Thursday, February 28, 2013

படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!

படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!

அரபுலகில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளர்களில் ஒருவரான "அஷ்ஷைக் நபீலுல் அவலி" தனது ஒரு தஃவா அனுபவத்தை இவ்வாறு நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்:

நான் அமெரிக்காவில் ஒரு முறை ஓர் இஸ்லாமிய சொற்பொழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது, திடீரென ஒருவர் எழுந்து அவரது பக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தவ அமேரிக்கருக்கு திருக்கலிமாவை சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நான் ஆனந்தத்தில் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறி, நீர் இஸ்லாத்தை நேசித்ததற்குரிய காரணம் என்ன? இஸ்லாத்தை உமது வாழக்கை நெறியாக தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? என்று அவரிடம் வினவினேன்.
அதற்கவர் அளித்த பதில்: நான் ஒரு மிகப் பெரிய செல்வந்தன், பல கம்பனிகளுக்கு சொந்தக்காரன், உலக இன்பங்களில் எந்தக் குறையும் எனக்கில்லை, ஆனால் நான் எனக்குள் நிம்மதியற்றிருக்கின்றேன். என்னிடம் பணி புரியும் ஒரு முஸ்லிம் இந்தியர் மிகக்குறைந்த சம்பளத்தையே ஊதியமாக பெறுபவர், அவரை நான் பார்க்கும் போதெல்லாம் மலர்ந்த முகத்துடன் தான் காட்சியளிப்பார் இது எனக்குள் மிகப் பெரிய வியப்பை தந்ததுடன் பல கேள்விகளையும் எனக்குள் தொடுத்தது.

நான் மிகப் பெரிய செல்வந்தன், ஒரு நாளாவது எனக்கு மலர்ந்த முகத்துடன் இருக்க முடியவில்லை, ஆனால் சாதாரன ஒரு ஊதியத்தை பெறுகின்ற ஒரு தொழிலாளி எந்நேரமும் மலர்ந்த முகத்துடன் இருக்கு முடிகிறது என்றால் இதன் பின்னனி என்ன?

ஒரு நாள் அவரிடம் சென்று நான் உன்னுடன் சற்று உட்கார வேண்டும்? எனக்கு உன்னிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி உள்ளது. நீ எந்நேரமும் புன்முறுவல் பூத்த நிலையில், மலர்ந்த முகத்துடன் இருக்கின்றாயே அதெப்படி உன்னால் முடிகிறது?. அதற்கவர் சொன்னது: நான் ஒரு முஸ்லிம். "அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்" (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என நான் நம்பியிருக்கின்றேன்.

அதற்கு நான் அவரிடம் அப்படியானால் ஒரு முஸ்லிமுக்கு வாழ்நாள் முழுவதும் மலர்ந்த முகத்துடன் இருக்க முடியுமா? எனக் கேட்டேன். அதற்கவர் ஆம் என்று பதிலளித்தார். நான் அதெப்படி? என மறுபடியும் ஆச்சரியத்தில் கேட்டேன்.

அதற்கவர் நமது தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் நமக்கு இப்படி கூறியிருக்கின்றார்கள்: "இறை நம்பிக்கையாளனின் காரியம் வியப்பிற்குரியதாகும், நிச்சயமாக அவனது வாழ்கையின் சகல காரியங்களும் அவனுக்கு நன்மையளிப்பதாகவே உள்ளது. அவன் தனது வாழ்நாளில் ஒரு துன்பத்தை சந்திக்கும் போது (அல்லாஹ்விற்காக) அதை சகித்துக்கொள்கின்றான் அது அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது, அவன் தனது வாழ்நாளில் மகிழ்ச்சியான ஒன்றை சந்திக்கின்றான் அப்போது அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது. இந்நிலை ஓர் இறை நம்பிக்கையாளனுக்குத் தவிர வேறு எவருக்கும் இல்லை". எனவே எமது காரியங்கள் அனைத்தும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மத்தியில் தான் உள்ளது, துன்பமெனில் அதை அல்லாஹ்விற்காக ஏற்றுக்கொள்வோம், இன்பமெனில் நன்றியுடன் அல்லாஹ்வைப் புகழ்வோம். எனவே எமது மொத்த வாழ்க்கையும் நிம்மதியாகும், ஈடேற்றமாகும், இன்பமாகும் என அவர் பதிலளித்தார்.

இது தான் என்னை இஸ்லாத்தில் நுழைய வைத்தது. "அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்" (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறி அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

الله أكبر الله أكبر الله أكبر

அல்லாஹ் மிகப்பெரியவன்

இந்நிகழ்வு நமது வாழக்கைக்கு வழங்கும் படிப்பினைகள் என்ன?:

சிலர் தஃவா (அழைப்புப் பணி) என்ற உடன் ஏதோ மலையை உடைப்பது போன்று சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். எனக்கு உரை நிகழ்த்த முடியாதே!, எனக்கு எழுத முடியாதே!, என்னிடம் தஃவாவிற்காக செலவிட வசதி இல்லையே. இவ்வாறு தன்னிடம் இல்லாததைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்ளும் இவர்கள். தன்னிடம் உள்ளதை வைத்து இப்பணியை செய்யத் தவறி விடுகின்றனர் என்பது தான் வேதனையான விடயம். இது நமது சமூகத்தின் அதிகமானவர்களின் இன்றைய நிலையாகும்.

புன்முறுவல் பூப்பதற்கு, மலர்ந்த முகத்துடன் இருப்பதற்கு எந்த ஒரு பணமோ, வசதியோ தேவை இல்லை. தஃவாவிற்காக செலவிடுவதற்கு வசிதி இல்லையே என்று எண்ணும் பலர். தன்னிடம் உள்ள இந்த மிகப்பெரிய ஆயுதத்தை தஃவாவிற்கு பயன்படுத்தாது இருப்பது மிகப் பெரிய வேதனையாகும்.
அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த ஒரு பண்பை தனது வாழக்கையின் அணிகலனாக்கிக் கொண்ட ஒரு சாதாரன ஊதியம் பெறும் தொழிலாளி. அவருக்கு பல ஆயிரங்களை, பல லட்சங்களை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக செலவிட முடியாமல் இருக்கலாம், ஆனால் அவரின் உயரிய ஒரு பண்பினூடாக இஸ்லாத்தில் கவரப்பட்டாரே மிகப் பெரிய செல்வந்தர் அவர் இஸ்லாத்திற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாவிலும், நன்மையில் அவருக்கும் பங்கிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?. இதற்கு அல்லாஹ் வைத்திருக்கும் வெகுமதியை பார்த்தீர்களா?. நமது வாழ்வில் நாம் அர்ப்பமாக கருதிக்கொண்டிருக்கும் பலவற்றுக்கு இருக்கும் ஆற்றலை நாம் அறியாமல் இருப்பதுதான் மிகப்பெரிய அறிவீனம்.

ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் போதே மலர்ந்த முகத்துடன் வரவேற்பது இருக்கின்றதே, இது பல மணி நேர உரை, பல கோடிகளை செலவளிப்பதை விட வலிமை மிக்கதாகும். முஸ்லம்களிடம் அல்லாஹ்வின் தூதரின் இந்த உயரிய முன்மாதிரி குடிகொண்டிருக்குமனால் ஏனைய சமூகங்கள் எப்படித் தெரியுமா பேசக்கொள்வார்கள். "முஸ்லிம்கள் என்றாலே மலர்ந்த முகத்துடன் வரவேற்பவர்கள்தான்".

எந்த ஒரு பைசாவும் செலவாகாத இதையே இஸ்லாத்திற்காக செய்ய முன்வராத இவர்கள் வேறு அர்ப்பணிப்புகளை செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பது வெறும் கர்ப்பணையே ஆகும்.

எங்கே அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த முன்மாதிரிகள் நமது வாழ்வில்?:

"உங்களது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பது உற்பட எந்த ஒரு நன்மையான காரியத்தையும் அற்பமாகக் கருதாதீர்கள்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), முஸ்லிம்).

"நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்முறுவல் பூக்கும் ஓருவரை பார்த்தில்லை" என அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்).

"நான் இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் அல்லாஹ்வின் தூதரை புன்முறுவல் பூத்த நிலையிலேயே தவிர பார்த்தில்லை" என ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புஹாரி).

அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; "உன் சகோதரனது முகத்தைச் சிரித்த முகத்துடன் நோக்குவதும் தர்மமாகும்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, இப்னு ஹிப்பான்).

தூய இஸ்லாத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாம், அல்லாஹ்வின் தூதரின் உயரிய முன்மாதிரகளை நமது வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம், இஸ்லாத்தின் அழகை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.

தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி



--
*more articles click*
www.sahabudeen.com


தெரிந்து கொள்வோம் வாங்க-39

தெரிந்து கொள்வோம் வாங்க-39

 

* சீனா தலைநகர் பீஜிங் நகரிலிருந்து வெளிவரும் "சீங்பாவோ' என்ற பத்திரிகை 103 ஆண்டுகளாக வெளிவருகிறது. அச்சு இயந்திரம் வருவதற்கு முன் இதைக் கையால் எழுதி நகல் எடுத்தார்களாம்.

* உலகிலேயே முதன்முதலில் தலைப்புடன் செய்தி வந்தது 1777-ம் ஆண்டில் "நியூயார்க் கெஜட்' என்ற பத்திரிகையில்.

*உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் முதல் கோலைப் போட்டவர் என்ற பெருமை பிரான்ஸ் நாட்டு அணியைச் சேர்ந்த லூசியனண்ட் லூரான் என்ற வீரர் பெற்றார். 1930-ம் ஆண்டு முதல் கோலை மெக்ஸிகோவிற்கு எதிராகப் போட்டார்.

* தமிழ்நாட்டிலிருந்து முதன் முதலில் வெளிவந்த வார இதழ் பத்திரிகை 12.10.1785-ம் ஆண்டு வெளியான "மெட்ராஸ் கொரியர்' என்னும் வார இதழ் தான். இதன் ஆசிரியர் ரிச்சர்ட் ஜான்சன்.

* 1841-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட "ஜனசிநேகிதன்' என்ற இதழ்தான் தமிழில் வெளியான முதல் மாதமிருமுறை இதழ்.

* இந்தியில் வெளியான முதல் பெண்கள் பத்திரிகை "சுக்ரினி'. இதை வெளியிட்டவர் ஹேமந்த் குமாரி என்ற வங்காளப் பெண்.

* இந்தியாவில் முதலில் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 1854 மே 6-ம் தேதி. அன்றைய கமிஷனர் பென்னி பிளாக் என்பவரால் வெளியிடப்பட்டது.

*எவரெஸ்ட் சிகரத்திற்கு 1865-ம் ஆண்டில் தான் அப்பெயர் வந்தது. அதற்கு முன்பு சிகரம்-15 என்னும் பெயர் தான் வழங்கப்பட்டது. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த நேரம், இந்தியாவில் எவரெஸ்ட் என்பவர் சர்வேயர் ஜெனரலாக இருந்தார். அவர் இமயமலைத் தொடரில் உள்ள சிகரங்களுள் சிகரம்-15 தான் உயரமான சிகரம் எனக் கண்டறிந்தார். அதனால், அவர் பெயரையே அந்த சிகரத்திற்கு சூட்டிவிட்டனர்

* ஒரு புற்றிலுள்ள எறும்பு அடுத்த புற்றில் நுழைவதில்லை.

* தலை துண்டிக்கப்பட்டாலும் எறும்புகள் 20 நாட்கள் உயிருடன் இருக்குமாம்.

* வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து 106 நாட்கள் வரை உயிர் வாழுமாம்.

* ஒரு வாரம் வரை நீருக்கடியில் உயிருடன் வாழும்.

* சர்க்கஸ் நடத்தும் வழக்கம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்களிடம் உள்ளது.

* கி.மு.13-ம் நூற்றாண்டிலேயே சீனாவில் குடைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

* உலகில் 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்

*சாலையோர உணவு விடுதி யாரால், எப்போது தொடங்கி வைக்கப்பட்டது? -ஆர்தர் ஹெய்ன்மென் (1925-ம் ஆண்டு)

*நீருக்கடியில் தங்குமிடத்தைக் கட்டிய முதல் நாடு? - சுவீடன்

*உலகின் மிகப் பழமையான தங்கும் விடுதியின் பெயர் என்ன? அது எந்த நாட்டில் கட்டப்பட்டது? -ஹோசி ரியாகோன், ஜப்பான்.

*தனது வாழ்நாளை தங்கும் விடுதியிலேயே கழித்த அமெரிக்க கோடீஸ்வரர்? -ஹோவர்ட் ஹக்ஸ்

*உலகின் மிகப்பெரிய தங்கும் விடுதி? -பர்ஜ் அல்-அராப்

*அதிகமான அறைகளைக் கொண்ட மிகப்பெரிய தங்கும் விடுதி எந்த நகரில் உள்ளது? -பர்ஸ்ட் வேர்ல்ட் ஹோட்டல்(அமெரிக்கா)

*அமேசான் காடுகளுக்குள் அமைந்த ஹோட்டலின் பெயர்? -அரிஸ் டவர்ஸ்

*உலகிலேயே மிகவும் சிறந்த உணவகம் ? -எல் புல்லி (ஸ்பெயின்)

*அமெரிக்காவிலேயே முதலிடத்தில் இருக்கும் உணவகம்?-பெர் சி

*தி பேட் டக் என்பது எந்த நாட்டின் பிரபல உணவகம்? -இங்கிலாந்து

*பாஸ்தா என்பது எந்த நாட்டின் பிரபல உணவு? - இத்தாலி.

*சால்சா என்ற உணவு எந்த நாட்டில் மிகவும் பிரபலமானது? -மெக்சிகோ

*தென்னிந்தியர்கள் காலை உணவாக அதிகம் சாப்பிடுவது? -இட்லி

*காலை உணவில் சாக்லெட்டை அதிகம் சேர்த்துக் கொள்ளும் ஐரோப்பிய நாட்டவர்? -ஸ்பெயின்

நன்றி: யாழ் இணையம்



--
*more articles click*
www.sahabudeen.com


Wednesday, February 27, 2013

வழுக்கை – ஒரு விளக்கம்


தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். வந்தால் மலை, போனால் மயிர்என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது? முடி விஷயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கமாகச் சொல்கிறார் டாக்டர் முகேஷ் பாத்ரா. மும்பை மருத்துவரான பாத்ரா, கீழ்ப்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஹோமியோபதி மருத்துவத்தில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். இன்டர்நெட்டிலேயே ஐந்து லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை அளித்து லிம்கா உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் டாக்டர் பாத்ரா.

‘‘நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. யூமெலானின் (eumelanin) என்கிற பொருள்தான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். பொமேலானின் (Pheomelanin) என்கிற பொருள் அதிகமாக இருந்தால், தலைமுடி செம்பட்டையாக இருக்கும். இந்தியர்களின் ரத்தத்தில் யூமெலானின் அதிகமாக இருப்பதால், நம் தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது.
நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை. ஒவ்வொரு அடித்தண்டிலும் இருபது முதல் முப்பது முறை முடி வளரும். ஒருமுறை முடி வளர்ந்தால், மூன்றிலிருந்து ஐந்து வருடம் வரை இருக்கும்.
தலையில் வளரும் முடி ஒரு மாதத்துக்கு அரை இன்ச் என்கிற ரீதியில் வளரும். வெயில் காலத்தில் வேகமாக வளரும். தலைமுடியின் வளர்ச்சி பதினைந்திலிருந்து முப்பது வயதுக்குள் அதிவேகமாக இருக்கும்.
ஒரு மாத காலத்துக்குள் ஐம்பதிலிருந்து நூறு முடி உதிர்ந்தால், அது நார்மலான விஷயம்தான். அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. இதேபோல தலைவாரிக் கொள்கிற நேரத்தில் 15_20 முடிகள் உதிரலாம். பெண்கள் குளிக்கும்போது முப்பது முடிவரை உதிரலாம். தலைவாரிக் கொள்ளும்போது 40 முதல் 60 முடிகள் உதிரலாம்.
தலைமுடி உதிருவதில் மூன்று முக்கியமான நிலைகள் உண்டு.
முதலாவது, அனெகன். இந்த நேரத்தில் முடியின் அடித்தண்டு நம் உடம்பில் நன்றாகக் காலூன்றி வளரும்.
இரண்டாவது நிலை, கேடகன்  நன்கு வளர்ந்த முடி அதற்கு மேலும் வளராமலும், விழவும் முடியாத நிலையில் இருக்கும்.
மூன்றாவது, டெலகன். நன்கு வளர்ந்த முடி கீழே விழுந்த பருவம்தான் இந்த நிலை.
தலைமுடி இழப்பில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. எனினும், மூன்று முக்கியமான வகைகளை மட்டும் விளக்கமாகச் சொல்கிறேன்.
1. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை.
2. பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை.
3. அலோபேசியா ஏரியாட்டா.
ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
ஆன்ட்ரியோஜெனிக் அலோபேசியா என்று இதற்குப் பெயர். முப்பதிலிருந்து ஐம்பது சதவிகித ஆண்களுக்கு, முப்பது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்குப் பல காரணங்கள் உண்டு. வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம். மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும். சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும். சுடவைத்த தண்ணீரில் குளிப்பதாலும், தலையில் கண்டபடி டை அடிப்பதாலும்கூட முடிகள் உதிரலாம்.
நம் ரத்தத்தில் டிஹெச்டி என்று ஒரு பொருள் இருக்கிறது. இது ரத்தத்தில் அதிகமானால், முடி கொட்ட ஆரம்பிக்கும் என்று எல்லா மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம். பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம்.
சில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னை உருவாகும்போதும் முடி உதிரலாம். இன்னும் சில பெண்களுக்கு ஓவரியைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடி உதிரலாம்.
ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.
கர்ப்பத் தடை மாத்திரைகளைச் சாப்பிடுகிற போதும், பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம். நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதனால், சில வகை சத்துகள் குறைந்துவிடுகின்றன. இதனாலும் முடி உதிர்கிறது.
அலோபேசியா ஏரியாட்டா:
வழுக்கைகளிலேயே மிக ஆச்சரியமான விஷயங்களை உள்ளடக்கியது அலோபேசியா ஏரியாட்டா என்கிற வழுக்கைதான். இளம் பருவம் முதல் எண்பது வயதுக்குள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். தலையில் உள்ள முடி அதிவேகத்தில் உதிர ஆரம்பிக்கும். பதினைந்தே நாட்களுக்குள் தலை சொட்டை ஆகிவிடும்.
இப்படி திடீரென முடி உதிர்வதற்கான காரணம் வேடிக்கையானது. நம் உடம்பிற்குத் தேவையில்லாத, கெடுதல் தரக்கூடிய பாக்டீரியாக்கள் நம் உடம்பிற்குள் நுழைந்துவிட்டால், அதை அழித்துவிடுவது நம் உடலின் இயற்கையான அமைப்பு. உதாரணமாக, நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் நமக்குள் புகுந்தால், அதைக் கொல்வது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் வேலை. ஆனால், சில சமயங்களில் நம் உடலில் உள்ள முடிகள் தேவையில்லாதவை; அவற்றை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று நம் உடல் தவறாக நினைப்பதால், நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் உதிர்ந்துவிடுகின்றன.
என்ன மருந்து?
ஹோமியோபதி மருத்துவத்தில் எல்லோருக்கும் ஒரே மருந்து என்று சொல்ல முடியாது. நோயின் தன்மை, நோயாளியின் உடல்நிலை, அறிகுறிகள் போன்ற விஷயங்களை வைத்துத்தான் மருந்து கொடுப்போம். இந்த மூன்று வகை நோய்களுக்கும் அறுவை சிகிச்சையோ, தலையில் முடிகளை நடுவதோ எல்லாம் கிடையாது. மருந்துகளின் மூலம், உடல் தன்மையை மாற்றுவதன் மூலம் தலையில் முடி முளைப்பதை நிச்சயமாக அதிகரிக்க முடியும். தலைமுடி பிரச்னை இருப்பவர்களுக்கு தனித்தனியாக நாங்கள் சிகிச்சை அளித்தாலும், என்னைத் தேடி வந்தவர்களுக்கு அந்தப் பிரச்னையிலிருந்து நிச்சயமான தீர்வைக் கண்டிருக்கிறேன்’’ என்கிறார் டாக்டர் பாத்ரா.
நன்றி குமுதம் -  ஏ.ஆர். குமார்

Tuesday, February 26, 2013

கால் ஆணி

கால் ஆணி

மூலிகை பயன்படுத்தும் முன்

சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் பலருக்கும் இருக்கும் சிறிய நோய் தான் "கால் ஆணி ". காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும் , அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் இந்த நோய் பலருக்கும் வருகிறது. கால் ஊன்றி நடக்க முடியாமலும் , செருப்பு கூட அணியாமலும் வலியால் அவதிப்படுகின்றனர்,  சென்னையில் இருக்கும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற நம் வலைப்பூ நண்பர் விஸ்வநாதன் என்பவர் கடந்த மாதம் தன் காலில் " கால் ஆணி "  இருப்பதாகவும் மூன்று மாதமாக பல ஆங்கில மற்றும் சித்த மருந்து எடுத்தும் குணமாகவில்லை என்று கூறி ஏதாவது மருந்து இருந்தால் தெரியப்படுத்துமாறு கூறினார், இயற்கை மேல் முழு நம்பிக்கை உள்ள அவருக்காக அகத்தியரின் குணபாடத்தில் உள்ள ஒரு மூலிகையை கூறி இதை தொடர்ந்து 9 நாட்கள் பயன்படுத்துங்கள் உடனடியாக மாற்றம் இருக்கும் என்று கூறினோம். மருந்து பயன்படுத்தும் முன் "கால் ஆணி" உள்ளதை புகைப்படம் எடுத்து பின் மருந்து பயன்படுத்துங்கள் என்று தெரியப்படுத்தி இருந்தோம், சரியாக 6 நாட்கள் கழித்து நண்பரிடம் இருந்து மெயில் வந்தது அப்படியே உங்கள் பார்வைக்கு வைத்துள்ளோம்.

அன்பு நண்பருக்கு,
முதலில் நன்றி.
தாங்கள் கூறிய மூலிகை மருந்தை எனது வலது காலில் கடைசி இரு விரல்களுக்குமிடையில் மூன்று மாதங்களாக இருந்து வந்த "கால் ஆணி" க்கு காலையில் மட்டும் போட்டு வந்தேன். அதிசயம். ஆனால் ஐந்து நாட்கள் போட்டவுடனேயே, வலியும் குறைந்து, தற்போது ,நன்கு நடக்கவும் முடிகின்றது. இதற்கு முன்பாக பல மருந்துகள் உபயோகித்தும் பலன் கிடைக்கவில்லை. தற்போது
நன்கு குணமடைந்து விட்டேன்.

மிக்க நன்றி ___________ அவர்களுக்கு. தங்கள் பயன் கருதா தொண்டு வாழ்க.

என்றும் நட்புடன்,
விஸ்வநாதன்
சென்னை.

இவர் தெரிவித்த அன்பையும் நன்றியையும் அப்படியே எம் குருநாதரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன், இந்த மருந்தை கண்டுபிடித்தவர்கள் சித்தர்கள் அவர்கள் எழுதி வைத்தை சொல்லும் இந்த சாதாரண மனிதனுக்கு எந்த பெருமையும் தேவையில்லை உங்கள் அன்பு மட்டும் போதும். உண்மையான முழு நம்பிக்கையோடு "கால் ஆணி" உள்ளவர்கள் தெரியப்படுத்தினால் அவர்களுக்கு
இதற்கான மருந்து இமெயிலில் தெரியப்படுத்தப்படும். மருந்து தெரியப்படுத்தும் முன் பல முறை நன்றி சொல்லும் நபர்கள் குணமடைந்த பின் ஒரு இமெயில் கூட அனுப்பாதது தான் நம் தளத்தில் இருந்து பல அரிய நோய்களுக்கு மருந்து தெரிவிக்க இயலாமல் போகிறது. மருத்துவ உலகமே மருந்து தேடிக்கொண்டிருக்கும் பல நோய்களுக்கு ஏற்கனவே சித்தர்கள் மருந்து கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்,  நம் தளத்தின் மூலம் சிலருக்கு மருந்து தெரிவிக்கப்பட்டு முழுமையான குணம் அடைந்துள்ளனர் விரைவில் அவர்களின் பேட்டி நம் தளத்தில் வெளிவரும்.

அன்பருக்கு ,

 

"கால் ஆணி " - யை குணப்படுத்தும் மூலிகைக்கு பெயர் "குப்பைமேனி " தெரு ஓரங்களில் அதிகமாக வளர்ந்து இருக்கும்

 

மருந்து கிடைத்தற்காக இறைவா உனக்கு நன்றி என்று சொல்லி விட்டு தொடங்குங்கள்.

 

15 இலைகள் வரை எடுத்து நன்றாக அரைத்து கால் ஆணி இருக்கும் இடத்தில் பூசுங்கள் , 9 நாட்களில் முழுமையான குணம் கிடைக்கும்.

பயன்படுத்திய பின் உங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இயற்கை உணவு உலகம்.

http://naturalfoodworld.wordpress.com

--
*more articles click*
www.sahabudeen.com


Monday, February 25, 2013

எகிறும் கட்டுமான செலவு குறைப்பது எப்படி?

எகிறும் கட்டுமான செலவு குறைப்பது எப்படி?

கட்டுமான பொருளை தேர்வு செய்வதில் இருந்து கட்டிடத்தை வடிவமைப்பது வரை ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து திட்டமிட வேண்டும். வீடு  கட்டுவது என்பது நம்மில் பெரும்பாலனோர்க்கு கனவாகவே இருப்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று மனையின் விலை. மற்றொன்று  கட்டுமான பொருட்களின் ஜெட்வேக ஏற்றம். இந்த இரண்டும் தான் வீடு கட்டுவோர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. 

இதே போல ஏற்கனவே வீடு கட்டியவர்களிடம் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் கூறும் கருத்துக்கள் மேலும் பயத்தை உருவாக்கும்.
 
இத்தனை லட்சத்திற்குள் அனைத்தையும் முடித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நினைத்ததை விட பல மடங்கு செலவாகிவிட்டது
 என்று புலம்புவார்கள். 

இதற்கு எல்லாம் அடிப்படை காரணம் சரியாக திட்டமிடல் இல்லாதது தான். மனையின் விலையை பொறுத்த வரை நம் கையில் ஒன்றும் இல்லை.
 காரணம் சந்தை மதிப்பு, அருகாமையில் உள்ள சைட் விற்பனை விலை  இவற்றை பொறுத்து தான் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. 

நாம் வாங்க நினைக்கும் சைட்டின் அருகாமையில் கடைசியாக விற்பனை செய்யப்பட்ட சைட்டின் விலையை விட குறைந்த பட்சம் 10 சதவீதம்
 கூடுதலாக தான் நாம் வாங்க முடியும். இது தான் இன்றைய ரியல் எஸ்டேட் நிலைமை. ஆனால் கட்டுமானத்தை பொறுத்த வரை நாம் தான்  எல்லாமே. ஆனால் அந்த அளவுக்கு நாம் முடிவு எடுக்கின்றோமா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.கட்டுமானத்தை பொறுத்த வரை  செலவுகளை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாளலாம். 

அதற்கு திட்டமிடுவது மிகவும் அவசியமாகின்றது. கட்டுமான பொருளை தேர்வு செய்வதில் இருந்து கட்டிடத்தை வடிவமைப்பது வரை
 ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து திட்டமிட வேண்டும். குறிப்பாக நவீன தொழில் நுட்பங்களை கையாள்வதன் மூலம் செலவினங்களை குறைக்க  முடியும். இதே போல வழக்கமாக கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்தினாலும்  செலவினங்களை சற்று குறைக்க முடியும். 

வராந்தா,மாடி கைப்பிடி சுவர்,பாத்ரூம்,வெண்டிலேட்டர் இவற்றில் கிரில் அமைப்பதற்கு பதிலாக வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கிராதி அமைப்பதன்
 மூலம் பெரும் பங்கு செலவை கட்டுப்படுத்தலாம். இதே போல செங்கல்லை கொண்டு 9 அங்குல சுவர் கட்டுவதற்கு பதிலாக எலிபொறி கட்டுமானம்  எனும் வகையை பின்பற்றினால் 25 சதவீத அளவு செங்கற்களின் அளவை குறைத்து செலவை கட்டுப்படுத்தலாம். தரை அமைப்பதற்கு மார்பிள்,  கிரானைட் இவற்றிக்கு மாற்றாக லினோலியம், வினைல் முதலியவற்றால் ஆன தரையை அமைக்கலாம். 

இதே போல தேக்கு மரங்களுக்கு பதிலாக நாட்டு மரங்களை பயன்படுத்தி தேக்கு பாலீஸ் அடித்தால் அசல் தேக்கு மரம் போலவே காட்சியளிக்கும்.
 வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டை பயன்படுத்தி உத்திரங்கள்(லிண்டெல்) அமைக்கப்படுகின்றன. இதற்கு பதிலாக செங்கற்களை குத்தாக அடுக்கி  அவற்றின் வெற்றிடத்தில் இரும்பு கம்பிகளை இணைப்பதன் மூலம் சிக்கனமாக அதிக பாரம் தாங்க கூடிய உத்திரங்கள் உருவாக்க முடியும். இதே  போல சாதாரண செங்கற்களுக்கு பதிலாக பிளைஆஷ் செங்கற்களை பயன்படுத்தலாம். 

இந்த செங்கற்களால் பூச்சு வேலையின் போது 10 சதவீத சிமெண்ட் மிச்சப்படுத்த முடியும். இதே போல சிமெண்ட் கலவை பயன்படுத்தாமல்
 சுவர்களை இணைக்கும் இன்டர்லாக்கிங் கற்கள் தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டன.இன்டர்லாக்கிங் கற்களை பயன்படுத்துவதன் மூலமாக கூலி  ஆட்கள் செலவை கட்டுப்படுத்த முடியும். சிமென்ட் கலவைக்கு பயன்படுத்தும் மணல் விலை தினந்தோறும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுவது  வழக்கமாகும். இதை தவிர்க்க செயற்கை மணல் என்று கூறப்படும் கல்குவாரிகளிலிருந்து பெறப்படும் மணல்துகள்களை பயன்படுத்தி கட்டுமானத்தை  மேற்கொள்ளலாம். 

ஆற்றுமணலுடன் மூன்றில் ஒரு பங்கு செயற்கை மணல் சேர்த்தால் கட்டுமானத்தின் தரம் பல மடங்கு அதிகரிக்கும். இதே போல ஒவ்வொரு
 பாத்ரூமிற்கும் ஒரு வாட்டர் ஹீட்டர் பொருத்தும் நடைமுறை இருக்கின்றது. இதற்கு பதிலாக ஒரே ஒரு சோலார் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும்  போது அனைத்து பாத்ரூம்களுக்கும் சுடுதண்ணீர் கிடைத்துவிடும். 

தண்ணீர் தொட்டி, செப்டிக்டேங்க் ஆகியவற்றை செங்கற்கள் கொண்டு கட்டுமானத்தை மேற்கொள்வதை தவிர்த்து தற்போது சந்தைக்கு வந்துள்ள
 பிளாஸ்டிக் தொட்டிகளை வாங்கி பயன்படுத்தலாம். இதனால் கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டுமான செலவு ஆகியவை பெரும் பகுதி குறையும்.  இப்படி ஒவ்வொன்றையும் நன்கு திட்டமிட்டு செயல்பட்டால் வீடு கட்டுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டிற்குள் வீட்டை கட்டி சந்தோஷமாக  குடியேறிவிடலாம்.

http://www.tamilamuthu.com/2013/02/blog-post_6556.html



--
*more articles click*
www.sahabudeen.com


மருத்துவ உலகின் ராணி - சோற்றுக் கற்றாழை..!

மருத்துவ உலகின் ராணி - சோற்றுக் கற்றாழை..!


மருத்துவம் என்றாலே அது சோற்றுக்கற்றாழைதான். சோற்றுக்கற்றாழையின் பங்கு அந்தக் கால மருத்துவத்தில் அதிகம். அந்தக் கால பாட்டி வைத்தியம் செய்பவர்கள் முதல் சித்த வைத்தியர்கள் வரை இந்த சோற்றுக்கற்றாழையின் மகிமையை அறிந்து வைத்திருந்தனர். தக்க சமயத்தில் இது பல நோய்களைக் குணப்படும் அருமருந்தாகப் பயன்படுகிறது. நவீன மருத்துவத்திலும் இதன் பங்கு அளப்பரியது. 

கிட்டதட்ட அனைத்து வகையான மருந்துப்பொருட்களிலும் இந்தக் கற்றாழையின் பங்கு இருக்கும். இது ஒரு கசப்புத் தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப்பொருளாக உள்ளது. இந்தக் கற்றாழையின் மூலம் குணமாகும் நோய்கள் என்ன? எந்தெந்த மருந்து வகைகளில் இதைச் சேர்த்து மருந்து தயாரிக்கப்படுகிறது? இதன் தன்மைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.



சாதாரணமாக கிராமப்புறங்களில் இந்தக் கற்றாழைகள் வேலியோரப் புதர்களில் வளர்ந்திருக்கும்.

இக் கற்றாழையானது உலகம் எங்கும் 17ம் நூற்றாண்டு முதல் காஸ்மெட்டிக்(cosmetic) பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும்(medicine) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சோற்றுக் கற்றாலையை சிறு கற்றாழை என்றும் அழைப்பார்கள். 

சோற்றுக் கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச் சுளைப் போல உள்ள சதைப் பகுதியை, சின்னச் சிறு துண்டுகளாக வெட்டி தூய தண்ணீரில் 7 முதல் 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும். எனவே நன்றாக கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் கசப்புத் தன்மையும், குமட்டுதலும் குறைந்துவிடும். 

கற்றாழை குணப்படுத்தும் நோய்கள்: 
(Aloe vera can cure diseases)

·         தீராத வயிற்றுப் புண்கள் குணப்படுத்துகிறது..

·         சிறுநீர் குழாய்களிலும், பிறப்பு உறுப்புக்களிலுமுள்ள நோய்களை சோற்றுக் கற்றாழை நன்கு செயல்பட்டு முழுமையாக நிவர்த்தி செய்கிறது...

·         வயிற்றின் சூட்டைத் தணிக்க...

·         வாய்வுத் தொல்லைகளை நீக்க...

·         நீடித்த மலச்சிக்கலைப் போக்க..

மேற்கண்ட நோய்களுக்கான மருந்து தயார் செய்யும் முறை...
(Method of preparing a drug)

கழுவிச் சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழையை அரைக்கிலோ எடுத்துக்கொள்ளுங்கள். இதில் விளக்கெண்ணெய் ஒரு கிலோவும், பனங்கற்கண்டு அரைக்கிலோவும், வெள்ளை வெங்காயச் சாறு கால் கிலோவும் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பில் சிறு தீயாக(Light flame) எரிக்க வேண்டும்.

சாறுகள் சுண்டியபின் இந்த நெய்யை எடுத்து வதக்கிக்கொண்டு, நோயாளிகள் ஒரு தேக்கரண்டி(tea spoon) வீதம், காலை, மாலை சாப்பிட்டு வந்தால், தீராத வயிற்று வலியும், வயிற்றுப் புண்ணும்(Peptic ulcer), சூன்மக் கட்டிகளும் குணமாகும்.



ஜீரண சக்தியை அதிகரிக்கும்(Increases the digestive power). பசியை உண்டாக்கும் தன்மைப் பெற்றது.

இந்த மருந்து பால்வினை நோய்களில்(Sexually transmitted disease) ஒன்றான கனோரியா நோயை முழுமையாகக் குணமாக்கிவிடும். கனோரியாவை நீக்குவதில் மிகவும் சக்தி வாய்ந்தது. நம்பிக்கையானது. வெட்டை நோய்களையும் குணப்படுத்தும். கனோரியா நோயினால் ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, நிறம் மாறிய சிறுநீர் வெளியேறுதல். இந்திரிய ஒழுக்கு, அரையாப்பு, ஜனன உறுப்பில் உள்ளுக்கும், வெளியிலும் புண் ஏற்பட்ட நிலை, சீழ் பிடித்தல், வெள்ளை வெட்டை நோய்கள் ஆகியன பூரணமாகக் குணமாகும். மருந்து சாப்பிடும் காலங்களில் காரத்தையும், புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள வேண்டும்.

சோற்றுக் கற்றாழை மடல் சுத்தம் செய்து எடுத்து, இதில் சிறிது படிக்காரத்தூளைத்(Alum) தூவினால் நீர்த்து தண்ணீராகிவிடும். இதில் வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் மூத்திரக் கிரிச்சரம், மேக நோயால் ஏற்பட்ட வெட்ட நோய் நீங்கிவிடும்.கழுவிச் சுத்தம் செய்த சோற்றுக்கற்றாழை ஒரு கப் சேகரம் செய்துகொண்டு, இதில் சிறிய வெங்காயம் ஒரு கப் நறுக்கிச் சேர்த்து விளக்கெண்ணெய் 300 கிராம், பனங்கற்கண்டு 300 கிராம் இவை யாவையும் ஒன்று சேர்த்து, அடுப்பில் வைத்து சிறு தீயாக லேகிய பதம் வரும் வரை எரித்து எடுத்துக்கொண்டு காலை, மாலை, ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான வயிற்று வலியும், வயிற்றுப் புண்களும் குணமாகும். 

சிறுநீர் எளிதில் வெளியேற...
(In the urine to exit easily)

கழுவி எடுத்த சோற்றுக் கற்றாழையில் ஒரு மடல் அளவு கற்றாழைத் துண்டுகள் நீர் ஆகாரத்தில் கலந்து குடிக்க வேண்டும். மடல் துண்டுகள் ஐந்து தேக்கரண்டிக்குக் குறையக் கூடாது இதை, காலையில் ஒருவேளை சாப்பிட வேண்டும். மூன்று நாள் உபயோகத்தில் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் நின்று விடும். இதே முறையில், மூன்று தினங்கள் சாப்பிட்டால் நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கழுவிச் சுத்தம் செய்த கற்றாழைத் துண்டு ஒரு கப் எடுத்துக் கொண்டு, இதில் சின்ன வெங்காயம் சுட்டுப்பொடியாக்கிய ஐந்து வெங்காயத்துக்குக் குறையாமல் சேர்த்துக் கொண்டு, இதைக் கற்றாழைச் சோற்றில் கலந்து, கடுக்காய் பொடிகள் மூன்று கடுக்காயில் சேகரித்து, எல்லாவற்றையும் ஒன்றாக்கி சிறிது தண்ணீர் விட்டு மூடி வைத்தால், கால் மணி நேரத்தில் நீர்த்து தண்ணீராகிவிடும். இந்தத் தண்ணீரை வடிகட்டிச் சாப்பிட்டால் அரை மணி நேரத்தில் சிறுநீர்க்கட்டு நீங்கிவிடும். தாராளமாக சிறுநீர் வெளியேறிவிடும்.

புண்கள் ஆற:
(Heal ulcers )

கழுவி எடுத்த கற்றாழைச்சோறு 25 - 50 கிராம் பசும் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பத்து தினங்களில் மூலச் சூடு தணியும். சொறி, அரிப்பு நீங்கும். விந்து உற்பத்தி அதிகரிக்கும். பால்வினை நோயான சொருக்கு நோய் வந்தவர்களின் ஆண் உறுப்பில் புண்கள் உண்டாகும். இதனால் வீக்கமும், புண்ணும் இருக்கும். கழுவி எடுத்த சோற்றுக் கற்றாழையை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். இரவு படுக்கும்போது இப்படிச் செய்து கொள்ளலாம். இவ்வாறு சில தினங்கள் கட்டி வந்தால், புண்கள் ஆறிவிடும். வீக்கம் வடிந்துவிடும்.

பெண்களின் வெள்ளைப்படுதல்(LEUCORRHEA) நோய் குணமாக:

பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று தேக்கரண்டியளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரவு கூரைமேல் வைத்து எடுத்தால், மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

தாம்பத்திய உறவு மேம்பட:
(Improve sexual)

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

கூந்தல் வளர(Hair grow):

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால் செய்ய வேண்டியது:

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செய்து எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும். 

குளிர்ச்சி தரும் குளியலுக்கு:
(To cold baths)

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக்கிலோ தயாரித்து, அதில் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 நாட்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தலாம். வாசனை திரவியம் இதில் கலந்திருப்பதால் இது நல்ல இயற்கையான குளிர்ச்சி தரும் குளியல் எண்ணையாக பயன்படுத்த முடியும்.

அழகு சாதனப் பொருளில்(cosmetics) கற்றாழை முக்கியப் பொருளாகச் சேர்த்து தயாரிக்கப்படும் ஜெல்(gel) சருமத்தின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது. சருமத்தின் ஈரப்பசையைப் பாதுகாக்கிறது. சரும நோய்களுக்குச்(skin diseases) சிறந்த மருந்தாகிறது. கற்றாழை மடல் சாறு பயன்படுத்தப்படுவதால், சூரிய வெப்பமாக்குதல் குறைகிறது. எக்ஸ்ரே கதிர் வீச்சின் கடுமையைத் தடுத்து பாகாப்பு அளிக்கிறது. ஆக மருத்துவ உலகின் முடி சூடா ராணியாக கற்றாழை வலம் வருகிறது. கற்றாழையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டோமானால் வாழ்நாளில் பெருமளவு நோய்கள் நம்மை அண்டாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். 

தற்போது ஆங்கில மருத்துவ முறைகளே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த அவசரகால உலகத்தில் இத்தகைய மருத்துவமுறைகளைப் பின்பற்றுவது என்பது கடினம்தான். என்றாலும் இதில் கூறப்பட்டுள்ள மருத்துவமுறைகள் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. படித்ததில் பிடித்திருந்த கட்டுரையை பகிர்ந்திருக்கிறேன். 

ஆதாரம்: இந்த பதிவில் வரும் பெரும்பாலான மருத்துவ குறிப்புகள் இயற்கை மூலிகைகளும், நோய் தீர்க்கும் முறைகளும் என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்டது. நன்றி நண்பர்களே..!!!

http://www.thangampalani.com/2012/06/queen-of-medical-world-aloes.html



--
*more articles click*
www.sahabudeen.com