புதிய வீடு கட்டுபவர்களுக்கு சில டிப்ஸ்
புதிதாக வீடு கட்டுபவர்கள் தங்களுடைய வீடு இப்படி தான் அமைக்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள். ஆனால் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நபர் கனவை நிறைவேற்றக்கூடியவராக இருப்பாரா என்ற கவலை ஒரு புறம் இருக்க செய்யும். உங்கள் கனவு இல்லம் நனவாக சில முக்கிய அம்சங்களை புதிய வீடு கட்ட உள்ளவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
புதிய வீடு கட்டுபவர்களுக்கு சில டிப்ஸ்:
மனையை சதுரம் செய்யும் போது மூலை மட்டம் கொண்டு 90 டிகிரி இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். அஸ்திவாரம் அமைக்கும் போது மண் பிடிமானம் இல்லாத போது கன்சாலிடேசன் செய்து திமிசு கட்டையில் நன்றாக அடித்த பிறகு கான்கிரீட் போட வேண்டும். சாலை மட்டத்தில் இருந்து கட்டிடத்தின் பேஸ்மென்ட் தேவையான அளவு உயரமாக வைக்க வேண்டும்.
கட்டுமானத்தின் போது கவனிக்க வேண்டியவை
கட்டுமானத்தின் போது வாட்டர் லெவல் டியூப் கொத்தனார் பயன்படுத்துகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். அஸ்திவாரம், பெல்ட், லிண்டல், கான்கிரீட் என அனைத்து நிலைகளிலும் லெவல் டியூப் அவசியம் பயன்படுத்த வேண்டும். செங்கற்களை நனைத்த பிறகே கட்ட அனுமதிக்க வேண்டும். செங்கல் சுவர் ஒவ்வொரு அடுக்காக கட்டும்போதும் முடிவில் குத்து கல்லாக வைத்து கட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
சுவர் கட்டும்போது இணைப்பு வரும்போது கண்டிக்கல் உடைத்து போட்டு கட்ட வேண்டும். ஒரே நாளில் 5 அடிக்கு மேல் கட்ட அனுமதிக்க கூடாது. இதற்கு மேல் அனுமதித்தால் தரம் குறைந்துவிடும். செங்கல் சுவருடன் காலம், பீம் போன்றவை இணைக்கும் போது கம்பிவலை வைத்து தேவைக்கு ஏற்ப 6,8 எம்.எம் கம்பி துளையிட்டு கட்டுதல் வேண்டும்.
கலவையின் போது மணல், ஜல்லி, சிமென்ட், தண்ணீர் ஆகியவை தேவையான அளவில் கலக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக மணலில் வரும் களிமண் கட்டிகள், சிறிய கற்கள் ஆகியவற்றை அகற்றிய பிறகு கலவை போடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பூச்சு வேலை செய்வதாக இருந்தால் நன்றாக மணல் சலித்த பிறகு தான் பயன்படுத்த வேண்டும். கதவு, ஜன்னல்களை பொருத்துவதற்கு முன்பாக வாட்டர் லெவல் டியூப் உபயோகிக்கப்படுகின்றதா என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும்.
தரையில் வாட்டத்தை வைத்து கிரானைட், டைல்ஸ், மார்பில் ஆகியவை போட வேண்டும். கட்டிடத்திற்கு காலை, மாலை கட்டாயம் தண்ணீர் விடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாடிப்படிகள் அல்லது வீட்டின் முன் படிகள் அமைக்கும் போது அனைத்து படிகளும் ஒரே சீரான முறையில் அமைக்கப்படுகின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.
எலக்ட்ரிக்கல் பாயின்ட் அமைக்கும் போது அனைத்து இடங்களில் சம அளவு உயரத்தில் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். போர்டிகோ அமைக்கும் போது தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் வாட்டம் வைக்கப்படுகிறதா, லெவல் டியூப் கொண்டு சரிபார்க்கப்படுகின்றதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
http://www.tamilamuthu.com/2013/02/blog-post_6657.html
--
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment