Saturday, November 17, 2012

ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!


மனைவியர்கள், கணவர்களின் சுபாவம், தொழிலின் தன்மை, சமூகப் பணிகள், தனிப்பட்ட வேலைகள் என எவ்வளவுதான் புரிந்துணர்வோடு நடக்க முற்பட்டாலும் சில கணவர்கள் தமது அவசரப் புத்தியினால் எடுத்தெறிந்து பேசிவிடுவதுடன், சில நேரங்களில் கைநீட்டியும் விடுகின்றனர். பாசம், பரிவால் இணைத்து வைத்திருக்கும் இத்தூய உறவை தமது அற்பமான எண்ணங்களாலும், 
செயற்பாடுகளாலும் பாழாக்கிவிடும் அதே வேளை மனைவியர்கள் தமக்கு செய்யும் அளப்பரிய பணிகளுக்கு முன்னால் நாம் என்ன செய்கிறோம் என்பதைக் கூட இவர்கள் கவனிப்பதில்லை.

இதில் வேதனைக்குரிய விஷயம் யாதெனில், மார்க்க காரணங்களைக் காட்டி கூட மனைவிமார்களின் கடமைகளைச் செய்யத் தவறி விடுகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சல்மான் (ரழி), அபூதர்தா (ரழி) ஆகிய இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான், அபூதர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபூதர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது, என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத் தர்தா (ரழி) அவர்கள், உம் சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபூதர்தா (ரழி)  வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரழி) அவர்கள் அபூதர்தாவிடம், உண்பீராக! என்று கூறினார்.

அதற்கு அபூதர்தா (ரழி), நான் நோன்பு நோற்றிருக்கிறேன்என்றார். சல்மான் (ரழி), நீர்  உண்ணாமல் நான் உண்ண மாட்டேன் என்று கூறியதும் அபூதர்தா (ரழி)  உண்டார். இரவானதும் அபூதர்தா (ரழி) அவர்கள் நின்று வணங்கத் தயாரானார்கள். அப்போது சல்மான் (ரழி) அவர்கள், உறங்குவீராக! என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், உறங்குவீராக! என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரழி) அவர்கள், இப்போது எழுவீராக! என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர்.

பிறகு அபூதர்தாவிடம் சல்மான் (ரழி) அவர்கள், நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக! என்று கூறினார்கள். பிறகு அபூதர்தா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சல்மான் உண்மையையே கூறினார்! என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஜுஹைபா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1968)

அபூதர்தா (ரழி), சல்மான் (ரழி) ஆகிய இருவரும் நபிகளார் (ஸல்) அவர்களால் சகோதரர்களாக பிணைக்கப்பட்ட இரு நபித்தோழர்கள். தன்னை அபூதர்தா (ரழி) அவர்கள் வரவேற்றளவிற்கு அவர்களது மனைவி கவனித்ததாகத் தெரியவில்லை என்பதை உணர்ந்த சல்மான் (ரழி) அவர்கள் ஏன் இந்தக் கோலம்? எனப் பரிதவிக்கின்றார்கள்.

அபூதர்தா (ரழி) அவர்கள் மனைவியின் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றவில்லை என்பதை உணர்ந்து சல்மான் (ரழி) அவர்கள் எடுத்த முயற்சிகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முழுமையாக சரிகண்டார்கள்.

நம் சமூகத்தில் அல்குர்ஆன் ஓதுகின்றேன், திக்ர் செய்கின்றேன் என்று கூறிக் கொண்டு மனைவியானவள் தனக்கு துணி துவைக்கவும், உணவு சமைக்கவும், குழந்தைகளை வளர்க்கவும்தான் வழங்கப்பட்டுள்ளாள் என்கின்ற எண்ணத்தில் பல கணவர்கள் முனிவர்களைப் போன்றே இருந்துவிடப் பார்கின்றனர். தனது மனைவி ஒரு துணைவி என்பதை மறந்து, அவளுக்கும் ஆசா பாசங்கள், எதிர்பார்ப்புக்கள் இருக்கும், தனக்கும் தனது பிள்ளைகளுக்குமாக வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளும் கிணற்றுத்தவளை போன்று  அடைபட்டுக் கிடக்கின்றாள் என்பதை இவர்கள் கவனத்திற் கொள்வதில்லை. இத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணங்கள் செல்லும் போது எந்த மனைவியை கூட்டிச் செல்வது என சீட்டு குலுக்கிப் பார்ப்பார்கள் என்ற ஸுன்னாவெல்லாம் ஞாபகத்தில் வருவதில்லை.

ஆனால், சில மனிதர்களோ இவற்றையெல்லாம் தாண்டி தன் மனைவி ஆன்மா இல்லாதவள் என்கின்ற எண்ணத்தில் இன்னும் ஜாஹிலிய்யத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர். எப்போதாவது வாயைத் திறந்து தனக்கு ஏதும் வித்தியாசமான உணவோ, உடையோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்துச் செல்லுமாறு கேட்டால் எரிமலையாக குமுறுவதைக் காணுகின்றோம்.

குறிப்பாக சில அரச ஊழியர்களிடம் இந்நிலை காணப்படுகின்றது. படுக்கையறைக்கு மாத்திரம் சில மணிநேரங்கள் அவர்களுக்கு மனைவி தேவை. தான் வெளியில் காண்கின்ற அழகிய பெண்களுக்கு நிகராக அவள் இல்லை என்கின்ற ஒரே காரணத்திற்காக நடைப்பிணங்களாக அப்பெண்கள் அல்லற்படுகின்றனர். அப்பெண்களாகவே, நீங்கள் உங்களுக்கு பிடித்தமான ஒருவரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினாலும் வெளியில் சமூகம் என்ன நினைக்கும் என்கின்ற ஆதங்கம் (சமூகத்தில் இந்த தெளிவு இன்னும் இருளாகவே உள்ளது). இத்தகையவர்கள், தான் சம்பாதித்திருக்கும் வரட்டுக் கௌரவங்களுக்காக தானும் சிரமப்பட்டு இன்னொருத்தியையும் ஏன் சிரமப்படுத்துகின்றார்கள்.

வீடுகளுக்குள் சிறைச்சாலை அமைத்து மனைவி யர்களைக் கொடுமைப்படுத்தும் இம்மகான்களை யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அவரா! அவர் வள்ளலாயிற்றே! அவரால் எத்தனை பள்ளிகள், அல்குர்ஆன் மதரஸாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அவரிடம் கல்வி கற்றவர்கள் நாங்கள்,அவர் பல தடவைகள் மக்கா சென்று வந்த ஹாஜியார்,பொதுப்பணிகளை தம் பணியாக சிரமேற் கொண்டு செய்பவர் என்பது போன்ற வெளித்தோற்றங்கள் மாத்திரமே சமூகத்தின் பார்வைக்குத் தெரிகின்றது. (இவ்வாறான மனைவிகள் விடயத்தில் பல காழிகள் கூட கண்விழிக்காதிருக்கின்றனர்.) நபித்தோழர் ஸல்மான் (ரழி) போன்று அவர்களது வீடுகளுக்கு சென்று பார்த்தால் உண்மை நிலை புலப்படும்.

இவை அனைத்திற்கும் மத்தியில் மனைவி நியாயம் தேட முற்பட்டால் மடமைப் பெண் என்று முத்திரை குத்தி விடுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸாபித் (ரழி) அவர்களது மனைவி சாடையாகக் கூறியதைப் புரிந்து கொண்டு அவர்களின் திருமண பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தீர்ப்பு வழங்கியதை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள் என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-5273)
ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரழி) அவர்களின் துணைவியார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா? என்று கேட்டார்கள். அவர் ஆம் (தந்துவிடுகிறேன்)என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-5273)

மனைவியிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுமாறு இஸ்லாம் சொல்கின்றது ஆனால் இதுபோன்ற இஸ்லாமியர்களால் ஒட்டுமொத்த இஸ்லாமே பெண்களை அடிமை படுத்தும் மார்க்கமாக மாற்று மதத்தவர்களால் பார்க்கப் படுகின்றது இந்நிலை மாற இஸ்லாத்தை சரியாக பின்பற்றுவோம் இன்ஷா அல்லாஹ்........

No comments: