Saturday, November 17, 2012

பழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.

பழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.

'முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம்' என்று நினைப்பவர்கள் துவங்கி,

காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து சேருமிடம் யூஸ்டு கார் மார்க்கெட்.

யூஸ்டு காரை வாங்குவதற்கான வழிமுறை என்ன, யாரிடம் கார் வாங்குவது, இப்போது மார்க்கெட்டில் அதிகமாக விற்பனையாகும் 'டாப் 10' கார்களில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எதை மாற்ற வேண்டியது இருக்கும் என அத்தனை விஷயங்களையும் இங்கே தொகுத்திருக்கிறோம். கூடுதலாக, பழைய பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸும் இங்கே இருக்கிறது.

நிச்சயம் இந்த பக்கங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்!

விலை வித்தியாசம்!

புத்தம் புதிய கார்களின் விற்பனை விலையைச் சார்ந்துதான் பழைய கார்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், புதிய கார்களை விற்பனை செய்யும் டீலர்களும் - கார் தயாரிப்பாளர்களும் ஒவ்வொரு ஊருக்கும் ஏற்ற வகையில் தள்ளுபடிகள், பரிசுகள் என்று பல வகையான திட்டங்களைச் செயல்படுத்தி, கார்களின் விற்பனையைப் பெருக்க முயற்சிக்கிறார்கள். அதனால், புத்தம் புது கார்களின் விலையே ஊருக்கு ஊர் மாறுபடும். இந்தத் தாக்கத்தினால்தான், பழைய கார்களின் விலையும் ஊருக்கு ஊர் மாறுகிறது!

தயாரிப்பு நிறுத்தப்பட்ட கார்கள்!

தொழிற்சாலையையே மூடிவிட்ட நிறுவனங்கள் தயாரித்த கார்கள், மிக மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும். குறிப்பிட்ட ஒரு மாடல் கார் மட்டும் நிறுத்தப்பட்டு, அது அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்டு இருந்தால், அதன் விலை வீழ்ச்சியடையாது. குறைவாக விற்கப்பட்டு தயாரிப்பை நிறுத்தி இருந்தால், அதன் விலையும் குறைவாகத்தான் இருக்கும்.

கார் வாங்கும்போது..!

பழைய கார் வாங்கும்போது இரண்டு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒன்று, காரின் ஆர்.சி. புத்தகம், இன்ஷூரன்ஸ் பாலிஸி ஆகிய ஆவணங்கள். இன்னொன்று, காரின் உண்மையான கண்டிஷன். அதாவது, எத்தனை கி.மீ ஓடியிருக்கிறது? காரின் பாகங்கள் எப்படி இருக்கிறது என்பது மாதிரியான விஷயங்கள்.

நீங்கள் வாங்குகிற காரின் ஆர்.சி புத்தகம் ஒரிஜினலாக இருக்க வேண்டும். மறுபிரதியாக (டூப்ளிகேட்) இருக்கும்பட்சத்தில், ஒரிஜினல் எங்காவது அடமானத்தில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் விழிப்பாக இருங்கள். காரில் உள்ள இன்ஜின், சேஸி எண்கள், கலர் ஆகியவற்றை ஆர்.சி புத்தகத்தில் இருக்கிற விபரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, இரண்டும் ஒன்றாக இருக்கிறதா என்று ஊர்ஜிதம் செய்துகொள்ளுங்கள். கடனுதவி வாங்கிய 'எண்டார்ஸ்மென்ட்' ஆர்.சி புத்தகத்தில் இருந்தால், அது ரத்து செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை அவசியம் சரிபார்க்க வேண்டும். காரின் சர்வீஸ் ரெக்கார்டுகளை ஆராய்ந்து பார்த்தால், காரை எப்படிப் பராமரித்து இருக்கிறார்கள் என்பதும் தெரிந்து விடும்.

பெரிய விபத்தில் சிக்கி சேதமடைந்த காரை, சரிசெய்து இருக்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். பானெட், கதவுகள், பின்புறக் கதவு (டிக்கி) ஆகியவற்றைத் திறந்து பேனல்கள் இணைக்கப்பட்டு இருக்கும் பகுதியை உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்கள். அவை ஒரிஜினல் அளவுக்கு மாற்றப்பட்டு இருந்தாலும் கண்டுபிடித்துவிட முடியும். இதில் உள்ள ஒரிஜினல் பன்ச் மார்க்குகள் மாறி இருக்கும். இன்ஜினைப் பிரித்து சர்வீஸ் செய்திருந்தால், கேஸ்கட் ஒட்டப் பயன்படுத்திய பசை இருக்கும். இன்ஜினில் உள்ள ஸ்டட் பாக்ஸில் பன்ச் மார்க் இருக்காது. அதே போல், காரை இயக்கும்போது அதிகமாகக் கரும்புகை வந்தாலோ அல்லது வெண்மையாக புகை வந்தாலோ, இன்ஜினில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.

காரின் வெளித்தோற்றம் பளபளவென புதிதாக இருந்தால், அது அதிகம் பயன்படுத்தாத புதிய கார் என நம்பிவிடாதீர்கள். ஏனென்றால், ஆயிரம் ரூபாய் செலவில் பாலீஷ் செய்து, பல ஆயிரங்கள் கூடுதலாக விற்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், எதிலாவது மோதியிருந்தால் அந்த இடத்தை 'டிங்கர்' வேலை செய்து பெயின்ட் தடவி இருப்பார்கள். நல்ல வெளிச்சத்தில் வெவ்வேறு கோணங்களில் பார்த்தால்தான் இந்த கலர் வித்தியாசம் தெரியும். அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தால் வழவழப்பு வித்தியாசமாக இருக்கும்.

என்னதான் உண்மையைச் சாமர்த்தியமாக மறைத்து இருந்தாலும், விபத்தில் சிக்கிய காரைக் கண்டுபிடிக்க ஒரு எளிமையான இன்னொரு வழியும் இருக்கிறது. கார் விபத்துக்குள்ளாகி இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்யப்பட்டு இருந்தால், அடுத்த ஆண்டு பாலிஸியில் கூடுதலான பிரீமியம் தொகை வசூலித்து இருப்பார்கள்.

அதேபோல், ஸ்பீடோ மீட்டரைத் திருத்தி குறைந்த அளவு கி.மீ ஓடியிருப்பதாகக் காட்டி விற்கும் முயற்சியும் இந்த வியாபாரத்தில் நடக்க சாத்தியம் உண்டு. இதை டயர்களின் தேய்மானம், இன்ஜின் பிக்-அப் ஆகியவற்றோடு ஒப்பிட்டுக் கண்டுபிடிக்க முடியும். அதுமட்டுமில்லாமல், ஓடோ மீட்டரைத் திருத்தி இருந்தால், ஸ்பீடோ மீட்டரின் முள் பாதிக்கப்பட்டுவிடும். அதனால், கார் ஓடும்போது ஸ்பீடோ மீட்டர் முள் சீராக வேகத்தைக் காட்டாமல் முன்னும் பின்னுமாக அதிரும். கார், 10,000 கி.மீ மட்டுமே ஓடியதாகச் சிலர் பொய் சொல்லக்கூடும். ஆனால், காரின் டயர்களைப் பார்த்தால் பாதி தேய்ந்து இருக்கும். பழைய டயர்களைக் கழற்றிவிட்டு, புதிய டயர்களைப் பொருத்தியிருந்தால், அதையும் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். சர்வீஸ் புத்தகத்தில் இருக்கும் டயரின் வரிசை எண்ணும் தற்போது காரில் இருக்கும் டயரின் எண்ணும் ஒன்றுதானா எனச் சோதிப்பது சுலபம்தானே!

குறிப்பிட்ட ஒரு மாடல் கார், மார்க்கெட்டில் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் உதிரி பாகங்களின் விலையும் குறைவாகக் கிடைக்கும். இதனால், பராமரிப்புச் செலவும் குறைவாக இருக்கும். எண்ணிக்கையில் குறைவாக உள்ள காருக்கு அதிகமாக உதிரி பாகங்கள் தயாரிக்க மாட்டார்கள். ஆகவே, பராமரிப்புச் செலவு சற்றுக் கூடுதலாக இருக்கும்!

மாருதி ஆல்ட்டோ ஹூண்டாய் சான்ட்ரோ மாருதி எஸ்டீம் டாடா இண்டிகா மாருதி ஜென்
மாருதி ஸ்விஃப்ட் ஹோண்டா சிட்டி ஸ்கோடா ஆக்டேவியா டொயோட்டா இனோவா ஹூண்டாய் ஆக்ஸென்ட்

பழைய கார் மாதிரி பழைய பைக்குக்குப் பெரிய மார்க்கெட் கிடையாது. சொல்லப்போனால், பைக்குகளைப் பொறுத்தவரை புதிய பைக்குகளை வாங்கிவிடுவதே நல்லது. இருப்பினும், உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களுக்கு உட்பட்ட புது பைக் வாங்குவது நல்லது. அப்படி யூஸ்டு பைக் வாங்கும்போது நினைவில் நிறுத்த வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ...

யூஸ்டு பைக் வாங்குபவர்கள் முதலில் பட்ஜெட்டை முடிவு செய்துவிட வேண்டும். கார்களுக்கு இருப்பது போன்று, பழைய பைக்குகளுக்கு எந்த வங்கியும் கடன் தருவது கிடையாது. அதே போல், பைக்குகள் வாங்குவதற்கென்று பிரத்யேக ஷோரூம்களும் இல்லை. தனியார் ஃபைனான்ஸுகளைத் தவிர இந்த பைக்குகளுக்குக் கடன் தருவார் யாரும் இல்லை. அதனால், முழுப் பணத்தையும் கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்!

பட்ஜெட்டை இறுதி செய்த பிறகு என்ன பைக் வேண்டும் என் று முடிவு செய்யுங்கள். ஸ்கூட்டர், 125 சிசி, 150 சிசி என மார்க்கெட்டில் ஏகப்பட்ட பைக்குகள் உள்ளன. இதில் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகி வெற்றி பெற்ற மாடல்களை வாங்குவதே நல்லது. குறிப்பாக, தற்போதும் விற்பனையில் இருக்கும் பைக்குகளை வாங்கினால், ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் சர்வீஸுக்கு அலைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது. கள்ளத்தனமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கும் பைக்குகளை வாங்காமல் ஒதுங்கிவிடுவதே நல்லது. காரணம், இதன் ஆவணங்கள் சரியாக இருக்காது.

பைக்கை முடிவு செய்த பிறகு கூடுமானவரை நண்பர்கள், தெரிந்தவர்களிடம் இருந்து பைக்கை வாங்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு பைக்குகளைப் பற்றி நல்ல பரிச்சயம் இல்லை என்றால், உங்களுக்குத் தெரிந்த மெக்கானிக்கை பைக் வாங்க உடன் அழைத்துச் செல்லுங்கள். வாங்கும் முன் பைக்கில் இருக்கும் இன்ஜின் நம்பரும், சேஸி நம்பரும் ஆர்.சி புத்தகத்தில் இருக்கும் விபரங்களுடன் இணைந்து போகிறதா என்று கவனியுங்கள்.

பைக்கை விற்பனை செய்பவர் அரிச்சந்திரன் மாதிரி, பைக் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால், விபத்துக்குள்ளான பைக்கா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க சில யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

ஸ்க்ராட்ச் ஆன ஹெட் லைட், கண்ணாடி, ஹேண்டில் பார் முனை, வளைந்து போயிருக்கும் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர், திருகிப் போயிருக்கும் பிரேக் மற்றும் கியர் பெடல்களைப் பார்த்தாலே இது விபத்துக்குள்ளான பைக் என்று புரிந்துகொள்ளுங்கள். அதேபோல், பெட்ரோல் டேங்க்கை நன்றாகத் தடவிப் பாருங்கள். சமமாக இல்லாமல் இருந்தால், அடிப்பட்டு வேலை செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படிப்பட்ட பைக்குகளின் விலையை நன்றாகக் குறைத்துப் பேசுங்கள்.

பைக்கின் சென்டர் ஸ்டாண்டைப் போட்டு, ஹேண்டில் பாரை நேராக வைத்துவிட்டு தூரமாகப் போய் பைக்கைப் பின்பக்கத்தில் இருந்து பாருங்கள். பைக்கைப் பின்னால் இருந்து பார்க்கும்போது, முன் மற்றும் பின்பக்க வீல்கள் ஒரே நேர்க்கோட்டில் சரியாக இருக்கிறதா என்று கவனியுங்கள்.

இன்ஜினில் ஆயில் கசிவு இருக்கிறதா, கேஸ்கட் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். இன்ஜினில் வேலை என்றால் செலவு அதிகமாகும்.

சஸ்பென்ஷன் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு, பைக்கின் 'ஃபுட் ரெஸ்ட்டில்' ஏறி நின்றுகொண்டு மற்றொருவர் பைக்கை பிடித்துக்கொள்ள, நீங்கள் ஹேண்டில் பாரில் கைவைத்து பைக்கை வேகமாக ஒரு அழுத்து அழுத்துங்கள். சஸ்பென்ஷன் ஸ்மூத்தாக அழுந்தி மீண்டும் நிமிர்கிறதா என்பது இதில் தெரிந்துவிடும்.

பெரிய டயர், கலர் கலரான ஏர் ஃபில்டர், டர் புர் சத்தம் போடும் சைலன்ஸர் பொருத்தப்பட்ட பைக்குகளுக்காக அதிக காசு கொடுக்காதீர்கள். பெரிய சைஸ் டயர்கள் மைலேஜை உறிஞ்சிவிடும். சஸ்பென்ஷன் மற்றும் ஸ்ப்ராக்கெட்டையும் இவை கெடுத்து விடும்.

ஸ்போக் வீல் கொண்ட பைக்குகளில் வீல் ரிம்கள் ஏதும் வளைந்து இருக்கிறதா என்று பாருங்கள். அலாய் வீல் மாற்றுவதற்கு அதிகம் செலவாகும். அதனால், அலாய் வீல்களில் ஏதும் விரிசல் இருக்கிறதா என்று முழுமையாகச் சோதித்துப் பாருங்கள்.

பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். முதலில் பைக் சாவி ஒரிஜினலா என்று பார்ப்பது அவசியம். செல்ஃப் ஸ்டார்ட் பைக்குகளில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பட்டன் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள். அப்படி வேலை செய்யாத பட்சத்தில் பேட்டரியை மாற்றித் தரச் சொல்லுங்கள். அல்லது பேட்டரிக்கான முழு காசையும் பைக்கின் விலையில் குறைத்துக்கொள்ளுங்கள். பேட்டரியால் பிரச்னை இல்லையென்றால், ஸ்டார்ட்டர் மோட்டாரில் பிரச்னை இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதையும் சரி பாருங்கள்.

லைட், ஹாரன், இண்டிகேட்டர்கள், ஸ்பீடோ, ஓடோ, டிரிப் மீட்டர்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள்.

இதுதான் உங்கள் பைக் என்று முடிவெடுத்துவிட்ட பிறகு, பைக்கை அந்த பைக் தயாரிப்பாளரின் சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுபோய் என்னென்ன பாகங்கள் மாற்ற வேண்டியது இருக்கும். அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். காரணம், இந்தத் தொகையை அடிப்படையாக வைத்து நீங்கள் பைக்கின் விலையை மேலும் குறைக்க முடியும்.

என்னென்ன வேண்டும்?

1. ஃபார்ம் 28: பைக்கை வாங்குபவர், விற்பவரின் ஆர்டிஓ வட்டாரத்தில் இருந்து வெளியிடத்தில் இருக்கிறார் என்றால், ஃபார்ம் 28-ஐ வாங்கி பைக்கை ரீ-ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.

2. ஃபார்ம்-29: இதில், பைக்கை விற்பவர், 'இந்த பைக்கை நான் விற்றுவிட்டேன்' என்று கையெழுத்திட வேண்டும்.

3. ஃபார்ம்-30: இதில் பைக்கை வாங்குபவர் - விற்பவர் இருவருமே பைக் வாங்கியதையும், விற்றதையும் உறுதி செய்து கையெழுத்திட வேண்டும்.

4. புதிய ஆர்சி புத்தகத்துக்கு விண்ணப்பம் செய்யுங்கள் (இப்போது ஸ்மார்ட் கார்டு வசதிகூட இருக்கிறது).

5. பைக் இன்ஷ¨ரன்ஸை உங்கள் பெயருக்கு மாற்றுங்கள்.

6. வாகன வரி செலுத்தியதற்கான ரசீதை, விற்பனை செய்பவரிடம் இருந்து மறக்காமல் வாங்குங்கள்.

 


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: