தாய்மை அடைவது என்பது ஒரு பெண்ணுக்கு பெரிய பாக்கியம் என்று சொல்லலாம். அப்படி முதல் முறை தாய்மை அடைந்து குழந்தை பெற்ற பின்னர், குழந்தைகளை சரியாக பராமரிக்க தெரியாது. அதிலும் சிலருக்கு குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டும் என்றாலே பயப்படுவார்கள். ஏனெனில் குழந்தைகளை சரியாக பிடித்து குளிக்க வைக்கவில்லை என்றால், குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிடும். மேலும் குழந்தைகளுக்கு நாம் எப்படி தேய்த்து, முறையாக குளிக்க வைக்கிறோமோ அதைப் பொறுத்து தான் அவர்கள் உடல் வளர்ச்சியும் இருக்கிறது. அவ்வாறு எந்த ஒரு பிரச்சனையும் வராமல், பாதுகாப்பாக குழந்தைகளை குளிப்பாட்டுவதற்கு ஒரு சில முறைகள் இருக்கிறது. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
1. குழந்தை பிறந்து முதல் இரண்டு வாரத்திற்கு சுத்தமான, மென்மையான துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து உடலை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது எப்படி பிடிக்க வேண்டும் என்று நன்கு தெரிந்துவிடும். மேலும் இதன்மூலம் நன்கு பழகியும் கொள்ளலாம்.
2. எப்போதும் குழந்தைகளை குளிப்பாட்டும் போது வெதுவெதுப்பான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இவை குழந்தையின் உடம்பில் இருக்கும் கிருமிகளை அழித்துவிடும். மேலும் அவற்றில் குளிக்க வைத்தால், குழந்தைகளுக்கு சுகமாகவும் இருக்கும்.
3. குழந்தைகளுக்கு குழந்தைகளுக்காக விற்கும் பேபி சோப்பை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் குழந்தையின் சருமமானது மிகவும் மென்மையாக இருக்கும். மேலும் பேபி சோப்பானது கெமிக்கல் இல்லாதது. ஆகவே குழந்தைக்கு வேறு எந்த சோப்பையும் பயன்படுத்தக் கூடாது.
4. குழந்தைக்கு தினமும் குளிப்பாட்ட வேண்டும் என்பதில்லை. கோடை காலத்தில் என்றால் வாரத்திற்கு 4-5 தடவையாவது குளிக்க வைக்கலாம். ஆனால் குளிர், மழை காலம் என்றால் வாரத்திற்கு ஒரு முறை குளிக்க வைப்பதே போதுமானது.
5. குழந்தைகளை குளிப்பாட்டும் இடத்தை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் குழந்தையின் தொப்புள் கொடியானது தண்ணீரில் நனையக் கூடாது. ஏனெனில் பிறந்த உடனே குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்து விட்டு, கிளிப் போட்டுவிடுவார்கள். தண்ணீரில் நனைந்தால் அது பாதிக்கப்படும். மேலும் குளிப்பாட்டிய பின்னர் நன்றாக அந்த இடத்தை துடைத்து விட்டு அதற்கென கொடுக்கப் பட்ட பவுடரினை போடவேண்டும். பொதுவாக தொப்புள் கொடி நன்றாக காய்ந்து 5 நாட்களில் உதிர்ந்து விடும். பின்னர் பயமில்லாமல் குளிப்பாட்டலாம்.
6. பிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் போது, அதன் கழுத்தை நன்கு பிடித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பிறந்த குழந்தையின் கழுத்தானது எப்போதும் தள்ளாடிக் கொண்டே தான் இருக்கும். ஆகவே சரியாக, கவனமாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
7. குழந்தையை குளிக்க வைக்கும் போது கால்களில் படுக்க வைத்து, பிறகு மெதுவாக தண்ணீரை ஊற்ற வேண்டும். அவ்வாறு குளிக்க வைக்கும் போது தலையை பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மேலும் குழந்தையானது அசைந்து கொண்டே இருக்கும், அப்போது ஒரு கையில் குழந்தை கீழே விழுந்து விடாமல் பார்த்துக் கொண்டு, மறு கையில் குழந்தைக்கு சோப்பு போட்டு குளிப்பாட்ட வேண்டும். எப்போதும் உட்கார்ந்தே குழந்தைக்கு குளிப்பாட்டுங்கள், அதுவே குழந்தைக்கும், தாய்க்கும் ஈஸியாக இருக்கம்.
8. பிறகு குழந்தைக்கு குளிக்கும் போது முகத்தில் தண்ணீரை ஊற்ற வேண்டாம். தண்ணீரை தொட்டு முகத்தை துடைத்து விடுங்கள். இல்லையென்றால் குழந்தை மூச்சுவிடத் திணரும். ஆகவே அப்போது கவனமாக இருக்க வேண்டும்.
9. குளிப்பாட்டியப் பிறகு குழந்தையை துடைக்க சுத்தமான டவலை வைத்து உடனே துடைக்க வேண்டும். மேலும் குழந்தையை குளிப்பாட்டி, துடைத்தப் பின் மிகவும் நெருக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தையை குளிரில் இருந்து தடுக்கலாம்.
இவற்றையெல்லாம் நினைவில் வைத்து குழந்தையை குளிப்பாட்டுங்கள். நீங்களே உங்கள் குழந்தையை பராமரிப்பதில் சிறந்தவர் ஆகலாம்.
No comments:
Post a Comment