூடாதா?,, என்று!

அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறோம்: இந்த மந்திரவாதிகள் மற்றும் ஜோதிடர்களின் கெடுதியை விட்டும், முடிச்சுகளில் மந்திரித்து ஊதுபவர்களின் கெடுதியை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பு அளிப்பானாக!

முஸ்லிம்களின் மீது அதிகாரம் பெற்றிருக்கக்கூடிய தலைவர்களுக்கு இந்த சூனியக்காரர்களின் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பதற்கும் அவர்களின் மீது அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்துவதற்கும் அல்லாஹ் நல்லருள்பாலிப்பானாக! அப்படிச் செய்தால்தான் இந்த மந்திரவாதிகளின் தீமையை விட்டும் அவர்களுடைய கெட்ட செயல்களை விட்டும் மக்கள் நிம்மதி பெற முடியும்! நிச்சயமாக அல்லாஹ் பெரும் கொடையாளனும் கண்ணிய மிக்கவனும் ஆவான்!

சூனியம் செய்யப்படும் முன்பாக அதன் கெடுதியில் இருந்து அடியார்கள் தற்காப்புப் பெறக்கூடிய திக்ர் – துஆக்களை அல்லாஹ் தன் ஷரீஅத்தில் அனுமதித்துள்ளான். மேலும் சூனியம் செய்யப்பட்ட பின்பு என்னென்ன திக்ர் – துஆக்களின் மூலம் சிகிச்சை பெற முடியுமோ அவற்றையும் அவர்களுக்குத் தெளிவாக்கிக் கொடுத்துள்ளான். இது அவர்களுக்கு அவன் புரிந்த அருளும் பேருபகாரமும் ஆகும். அவர்கள் மீது அவன் பொழிந்த அருட்கொடைகளைப் பரிபூரணப் படுத்துவதாகவும் உள்ளது.

இப்பொழுது சில வசனங்கள், திக்ர்கள் தரப்படுகின்றன., சூனியம் செய்யப்படும் முன்னர் அதன் ஆபத்திலிருந்து இவற்றின் மூலம் பாதுகாப்புப் பெறலாம். சூனியம் செய்யப்பட்ட பின்னர் சிகிச்சை பெறவும் இவற்றைப் பயன்படுத்தலாம்., இதற்கு ஷரீஅத்தின் அனுமதி உண்டு!

சூனியம் செய்யப்படுவதற்கு முன்னர் அதன் ஆபத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கவல்ல முக்கியமான பயன்மிக்க விஷயம் என்னவெனில், குர்ஆன் – ஹதீஸில் வந்தள்ள திக்ர்கள், பாதுகாப்புத்தேடும் வாசகங்கள் ஆகியவற்றின் மூலம் பாதுகாப்புத் தேடுவதாகும்.

கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகு ஸலாம் கொடுத்தவுடன் ஓதும் திக்ர்களுடன் ஆயதுல் குர்ஸி எனும் குர்ஆன் வசனத்தை ஓத வேண்டும்.

தூங்கும் முன்பாக ஆயதுல் குர்ஸியை ஓதவேண்டும். ஆயதுல் குர்ஸி என்பது குர்ஆனில் வந்துள்ள மிக முக்கியமான வசனமாகும்.

ஆயதுல் குர்ஸி

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

உச்சரிப்பு: அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்ய+ம் , லா தஅஃகுதுஹு ஸினது(ன்வ்) வலா நவ்மு(ன்ல்) லஹு மா ஃபிஸ் ஸமாவாதி வமா ஃபில் அர்ழ் , மன் ஃதல்லதீ யஷ்பஉ இன்தஹு இல்லா பி இஃத் னிஹி , யஅலமு மாபைன அய்தீஹிம் வ மா ஃகல்ஃபஹும், வ லா யஹீதூன பி ஷையி (ன்ம்) மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹு ஸ் ஸமாவாதி வல் அர்ழ் , வலா யஊதுஹு ஹிஃப்ழுஹுமா வ ஹுவல் அலிய்யுல் அழீம்

பொருள்: அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் நித்திய ஜீவன்., (இப்பேரண்டம் முழுவதையும்) நன்கு நிர்வகிப்பவன். தூக்கமோ சிற்றுறக்கமோ அவனைப் பிடிப்பதில்லை. வானங்கள், பூமியிலுள்ளவை யாவும் அவனுடையவையே. அவனது அனுமதி இன்றி அவனது முன்னிலையில் யார் தான் பரிந்து பேசமுடியும்! (மனிதர்களாகிய) இவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும் இவர்களுக்குப் பின்னால் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கு அறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடியதைத் தவிர அவனது ஞானத்தில் இருந்து எவரும் எதையும் புரிந்து கொள்ள முடியாது! அவனது குர்ஸி வானங்கள் பூமி அனைத்தையும் பரந்துள்ளது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. அவன் மிக உயர்ந்தவன்., மகத்துவம் மிக்கவன்!,, (2: 255)

குல் ஹுவல்லாஹு அஹத்سورة الإخلاص

குல்அவூது பிரப்பில் ஃபலக்سورة الفلق

குல் அவூது பி ரப்பிந்நாஸ்سورة الناس

ஆகிய ஸ_ராக்களை, கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னர் ஓத வேண்டும். மேலும் இதே மூன்று ஸுராக்களையும் பகலின் தொடக்கத்தில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு மூன்று தடவையும் இரவின் தொடக்கத்தில் – மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று தடவையும் ஓத வேண்டும்.

_ரதுல் பகராவின் பின்வரும் கடைசி இரண்டு வசனங்களை இரவில் ஓத வேண்டும்:

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ


لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

உச்சரிப்பு: ஆமனர் ரஸுலு பிமா உன்ஸில இலைஹி மிர் ரப்பிஹி வல் முஃமினூன், குல்லுன் ஆமன பில்லாஹி வ மலாஇகதிஹி வ குதுபிஹி வ ருஸுலிஹ், லா னுஃபர்ரிகு பைன அஹதின்(ம்) மிர் ருஸுலிஹ், வ காலூ ஸமிஃனா வ அதஃனா ஃகுப் ரானக ரப்பனா வ இலைகல் மஸீர்,
லா யுகல்லி ஃபுல்லாஹு நஃப் ஸன் இல்லா உஸ்அஹா லஹா மா கஸபத் வ அலைஹா மக் தஸபத், ரப்பனா லா து ஆஃகித்னா இன் நஸைனா அவ் அஃக் தஃனா ரப்பனா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்தஹு அலல்லதீன மின் கப்லினா, ரப்பனா வ லா துஹம்மில்னா மாலா தாகத லனா பிஹ், வஅஃபு அன்னா வஃக்ஃபிர் லனா வர் ஹம்னா அன்த மவ்லானா ஃபன்ஸுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்

பொருள்: இந்தத் தூதர் தம் இறைவடனிம் இருந்து தமக்கு அருளப்பட்டதை நம்புகிறார். அவ்வாறே முஃமின்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குகளையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர்கள் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை பாராட்டுவதில்லை என்றும் எங்கள் இறைவனே! நாங்கள் செவியேற்றோம்., (உன் கட்டளைகளுக்குக்) கீழ்ப்படிந்தோம். எங்கள் இறைவனே! உன்னிடம் மன்னிப்பு கோருகிறோம். உன்னிடமே நாங்கள் திரும்பி வர வேண்டியதிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

அல்லாஹ் எந்த ஆத்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குக் கஷ்டத்தைக் கொடுப்பதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலன் அவருக்கே. அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே! (முஃமின்களே! இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள்:) எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் பிழை செய்திருப்பினும் எங்களைப் குற்றம் பிடிக்காதே! மேலும் எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்திவிடாதே! மேலும் எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்களின் பாதுகாவலன். (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றி கொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!,, (2 : 286)

மேலும் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் வந்துள்ளது:
من قرأ آية الكرسي في ليلة لم يزل عليه من الله حافظ ولا يقربه شيطان حتى يصبح

ஒருவர் இரவில் ஆயதுல் குர்ஸியை ஓதினால் அவருக்காக அல்லாஹ்வின் சார்பில் ஒரு பாதுகாவலர் இருந்து கொண்டே இருப்பார்., அதிகாலை வரை ஷைத்தான் அவரை நெருங்கவே மாட்டான்" நூல்: புகாரி (பாகம்: 9 பக்கம்: 55 நபிமொழி எண்: 5010)

மேலும் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் வந்துள்ளது:

ஒருவர் இரவில் அல்பகரா அத்தியாத்தின் கடைசி இரு ஆயத்துகளை ஓதினால் அவருக்கு அவ்விரண்டும் போதுமானவை யாகும்" (அதாவது எல்லாவிதமான தீங்குகளை விட்டும் அவருக்குப் போதுமானவையாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்)

நூல்: புகாரி, பாகம்: 9 பக்கம் 55 நபிமொழிஎண்:5009 முஸ்லிம் பாகம்: 1 பக்கம்:554-555 நபிமொழி எண்: 807 – 808 அபூ தாவூத் பாகம்: 2 பக்கம்:118 நபிமொழி எண்: 1397 திர்மிதி பாகம்: 9 பக்கம் -188 நபிமொழி எண்: 3043 இப்னு மாஜா பாகம்:1 எண்: 1363 -1364

பின் வரும் திக்ரை ஓதி அதிகம் அதிகமாகப் பிராத்தனை செய்துவரவேண்டும்:
أعوذ بكلمات الله التامات من شر من خلق
உச்சரிப்பு: அவூது பி கலிமாதில்லாஹி மின் ஷர்ரி மா ஃகலக்

பொருள்: அல்லாஹ்வுடைய பரிபூரணமான கலிமாக்களைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.. அவனுடைய படைப்புகளின் தீமையைவிட்டும்!,,

- இதனை இரவு – பகல் நேரங்களில் ஓதிட வேண்டும். பயணத்தின் நடுவே கட்டிடத்தில் அல்லது திறந்த வெளியில் ஆகாயத்தில் அல்லது கடலில் பயணம் செய்தாலும் சரியே!

நபி صلى الله عليه وسلم அவர்கள் அருளினார்கள்:
من نزل منزلاً فقال أعوذ بكلمات الله التامات من شر من خلق لم يضره شيء حتى يرتحل من منزله ذلك

ஒருவர் (பயணத்தின் நடுவே) ஓரிடத்தில் தங்கிட நேர்ந்தால் அப்பொழுது அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாதி மின் ஷர்ரி மா ஃகலக் என்று ஓதினால் அந்த இடத்திலிருந்து அவர் புறப்படும் வரை எந்த இடையூறும் அவருக்கு ஏற்படாது" நூல்: முஸ்லிம் பாகம்: 4 பக்கம்: 2080 நபிமொழி எண்: 2708 திர்மிதி பாகம்: 9 பக்கம்: 396 நபிமொழி எண்: 3499 இப்னு மாஜா பாகம்: 2 நபிமொழி எண்: 3592

பகல் மற்றும் இரவின் ஆரம்ப நேரத்தில் பின்வரும் திக்ரை மூன்று முறை ஓதிவரவேண்டும்:

بِسْمِ الله الّذِي لا يَضُرّ مَعَ اسْمِهِ شَيْءٌ في الأرْضِ وَلا في السّمَاءِ وَهُوَ السّمِيعُ العَلِيمُ

உச்சரிப்பு: பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வ லா ஃபிஸ் ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம்

(நூல்: அபூ தாவூத் பாகம்: 5 பக்கம்: 324 நபிமொழி எண்: 5088 திர்மிதி பாகம்: 9 பக்கம்: 331 நபிமொழி எண்: 3448 இப்னு மாஜா பாகம்: 2 பக்கம்: 289 நபிமொழி எண்: 3592)

பொருள்: எந்த இறைவனுடைய பெயருடன் பூமி – வானத்திலுள்ள எந்தப் பொருளும் எவ்வித இடையூறும் செய்ய முடியாதோ அந்த இறைவனின் திருப்பெயர் கொண்டு (ஆரோக்கியம் கேட்கிறேன்)

இவ்வாறு ஓதிவருமாறு நபிصلى الله عليه وسلم அவர்கள் ஆர்வமூட்டியிருப்பதாக ஆதாரப்பூர்மான நபிமொழி அறிவிப்பு வந்துள்ளது. இவ்வாறு ஓதுவது எல்லாவிதமான தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்கான காரணியாகும்.

மேற்சொன்ன இந்த திக்ர்களும் துஆக்களும் சூனியம், ஜோதிடம் ஆகியவற்றின் தீங்குகளில் இருந்து பாதுகாக்கும் அருமருந்தாகும். தூயமனத்துடனும் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கையுடனும் உறுதிப்பாட்டுடனும் தெளிந்த உள்ளத்துடனும் தொடர்ந்து இவற்றை ஓதிவருபவருக்கு இவை நிச்சயம் பயனளிக்கும். இவ்வாறு இந்த திக்ர்களும் துஆக்களும் சூனியத்தை அகற்றக் கூடியவையாகத் திகழ்கின்றன. அத்துடன் அதன் இடையூறை அகற்றுமாறும் அதனால் ஏற்படும் ஆபத்தை-முஸீபத்தை நீக்குமாறும் அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் துஆ செய்யவும் வேண்டும். அவனிடம் பணிந்து பிரார்த்தனை செய்து வரவும் வேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் தோழர்களுக்கு- சூனியத்தின் விளைவுகள் நீங்கிடக் கற்றுக்கொடுத்த சில துஆக்களை இனி பார்ப்போம்:

اللهم رب الناس أذهب البأس ؤاسف انت اشافي لا شفاء إلا شفائك شفاء لا يغادر سقما

உச்சரிப்பு: அல்லாஹும்ம ரப்பந்நாஸி அத்ஹிபில் பஃஸ, வஷ்ஃபி அன்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக், ஷிஃபாஅன் லா யுஃகாதிரு ஸக்மா

பொருள்: யா அல்லாஹ்! மக்களின் இரட்சகனே! துன்பத்தை அகற்றுவாயாக! மேலும் நிவாரணம் அளிப்பாயாக!
நீயே நிவாரணம் அளிப்பவன். நீஅளிக்கும் நிவாரணம் அல்லாது வேறு நிவாரணம் இல்லை! எந்த நோயையும் விட்டு வைக்காத பூரண நிவாரணத்தை நான் உன்னிடம் கேட்கிறேன்,, (நூல்: புகாரி பாகம்: 10 பக்கம்: 202 நபிமொழி எண்: 5743 மற்றும் பாகம் 10 பக்கம்: 210 எண்: 5750 முஸ்லிம் பாகம்: 4 பக்கம்: 1221 எண்;: 2119 திர்மிதி பாகம்;: 10 பக்கம்: 10 எண்: 3636 இப்னு மாஜா பாகம்: 1 எண்;: 1419)

ஜிப்ரீல் அவர்கள் நபிصلى الله عليه وسلم அவர்களுக்காக பிரார்த்தனை செய்து ஓதிய திக்ர் வருமாறு:

باسم الله أرقيك ، من كل داء يؤذيك ، من شر كل نفس أو عين حاسد الله يشفيك

பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு தங்களுக்காக நான் பாதுகாப்பு வேண்டி துஆ ஓதுகிறேன்., தங்களுக்குத் தீங்களிக்கும் ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும், பொறாமைப்படும் உள்ளம் மற்றும் கண்கள் ஒவ்வொன்றின் தீங்கை விட்டும் அல்லாஹ் தங்களுக்கு நிவாரணம் அளிப்பானாக! அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு தங்களுக்காக நான் பாதுகாப்பு வேண்டி துஆ செய்கிறேன்,, (நூல்: முஸ்லிம் பாகம்: 4 பக்கம்: 1418 எண்: 2186 இப்னு மாஜா பாகம்;: 2 எண்: 568) – மூன்று முறை இதனை ஓத வேண்டும்.

அத்துடன் அல் அஃராஃப் அத்தியாயத்தில் சூனியம் பற்றி வந்துள்ள இந்த ஆயத்துக்ளையும் ஓத வேண்டும்:

وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ

فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ

فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ

உச்சரிப்பு: வ அவ்ஹைனா இலா மூஸா அன் அல்கி அஸாக ஃப இஃதா ஹிய தல்ஃகஃபு மா யஃகிஃபூன், ஃப வகஅல் ஹக்கு வ பதல மா கானூ யஃமலூன், ஃப ஃகுலிபூ ஹுனாலிக வன் கலபூ ஸாஃகிரீன்

பொருள்: மேலும் நீர் உம் கைத்தடியை எறியும் என்று மூஸாவுக்கு நாம் வஹி அனுப்பினோம். அவர் அதனைக் கீழே போட்டதும் அது அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தையும் (நொடிப்பொழுதில்) விழுங்கிவிட்டது. இவ்வாறு உண்மை உண்மை தான் என்று உறுதியாயிற்று. அவர்கள் செய்த சூனியங்கள் யாவும் வீணாகிவிட்டன! அங்கேயே அவர்கள் முறியடிக்கப்பட்டார்கள்., இழிவடைந்து போனார்கள்!,, (7 : 117- 119)

அத்துடன் யூனுஸ் அத்தியாயத்தின் பின்வரும் ஆயத்துக்ளையும் ஓத வேண்டும்:

قَالُوا يَا مُوسَىٰ إِمَّا أَن تُلْقِيَ  وَإِمَّا أَن نَّكُونَ أَوَّلَ مَنْ أَلْقَىٰ

قَالَ بَلْ أَلْقُوا ۖ  فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِن سِحْرِهِمْ أَنَّهَا  تَسْعَىٰ

فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُّوسَىٰ

قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنتَ  الْأَعْلَىٰ

وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا  صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ  ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ

உச்சரிப்பு: காலூ யா மூஸா இம்மா அன் துல்கிய வ இம்மா அன் னகூன அவ்வல மன் அல்கா, கால பல் அல்கூ ஃப இஃதா ஹிபாலுஹும் வ இஸிய்யுஹும் யுஃகய்யலு இலைஹி மின் ஸிஹ்ரிஹிம் அன்னஹா தஸஆ ஃப அவ்ஜஸ ஃபீ நஃப்ஸிஹி ஃகீஃபத(ன்ம்) மூஸா, குல்னா லா தஃகஃப் இன்னக அன்தல் அஃலா, வ அல்கி மா ஃபீ யமீனிக தல்கஃப் மா ஸனஊ இன்னமா ஸனஊஃகைஸு ஸாஹிர்,வலா யுஃப்லிஹுஸ் ஸாஹிரு ஹைது அதா

பொருள்: சூனியக்காரர்கள் கூறினர்: மூஸாவே! நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் முதலில் எறியட்டுமா? (அதற்கு மூஸா கூறினார்:) இல்லை, நீங்கள் எறியுங்கள், உடனே அவர்களின் கயிறுகளும் கம்புகளும் அவர்களின் சூனியத்தினால் ஓடுவது போல மூஸாவுக்குத் தோன்றியது. அப்பொழுது தன் மனத்தில் மூஸா அச்சம் கொண்டார். நாம் கூறினோம்;: (மூஸாவே!) பயப்படாதீர். நிச்சயமாக நீர் தான் வெற்றியாளராவீர். மேலும் உம் வலது கையில் உள்ளதை கீழே போடும். அது, அவர்கள் செய்த (சூனியங்கள்) அனைத்தையும் விழுங்கிவிடும். அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்., ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான். (அல்குர்ஆன் 20 : 65 -69)

சூனியக்காரர்களின் செயல்பாட்டின் மூலம் அதாவது பிராணிகளை அறுத்துப் பலியிட்டோ படையல்களைச் சமர்ப்பித்தோ ஜின்களை வரவழைப்பதன் மூலம் சூனியத்திற்குச் சிகிச்சை செய்வது கூடாது. ஏனெனில் இவை ஷைத்தானியச் செயல்களாகும். இன்னும் சொல்லப் போனால் ஷிர்க் எனும் இணைவைப்பாகும்.

இதே போல ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், மந்திரவாதிகள் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு அவர்கள் சொல்கிறபடி செயல்பட்டு சூனியத்திற்கு சிகிச்சை செய்வது கூடாது. ஏனெனில் அவர்கள் ஈமான் எனும் இறைநம்பிக்கை இல்லாதவர்கள். அத்துடன் அவர்கள் பொய்யர்களாயும் தீமைகள் செய்வோராயும் உள்னர். மேலும் இல்முல் ஃகைப் எனும் மறைவான விஷயங்கள் பற்றிய ஞானம் தங்களிடம் இருப்பதாகவும் வாதிடுகிறார்கள்., பொதுமக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள்! இத்தகைய நபர்களிடம் சென்று விளக்கம் கேட்பதையும் அதனை நம்புவதையும் நபிصلى الله عليه وسلم அவர்கள் தடைசெய்துள்ளார்கள். இதைப் பற்றிய தெளிவான விளக்கம் இந்நூலின் தொடக்கத்தில் சென்றுள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நாம் துஆ செய்கிறோம்: எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்து முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக. அவர்களது தீனை – இறைமார்க்கத்தைப் பாதுகாப்பானாக. மார்க்கத்தைப் பற்றிய நல்லறிவையும் விளக்கத்தையும் அவர்களுக்கு வழங்குவானாக. மார்க்கத்திற்கு முரணான ஒவ்வொரு செயல்களில் இருந்தும் ஈடேற்றம் அளிப்பானாக.

அல்லாஹ்வின் அடியாரும் திருத்தூதருமான முஹம்மத்صلى الله عليه وسلم அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் கிருபையும் சாந்தியும் பொழியட்டுமாக!

عبد العزيز بن عبد الله بن باز
حكم السحر و الكهانة



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: