பவர்கட் பிரச்னையா...இன்றே சோலாருக்கு மாறுங்க !
'பவர் கட் பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்' என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று ஆரம்பித்தது... இன்று 12 மணி நேரம்... 16 மணி நேரம்... 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது. 'இனி, அரசாங்கத்தை நம்பி பலனில்லை' என்று உணர்ந்த மக்கள், 'இன்வர்ட்டர்'களை வாங்கினார்கள். ஆனால்
, அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார சப்ளைகூட இல்லாத நிலையில், அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது.
மாற்று வழியாக, சூரிய ஒளி மூலம் அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர்களே தயாரித்துக் கொள்ளும் சோலார் முறையை அரசாங்கம் பரிந்துரைத்து, மானியமும் வழங்குவதாக அறிவித்திருப்பது உருப்படியான யோசனை. இதையடுத்து, அங்கொன்று... இங்கொன்று என்று சில வீட்டு மாடிகளில் மின்னுகின்றன சோலார் தகடுகள். 'பவர் இருந்தாலும் இல்லைனாலும் எங்க வீட்டுல பிரச்னை இல்லைங்க...' என்று அதை உபயோகிப்பவர்கள் சர்டிஃபிகேட் தருகிறார்கள். மக்கள் மத்தியில் சோலார் பிளான்ட் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய விழிப்பு உணர்வு பெருக ஆரம்பித்திருக்கும் நிலையில், அதுகுறித்த விவரங்களைப் பெற, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்துக்குப் படையெடுத்தோம். அங்கே நம்மை எதிர்கொண்ட துணைப் பொதுமேலாளர் (சூரிய சக்தி அறிக்கை பிரிவு) சையத் அகமத், நமக்கு விளக்கங்களைத் தந்தார்.
''மின்பற்றாக்குறை பற்றிய புலம்பல்கள், புகார்களைவிட... மாற்று ஏற்பாடுகளுக்கு மக்கள் தயாராக வேண்டிய சூழல் இது! பூகோள அமைப்பின் சாதகத்தால், தமிழ்நாட்டில் சூரிய சக்தி அதிகளவில் கிடைக்கிறது. அதைக்கொண்டு மின்சாரம் பெறுவது நல்ல யோசனை. மக்களிடம் அந்த முயற்சியை முன்எடுப்பதற்கான தயக்கம் இருப்பதற்குக் காரணம்... அதற்கு தேவைப் படும் அதிகப்படியான ஆரம்ப கட்ட முதலீடுதான். அதனால்தான் மத்திய அரசாங்கம் அதற்கு அதிகபட்சம் 40 சதவிகிதம் வரை மானியம் வழங்க முடிவெடுத்துள்ளது.
ஒரு நாளைக்கு 4 டியூப் லைட், ஒரு மின் விசிறி, ஒரு டி.வி, ஒரு ஏ.சி, ஒரு கம்ப்யூட்டர், சிறிது நேரம் மின் மோட்டார் என மின் சாதனங்களை சுமார் 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரியஒளி மூலம் பெறுவதற்கு சோலார் தகடுகள் மற்றும் பேட்டரி என அமைப்பதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள 1.19 லட்சத்தை நீங்களே செலவு செய்ய வேண்டும்.
பேட்டரி இல்லாமல் நேரடியாக மின்சாரம் பெற்று உடனுக்குடன் பயன்படுத்தும் வகையிலான சாதனத்தை அமைப்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். லட்சங்களில்தான் அமைக்க வேண்டும் என்பதும் இல்லை. ஒரு ஃபேன், ஒரு லைட் என்று மின்சாரத் தேவையை சுருக்கிக் கொண்டால்... குறைந்தபட்சம் 20 ஆயிரத்தில் இருந்து சோலார் தகடுகள் அமைக்கலாம். கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகபட்சமாக 100 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதற்கான சோலார் தகடுகள் அமைக்க 1.8 கோடி செலவாகும். மானியத் தொகையாக அதிகபட்சம் 72 லட்ச ரூபாய் கிடைக்கும்.
தற்போது... வீடுகளுக்கு சோலார் மின்இணைப்பு பொருத்தியிருக்கும் 189 பேர், எங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இவர்களில் சிலருக்கு மானியம் வழங்கவும் ஆரம்பித்துவிட்டோம். எனவே, நீங்களும் விரையுங்கள்...'' என்ற சையத், மானியம் பெற விண்ணப்பிக்கும் முறையையும் விளக்கினார்.
''சோலார் பிளான்ட்டை வீடுகளில் ஏற்படுத்தித் தர, இதுவரை 90-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளோம். இந்நிறுவனங்களை மக்கள் அணுகலாம். அவர்கள் மக்களின் விண்ணப்பங்களை எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். மானியத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதித் தொகையை மட்டும் இவர்களிடம் செலுத்தினால் போதும். மானியத்தொகையை அவர்களிடம் நாங்களே செலுத்திவிடுவோம். மானிய அறிவிப்புக்கு முன்னதாக தாங்களாகவே சோலார் பிளான்ட்டை வீட்டில் நிறுவியிருப்பவர்கள், எங்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அதை செயல்படுத்தியிருந்தால் அவர்களுக்கும் மானியம் உண்டு. உரிய முறையில் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மானியம் அனுப்பப்படும். அங்கிருந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மானிய தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதில் முக்கியமான விஷயம், வருடத்தில் அக்டோபர் மாதம் மட்டுமே மானியம் பெற விண்ணப்பிக்க முடியும். அதுவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே!'' என்று தகவல்கள் தந்து முடித்தார் சையத் அகமத்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று சென்னையிலிருக்கும் 'மாடர்ன் அல்ட்ரா சோலார் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடட்'. இதன் இயக்குநர் வித்தியாம்பிகாவிடம் பேசியபோது, ''சென்னையில் மட்டும் இதுவரை 40 வீடுகளுக்கும் மேல் நாங்கள் சோலார் தகடுகள் பொருத்திஉள்ளோம். இனிவரும் நாட்களில் பெரும்பாலான வீடுகளிலும் நிச்சயம் இந்த சோலார் தகடுகள் மின்னும்!
வீடுகளில்... ஒரு எல்.ஈ.டி லைட், ஒரு ஃபேன், மொபைல் சார்ஜர் ஆகியவற்றை தினமும் ஆறு மணி நேரம் பயன்படுத்துவதற்கு, குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் செலவில் சோலார் தகடுகள் பொருத்த வேண்டும். ஒருமுறை செலவு செய்தால் போதும், குறைந்தது 20 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பெற முடியும். மழைக்காலங்களில் சோலார் தகடுகள் இயங்குமா என்ற தயக்கம் வேண்டாம். காரணம், சூரிய ஒளியில் இருக்கும் போட்டான் கதிர்களை கிரகித்துதான் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எனவே, பகலில் மேகமூட்டமோ... மழையோ இருந்தாலும், சோலார் தகடுகள் போட்டானை கிரகித்து மின்சாரத்தை உற்பத்தி செய்துவிடும்'' என்று சொன்னார்.
எல்லாம் சரி... சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்துபவர்களின் ரியாக்ஷன் எப்படி?
அதைப் பற்றி பேசுகிறார் சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், ''அரசாங்கம் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே என் வீட்டில் அமைத்தவன் நான். அப்படித்தான் சோலார் தகடுகளையும் எட்டு மாதங்களுக்கு முன்பே அமைத்துவிட்டேன். எங்கள் வீட்டுக்கான ஒரு நாளைய மின்சாரத் தேவை... சுமார் ஒரு கிலோ வாட். அதற்காக பத்து சோலார் தகடுகளைப் பொருத்தியுள்ளேன். கிடைக்கும் மின்சாரத்தை 10 இன்வெர்ட்டர் பேட்டரிகளில் சேமித்துப் பயன்படுத்துகிறேன். இதனால், பகல் மட்டுமின்றி, இரவிலும் சூரிய மின்சாரம் கிடைக்கிறது. இந்த எட்டு மாதங்களாக ஒரு நொடிகூட எங்கள் வீட்டில் பவர் கட் இல்லை. சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதால், கரன்ட் பில் கட்டணம் வெகுவாகவே குறைந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாட்கள் போனால்... மின் கட்டணம் செலுத்தவே தேவையிருக்காது.
இதற்காக கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறேன். இதற்கு 20 வருடங்கள் வரை ஆயுள் உள்ளது. மாதா மாதம் கட்டும் கரன்ட் கட்டணத்தை இருபது ஆண்டுகளுக்கு கணக்கிட்டுப் பார்த்தால்... (பார்க்க பெட்டிச் செய்தி) சூரிய சக்தி மின்சாரத்துக்கு செய்யும் செலவு குறைவுதான். ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரிகளை மாற்றினால் போதும். இப்போது அரசாங்கத்தின் மானியத்தைப் பெற விண்ணப்பித்திருக்கிறேன்'' என்று குஷியோடு சொன்ன சுரேஷ்,
''இப்போது வீட்டுக்கு வீடு டிஷ் ஆன்டனா இருப்பதுபோல... இனி வரும் காலங்களில் சோலார் தகடுகளும் இருக்கும்!'' என்று தன் எதிர்பார்ப்பையும் சொன்னார்!
நல்ல திட்டம் நோக்கி நாடே நகரட்டும்!
சோலார் தரும் லாபம்!
மின் சாதனங்களின் ஒரு மணிநேர தேவைக்கான மின்சாரம்... டியூப் லைட்: 40-60 வாட்ஸ், சீலிங் ஃபேன்: 60-80 வாட்ஸ், டேபிள் ஃபேன்: 80-100 வாட்ஸ், டி.வி: 150-250 வாட்ஸ், எல்.சி.டி. டி.வி: 150-250 வாட்ஸ், டி.வி.டி: 40-60 வாட்ஸ், கம்ப்யூட்டர் சி.பி.யூ: 150-200 வாட்ஸ், மானிட்டர்: 100-150 வாட்ஸ், செல்போன் சார்ஜர்: 5 வாட்ஸ்.
----------------------------------------------------------------------
மேற்கூறிய மின்சாதனங்களின் அதிகபட்ச மின்தேவையை வைத்து ஒரு மணி நேரத்துக்குக் கணக்கிட்டால் மொத்தம் 1,155 வாட்ஸ் ஆகிறது. இதற்காக நாம் செலுத்தும் மின்கட்டணம் 1 ரூபாய் 15 பைசா (யூனிட்டுக்கு குறைந்தபட்ச கட்டணம் 1 ரூபாய்). இதையே 12 மணி நேரத்துக்குக் கணக்கிட்டால்... சுமார் 14 யூனிட்கள் வரும். இரண்டு மாதங்களுக்கு (60 நாட்கள் கணக்கிட்டால்...) 840 யூனிட்கள் வரும். இதற்கான கட்டணம்... 3,745 ரூபாய் 25 பைசா (1 முதல் 200 வரையிலான யூனிட்களுக்கு 3 ரூபாய்; 201 முதல் 500 வரையிலான யூனிட்களுக்கு 4 ரூபாய்: 501 முதல் 5 ரூபாய் 75 பைசா என கணக்கிடப்படுகிறது).
இருபது ஆண்டுகளுக்கு கணக்கிடும்போது... 4 லட்சத்து 49 ஆயிரத்து, 430 ரூபாய். ஆனால், முதல் கட்டமாக 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை செலவிட்டு சோலாருக்கு மாறிவிட்டால்... 'அடேங்கப்பா... நான் கரன்ட் பில்லே கட்டுறது கிடையாது' என்று தெம்பாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்... மின்வெட்டு என்கிற பிரச்னையும் இருக்காது.
--------------------------------------------------------------------
சூரிய சக்தி மின்சாரம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு, www.teda.in
என்ற வலைதளத்தை அணுகலாம்.
தொடர்புக்கு:
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை,
ஈ.வி.கே. சம்பத் மாளிகை,
ஐந்தாவது மாடி,
68, காலேஜ் ரோடு,
சென்னை 6,
தொலைபேசி: 044-28224830
http://kathirrath.blogspot.com/2012/11/blog-post.html
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment