Thursday, November 1, 2012

சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்!

சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்!

விலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக, சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்!

1.சாம்பார் பொடி அரைத்துக் கொள்ளும்போது ஒரு கப் புழுங்கல் அரிசி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்தப் பொடியை சமைக்கும்போது போட்டால் சாம்பார் குழைவாக, கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

2. கீரைக்குச் சேர்க்கும் பயத்தம் பருப்பை தனியாக வேக வைக்காமல் குக்கர் வைக்கும்போதே ஒரு பாத்திரத்தில் குறைவாக தண்ணீரில் வேகவைத்து எடுத்துவிடுங்கள். காஸ் மிச்சமாகும்.

3. துவரம்பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொண்டால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வேகும்.

4. ரசத்துக்கு பருப்பை தனியாக குழைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. பருப்பு வேகவைத்த தண்ணீரை ரசத்துக்குப் பயன்படுத்தினாலே ரசம் சுவையாக இருக்கும்.

5. அரை கிலோ புளியை தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கட்டியான பேஸ்ட்டை டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜ்ஜில் வைத்துவிட்டால் தேவைப்படும்போது புளியை பயன்படுத்திக்கலாம். தினமும் கரைசலில் வீணாகும் புளியை இதன் மூலம் தவிர்க்கலாம்.

6.உருளைக்கிழங்கை வதக்கும்போது சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்காமல் குறைந்த எண்ணெயில் உருளைக்கிழங்கு கரகரப்பாக வரும். எண்ணெய்ச் செலவு குறையும்.

7.உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்றவற்றை தண்ணீர்விடாமல் குக்கரில் ஆவியில் வேகவைத்து எடுத்து வறுத்தால், ஒரு கப் எண்ணெய்க்கு பதிலாக 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்தான் தேவைப்படும்.

8. தோசைக் கல்லை நறுக்கிய வெங்காயத்தில் நன்கு தேய்த்த பிறகு தோசை சுட்டால், குறைவான எண்ணெயில் வழுவழுப்பான, கரகரப்பான தோசை சுடலாம்.

9. அப்பளம், வடகம் போன்றவற்றை வெயிலில் காய வைத்து பொரித்துப் பாருங்கள், அதிக எண்ணெய் இழுக்காது.

10. தோசை மாவு அரைத்த உடனே ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃபிரிட்ஜ்ஜில் வைத்துவிடுங்கள். தேவையான அளவு மாவை மட்டும் புளிக்க வைத்து இட்லி, தோசைக்குப் பயன்படுத்தினால் நான்கு நாளுக்கு வரும் மாவு எக்ஸ்ட்ராவாக ரெண்டு நாளுக்கு வரும்.

11. எந்த சமையலாக இருந்தாலும் சரி, ஆரம்பத்தில் பெரிய தணலில் வைத்து பிறகு குறைத்துவிட்டால் கேஸ் மிச்சப்படுத்தலாம்.

12. காய்கறி, பருப்பு வகைகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் சேர்க்காமல் அளவான தண்ணீரில் வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும், தண்ணீர் அதிகமாக விட்டால்தான் நீண்டநேரம் கேஸ் வீணாகும்.

13. பயன்படுத்துகிற பாத்திரம் அகலமாகவும், உயரம் குறைவாகவும் இருந்தால் சமையல் சீக்கிரம் முடியும்.

14. காபி போடுவதற்கு மொத்த பாலையும் சூடு செய்யாமல், தேவையான அளவு சின்ன பாத்திரத்தில் சூடு செய்து எடுத்துக் கொள்ளலாம்.

15. காஸ்ட்லியான வழக்கமான காய்கறிகளை கொஞ்சம் குறைத்து சுரைக்காய், கோவைக்காய், பிடிகருணை, வாழைப் பூ போன்ற வழக்கத்தில் இல்லாத காய்கறிகளை பயன்படுத்திப் பார்க்கலாமே!

16. பாத்திரத்தைக் கழுவி அப்படியே அடுப்பில் வைத்தால், அந்தப் பாத்திரம் காயவே ரெண்டு நிமிடம் ஆகும். இதனால் அனாவசியமாக கேஸ் வேஸ்ட். அதனால் பாத்திரத்தைக் கழுவி, துடைத்த பிறகு அடுப்பில் வைக்கவேண்டும்.

அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்களைச் சொல்கிறார் அசைவ உணவு நிபுணர்,

1. மட்டன், சிக்கனை கடாயில் அதிக எண்ணெய் விட்டு வறுக்காமல், தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக வறுக்கலாம்.

2. இரண்டு முட்டையில் ஒரு கப் கடலைமாவு கலந்துவிட்டால் ஆறு ஆம்லெட் போடலாம்.

3. மீன் வாங்கும்போது பெரிய துண்டுகளுக்குப் பதிலாக மெலிசான சின்ன துண்டுகளாகப் போட்டு வாங்கினால் பத்துத் துண்டுகளுக்கு பதிலாக பதினைந்து துண்டுகள் கிடைக்கும்.

4. அதிக விலை கொடுத்து பெரிய மீன்களை வாங்குவதைவிட சின்ன மீன்களை வாங்கினால் நூறு ரூபாய்க்குள் முடிஞ்சிடும், நிறைய மீன்களும் கிடைக்கும்.

5.அசைவ உணவுகளை வாங்கி நாம் வெட்டுவதைவிட கடையில் வெட்டி வாங்கிக் கொண்டால் வீணாவதைத் தவிர்க்கலாம்

 


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: