Sunday, March 16, 2014

இன்டர்வியூவில் வெற்றி பெற எளிய வழிகள்

வேலைக்கு நேர் முகத் தேர்வு நடத்துவதன் நோக்கம் சிக்கலான கேள்விகளுக்கு சமயோசிதத்துடன் எப்படி பதில் தருகிறீர் கள், பதற்றம், குழப்பம் போன்ற உணர்வுகளைச் சமாளிக்கும் சாதுர்யம்(smartness), அறிவு முதிர்ச்சி உங்களிடம் உள்ளதா? நீங்கள் தன்னம்பிக்கையும், பாசிட்டிவ் நோக்கும் (Attitude) உடையவரா? போன்ற வற்றைத் தெரிந்து கொள்ளத்தான். அதனால் சில அடிப்படை விஷயங்களை கடைப்பிடித்தாலே பெரும்பாலான சமயங்களில் நேர்முகத் தேர்வை எளிதாகச் சமாளித்துவிடலாம்.

நேர்முகத் தேர்வு பற்றி மனதில் நினைக்கும் போது நமக்குத் தோன்றும் காட்சி ஒரு பெரிய அலுவலக அறையில் அலுவலரும், அவர் மேஜைக்கு எதிரே ஒரு நாற்காலியும் இருக்கும் என்பதுதானே! இது ஒரு வகையான இன்டெர்வியூ முறைதான். இதுதவிர வேறு விதங்களிலும் இன்டெர்வியூ நடத்தப்படலாம். அதனால் வெவ்வேறு விதமான நேர்முகத் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்று இப்போது பார்க்கலாம்.

நடத்தைச் சார்ந்த (Behavioural) இன்டெர்வியூ:

இது மேலோட்டமாக இல்லாமல் உங்கள் திறன்களை சரியாக மதிப்பிட பயன்படுத்தப்படுகிறது. சிக்கலான, சவாலான சூழல்களில் உங்கள் ரியாக்ஷன் என்ன? உங்களிடம் உள்ள திறன்களை நீங்கள் முழுமையாக பயன்படுத்துகிறீர்களா? என்பதை தெரிந்து கொள்வதே இந்த இன்டெர்வியூவின் நோக்கம். இந்த முறையில் கேட்கப்படும் சாம்பிள் கேள்விகள் சில:

 
உங்கள் தலைமைப்பண்பைப் பயன் படுத்திய சூழல் பற்றி சொல்லுங்கள்.!
 
உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தோல்வி என்ன? அதை எப்படி எதிர் கொண்டீர்கள்?
 
இதுபோன்ற கேள்விகளைப் புரிந்து கொண்டு யோசித்து தெளிவாக பதில் தருவது மிகவும் அவசியம். முடிந்தவரை மிகவும் பெர்சனலான விஷயமாக இல்லாமல் வேலை, கல்விச்சூழல்களில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும், வேலை விளம்பரத்தில் எதிர்பார்க்கப்படும் திறன்கள் (தலைமைப்பண்பு, குழு உணர்வு போன்றவை) பற்றி சொல்லியிருந்தால் அவை தொடர்பான உங்கள் அனுபவங்களை முன்பே நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். எந்த காரணத்தைக் கொண்டும் கற்பனை பதிலைத் தரவேண்டாம்.
 

ஸ்ட்ரெஸ் (Stress) இன்டெர்வியூ:

எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல, ஏற்கெனவே கிலி பிடித்திருக்கும் உங்களை இன்னும் பயமுறுத்துவதே இந்த முறையின் நோக்கம். இதில் இன்டெர்வியூ நடத்துபவர் வேண்டுமென்றே உங்களிடம் பதற்றம், கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகளை தூண்டக்கூடிய கேள்விகளை அடுத்தடுத்து கேட்பார். அதுபோன்ற தருணங்களில் எதிர்கேள்வி கேட்காமல், உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடும் புன்னகையோடும் பதில் சொல்லுங்கள். இதுவே வெற்றிக்கான வழி.

 

குழு (Panel இன்டெர்வியூ:

இது ஒரு நபரை பல பேர் இன்டெர்வியூ செய்யும் முறை. சிலருக்கு இன்டெர்வியூ அறையில் நுழைந்து பல பேர் எதிரில் அமர்ந்திருப்பதைப் பார்த்த வுடன், சிங்கக் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ஆட்டுக்குட்டியைப் போல நடுக்கம் வந்துவிடும். எதிரில் அமர்ந்து இருப்பவர்களும் மனிதர்களே என்பதை நினைவில் வைத்துக்கொண்டாலே இந்த பயம் போய்விடும்.பெரும்பாலான சமயங்களில் முதல் கட்ட இன்டெர்வியூவுக்குப் பின் பேனல் இன்டெர்வியூ நடத்தப்படும். இதில் பல்துறை சார்ந்தவர்கள் இருப்பார்கள். சில சமயம் உளவியல் நிபுணர்களும் இருக்கலாம். சில சமயம் ஸ்ட்ரெஸ் இன்டெர்வியூ போல இதிலும் உங்களை நோக்கி சரமாரியாக கேள்விக்கணைகள் வீசப்படலாம். அதைக் கண்டு பதறாமல் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தரவும்.

லன்ச்/டின்னர் இன்டெர்வியூ:

பன்னாட்டு நிறுவனங்களில் சில பதவிகளுக்கு அப்ளை செய்யும்போது அவர்கள் உங்களை ரெஸ்டாரன்டிலோ, காபி ஷாப்பிலோ சந்திக்க அழைக்கலாம். உணவு அருந்தும் போது சாதாரணமாகப் பேசுவதுபோல உங்களை இன்டெர்வியூ செய்வார்கள். இதன் நோக்கம் பொது இடத்தில் ரிலாக்ஸான மனநிலையில் உங்கள் நிஜ குணம்/நடத்தை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளத்தான். இத்தகைய இன்டெர்வியூக்கு அழைக்கப்பட்டால் சரியான நேரத்துக்குச் சற்று முன்பே சென்றுவிடுவது நல்லது. ரெஸ்டாரன்ட் என்பதால் ஜிகுஜிகு உடைகளை அணியாமல் செமிஃபார்மல் அல்லது நல்ல ஸ்மார்ட் கேசுவல் (Smart casual) உடைகளை அணியவும். மேஜை கரண்டி, முள் கரண்டி, கத்தி, நாப்கின் போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதை முன்பே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். டேபிள் மேனர்ஸை கடைப்பிடியுங்கள். பீர், ஒயின் போன்ற விஷயங்களைத் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். வெயிட்டர்களிடம்கூட பணிவோடு நடந்து கொள்ளுங்கள்.

டெலிபோன், ஸ்கைப் (Skype) இன்டெர்வியூ:

பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி நம் நாட்டு நிறுவனங்களும் தற்போது இம்முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளன. வெளிநாட்டு கலாசாரமாக இருந்தால் நம் நாட்டிற்கும் அவர்களுக்கும் உள்ள காலவேறுபாட்டை சரியாக கணக்கிடவும். முடிந்தவரை லேண்ட் லைன் போனை பயன்படுத்துவது நல்லது. சத்தம், குறுக்கீடு இல்லாத அறையில் பேசுவது அவசியம். உங்கள் போனில் உள்ள கால் வெயிட்டிங் ஆப்ஷனை துண்டித்துவிடவும். கேட்கப்படும் கேள்விகளைக் குறுக்கிடாமல் முழுமையாக கேட்டபின் பதில் தரவும். பேப்பர், பேனா, உங்கள் ரெஸ்யூம் போன்றவற்றை எதிரில் வைத்திருப்பது அவசியம். ஸ்கைப் இன்டெர்வியூ (வீடியோ கான்பரன்ஸ்) என்றால் தடைபடாத, வேகமான இன்டெர்நெட் தொடர்பை பயன்படுத்தவும். லேப்டாப் பயன்படுத்தினால் பேட்டரி முழுசார்ஜில் இருக்கட்டும். டெலிபோன் இன்டெர்வியூ இருந்தால்கூட ஃபார்மல் உடையில் புன்னகையோடு பதில் சொல்லுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும்.

என்ன சார் தைரியம் வந்தாச்சா.!  கிளம்புவோமா இன்டர்வியூவுக்கு..!!

http://vishwarooopam.blogspot.in/2013/01/blog-post_6272.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: