Sunday, June 10, 2012

உங்கள் குழந்தையை அன்பாகவும், அக்கறையுடனும் வளர்க்க வேண்டுமா?

உங்கள் குழந்தையை அன்பாகவும், அக்கறையுடனும் வளர்க்க வேண்டுமா?

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் குதூகலம் தான். ஆனால் அவர்களை வளர்த்து ஆளாக்குவது அத்தனை சுலபமல்ல. குழந்தைகள் வளர்ச்சி என்பது தொடர்ச்சியான பல்வேறு செயல்களை கொண்டது.
அவர்கள் குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய வேண்டும். இவைகளைத்தான் வளர்ச்சி படிநிலைகள் என்கிறோம். குழந்தை அந்தந்த வயதுக்கேற்ற செயல்களைச் செய்தால்தான், சரியான வளர்ச்சி பெறுகிறது என்று அர்த்தம். ஆனாலும் ஒரு குழந்தை வளரும் விதத்திலேயே மற்ற குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை. இதை பெற்றோர் உணர வேண்டும்.

1.
பக்கத்து வீட்டு குழந்தை செய்வதை எல்லாம் நம்முடைய குழந்தையும் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்பதும், புலம்புவதும் தேவையற்றது. குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டால்தான் அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க முடியும். பெற்றோர் கண்காணிக்க வேண்டிய குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் நிறையவே உள்ளன. 

பிறந்த குழந்தையானது, 2 மாதங்களில் சிரிக்கத் தொடங்கும். 4 மாதங்களில் கழுத்து தலைசுமக்கும்படி உறுதியாகும். 8 மாதங்களில் குழந்தை எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காரும், 12 மாதங்களில் எழுந்து நிற்கும். 

2.
குழந்தை பிறந்து முதல் 6 வாரங்கள் வரை தலையை ஒரு புறமாகத் திருப்பியவாறு மல்லாந்து படுத்துக் கொண்டு இருக்கும். திடீரென்று உருவாகும் சத்தம் குழந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அப்போது குழந்தையின் உடல் விலுக்கென்று சிலிர்த்துக் கொள்ளும். கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருக்கும் குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாக பிடித்து வைத்துக் கொள்ளும். அடுத்த ஒன்றரை மாதத்தில் குழந்தையின் கழுத்து உறுதியாகும். பொருட்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுபார்க்கும்.

3.
மூன்று மாதங்களில் குழந்தைகள் மல்லாந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகைச் சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோசத்தை வெளிபடுத்தும் வகையில் குரலை உயர்த்துதல் போன்றவற்றை தொடரும். இந்த கால கட்டத்தில் குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிபடுத்தும். கைவிரல்களை முன்புபோல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக் கொள்ளும்.

4. 6
மாதங்களில் குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும். தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து ஏதேனும் சத்தம் கேட்டால் அந்த பக்கமாக குழந்தை தனது தலையைத் திருப்பும். படுத்த வாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும். எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும். குழந்தை நிற்கும்பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும். 

5.
குழந்தைகள் 9 மாதங்களில் கைகளை ஊன்றியோ, எவ்வித பிடிப்போ, உதவியோ இல்லாமல் உட்காரும். அப்புறமாய் குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும். 12 மாதங்களில் குழந்தை எழுந்து நிற்கத் தொடங்கும். நடக்க பழகும். அத்தை, மாமா போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும். 2 வருடங்களில் கால் சட்டை போன்ற உடைகளை உடுத்திக் கொள்ளும். கீழே விழாமல் ஓடிச்செல்லும். புத்தகத்தில் உள்ள படங்களை பார்க்க ஆர்வபடும். தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்கும். பிறர் சொல்லுவதை திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும். 

6.
குழந்தைகள் 3 வயதை அடைந்தால் தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும். "பையனா, பெண் பிள்ளையா" போன்ற எளிய கேள்விகளுக்கு பதில் சொல்லும். உடல் பாகங்களின் பெயரைக் கேட்டால் சொல்லி விடும்.பொருட்களை இங்கேயும், அங்கேயும் வைப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளில் உதவி செய்யும். மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும். புத்தகங்கள் அல்லது பத்திரிகைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.

7.
குழந்தைகள் 5 வயதில் துணிகளை உடுத்திக் கொள்ளும்போது ஒரு சில பட்டன்களையாவது போட்டுக் கொள்ளும். குறைந்தபட்சம் மூன்று நிறங்களின் பெயரையாவது சொல்லும். படிக்கட்டுகளில் பெரியவர்களை போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச்செல்லும். குதித்தும், தாண்டியும் செல்லத் தொடங்கும். அந்தந்த காலகட்டத்திற்கும் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தையைக் காட்டி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். 

8.
குழந்தை நடப்பதற்கு தயாராக இல்லாத நேரத்தில் நடக்க வைத்து வலுக்கட்டாயமாக பயிற்சி கொடுப்பது எந்தவித பலனையும் தராது. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி, பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ குழந்தைகளின் செயல்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் ஏற்படும். 

சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையைவிட சில செயல்பாடுகளில் குறைவான வளர்ச்சியோ அல்லது அதீத வளர்ச்சியோ பெற்று இருக்கலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்துகொள்வது நலம்


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: