நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30
இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்து என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்திய நூல்கள் கூறுகின்றன.
திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஓரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்த பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.
சூரியனும் கோள்களும்
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்- நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள் பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான் இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான் (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன- அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். அல்குர்ஆன் 13:2
'நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்- பகலை இரவில் புகுத்துகிறான்- இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்' என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன- அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். அல்குர்ஆன் 31:29
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்- பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்- இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன- அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்- அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 35:13
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது- இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது- இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. அல்குர்ஆன் 36:38-40
அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்- அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்- இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்- சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது- (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்- மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 39:
சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்அன் கூறுகிறது.
பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கிற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான்.
இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது- சூரியனையும் சுற்றுகிறது- தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.
பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.
ஆக சூரியன் சூழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல- ஓடிக் கொண்டே இருக்கின்றது- அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால், நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.
இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.
இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்தையல்ல- கடவளின் வார்த்தை என்பதை தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று.
Engr.Sulthan
--
No comments:
Post a Comment