Monday, February 25, 2013

எகிறும் கட்டுமான செலவு குறைப்பது எப்படி?

எகிறும் கட்டுமான செலவு குறைப்பது எப்படி?

கட்டுமான பொருளை தேர்வு செய்வதில் இருந்து கட்டிடத்தை வடிவமைப்பது வரை ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து திட்டமிட வேண்டும். வீடு  கட்டுவது என்பது நம்மில் பெரும்பாலனோர்க்கு கனவாகவே இருப்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று மனையின் விலை. மற்றொன்று  கட்டுமான பொருட்களின் ஜெட்வேக ஏற்றம். இந்த இரண்டும் தான் வீடு கட்டுவோர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. 

இதே போல ஏற்கனவே வீடு கட்டியவர்களிடம் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் கூறும் கருத்துக்கள் மேலும் பயத்தை உருவாக்கும்.
 
இத்தனை லட்சத்திற்குள் அனைத்தையும் முடித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நினைத்ததை விட பல மடங்கு செலவாகிவிட்டது
 என்று புலம்புவார்கள். 

இதற்கு எல்லாம் அடிப்படை காரணம் சரியாக திட்டமிடல் இல்லாதது தான். மனையின் விலையை பொறுத்த வரை நம் கையில் ஒன்றும் இல்லை.
 காரணம் சந்தை மதிப்பு, அருகாமையில் உள்ள சைட் விற்பனை விலை  இவற்றை பொறுத்து தான் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. 

நாம் வாங்க நினைக்கும் சைட்டின் அருகாமையில் கடைசியாக விற்பனை செய்யப்பட்ட சைட்டின் விலையை விட குறைந்த பட்சம் 10 சதவீதம்
 கூடுதலாக தான் நாம் வாங்க முடியும். இது தான் இன்றைய ரியல் எஸ்டேட் நிலைமை. ஆனால் கட்டுமானத்தை பொறுத்த வரை நாம் தான்  எல்லாமே. ஆனால் அந்த அளவுக்கு நாம் முடிவு எடுக்கின்றோமா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.கட்டுமானத்தை பொறுத்த வரை  செலவுகளை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாளலாம். 

அதற்கு திட்டமிடுவது மிகவும் அவசியமாகின்றது. கட்டுமான பொருளை தேர்வு செய்வதில் இருந்து கட்டிடத்தை வடிவமைப்பது வரை
 ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து திட்டமிட வேண்டும். குறிப்பாக நவீன தொழில் நுட்பங்களை கையாள்வதன் மூலம் செலவினங்களை குறைக்க  முடியும். இதே போல வழக்கமாக கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்தினாலும்  செலவினங்களை சற்று குறைக்க முடியும். 

வராந்தா,மாடி கைப்பிடி சுவர்,பாத்ரூம்,வெண்டிலேட்டர் இவற்றில் கிரில் அமைப்பதற்கு பதிலாக வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கிராதி அமைப்பதன்
 மூலம் பெரும் பங்கு செலவை கட்டுப்படுத்தலாம். இதே போல செங்கல்லை கொண்டு 9 அங்குல சுவர் கட்டுவதற்கு பதிலாக எலிபொறி கட்டுமானம்  எனும் வகையை பின்பற்றினால் 25 சதவீத அளவு செங்கற்களின் அளவை குறைத்து செலவை கட்டுப்படுத்தலாம். தரை அமைப்பதற்கு மார்பிள்,  கிரானைட் இவற்றிக்கு மாற்றாக லினோலியம், வினைல் முதலியவற்றால் ஆன தரையை அமைக்கலாம். 

இதே போல தேக்கு மரங்களுக்கு பதிலாக நாட்டு மரங்களை பயன்படுத்தி தேக்கு பாலீஸ் அடித்தால் அசல் தேக்கு மரம் போலவே காட்சியளிக்கும்.
 வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டை பயன்படுத்தி உத்திரங்கள்(லிண்டெல்) அமைக்கப்படுகின்றன. இதற்கு பதிலாக செங்கற்களை குத்தாக அடுக்கி  அவற்றின் வெற்றிடத்தில் இரும்பு கம்பிகளை இணைப்பதன் மூலம் சிக்கனமாக அதிக பாரம் தாங்க கூடிய உத்திரங்கள் உருவாக்க முடியும். இதே  போல சாதாரண செங்கற்களுக்கு பதிலாக பிளைஆஷ் செங்கற்களை பயன்படுத்தலாம். 

இந்த செங்கற்களால் பூச்சு வேலையின் போது 10 சதவீத சிமெண்ட் மிச்சப்படுத்த முடியும். இதே போல சிமெண்ட் கலவை பயன்படுத்தாமல்
 சுவர்களை இணைக்கும் இன்டர்லாக்கிங் கற்கள் தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டன.இன்டர்லாக்கிங் கற்களை பயன்படுத்துவதன் மூலமாக கூலி  ஆட்கள் செலவை கட்டுப்படுத்த முடியும். சிமென்ட் கலவைக்கு பயன்படுத்தும் மணல் விலை தினந்தோறும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுவது  வழக்கமாகும். இதை தவிர்க்க செயற்கை மணல் என்று கூறப்படும் கல்குவாரிகளிலிருந்து பெறப்படும் மணல்துகள்களை பயன்படுத்தி கட்டுமானத்தை  மேற்கொள்ளலாம். 

ஆற்றுமணலுடன் மூன்றில் ஒரு பங்கு செயற்கை மணல் சேர்த்தால் கட்டுமானத்தின் தரம் பல மடங்கு அதிகரிக்கும். இதே போல ஒவ்வொரு
 பாத்ரூமிற்கும் ஒரு வாட்டர் ஹீட்டர் பொருத்தும் நடைமுறை இருக்கின்றது. இதற்கு பதிலாக ஒரே ஒரு சோலார் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும்  போது அனைத்து பாத்ரூம்களுக்கும் சுடுதண்ணீர் கிடைத்துவிடும். 

தண்ணீர் தொட்டி, செப்டிக்டேங்க் ஆகியவற்றை செங்கற்கள் கொண்டு கட்டுமானத்தை மேற்கொள்வதை தவிர்த்து தற்போது சந்தைக்கு வந்துள்ள
 பிளாஸ்டிக் தொட்டிகளை வாங்கி பயன்படுத்தலாம். இதனால் கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டுமான செலவு ஆகியவை பெரும் பகுதி குறையும்.  இப்படி ஒவ்வொன்றையும் நன்கு திட்டமிட்டு செயல்பட்டால் வீடு கட்டுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டிற்குள் வீட்டை கட்டி சந்தோஷமாக  குடியேறிவிடலாம்.

http://www.tamilamuthu.com/2013/02/blog-post_6556.html



--
*more articles click*
www.sahabudeen.com


No comments: